எல்லாம் தலைவிதி என்று நினைத்துக் கொண்டு பலர் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். இன்றும் கிராமப் புறங்களில் மக்கள், ”எல்லாம் தலையில என்ன எழுதி இருக்கோ அதன்படிதான் நடக்கும். அதைவிட்டுட்டு நாம நெனக்கிறபடியெல்லாம் நடக்குமா?” என்று மக்கள் புலம்புவதையும் பார்க்கலாம். படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை அனைவரும் விதியை நம்பிக் கொண்டு வாழ்கின்றனர்.
விதியை வெல்ல முடியாதா? விதியை வென்றவர்கள் யாராவது இருக்காங்களா? அப்படீங்கற கேள்விக்கு விதியை மதியால் வெல்லலாம் என்ற கதை வழக்கில் வழங்கி வருகின்றது.
ஒரு ஊருல பெரியவர் ஒருத்தர் வாழ்ந்து வந்தார். அவர் ரெம்ப நல்லவர். இல்லைன்னு யாராவது வந்து எதையாவது கேட்டா ஒடனே அவங்களுக்கு அதைக் கொடுத்துருவாரு. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டாரு. அவரு நெலம்நீச்சுன்னு நல்லா வசதியா வாழ்ந்துக்கிட்டு வந்தாரு.
அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவருக்கு இறைவனருளால் நமக்கு நல்லா ஒரு மகன் பிறந்து இருக்கான்னு மகிழ்ச்சி. அவனுக்கு மார்க்கண்டன்னு பேருவச்சாரு. ஆசையா வளத்தாரு. கூடுதலா தான தருமங்களச் செஞ்சாரு.
அவருக்கு மகனோட சாதகத்தைப் பாத்து வச்சிக்கிருவோம்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அதனால அந்த ஊருலேயே நல்லா சாதகம் பாக்குற ஒருத்தருக்கிட்டப் போயி மகனோட சாதகத்தைக் கொடுத்தாரு. சாதகத்தப் பாத்த சோசியருக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. என்னடா இப்படிப்பட்ட நல்லவருக்குப் பொறந்த பையனோட சாதகம் சரியில்லாம இருக்கேன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டே இருந்தாரு.
சோசியக்காரரு சாதகத்தையே பாத்துக்கிட்டு இருந்ததைப் பாத்துட்டு, “என்ன சோசியக்காரரே எம்பையனோட சாதகம் எப்படி இருக்கு? எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்கன்னு” கோட்டாரு அந்தப் பெரியவரு.
அதக் கேட்ட சோசியரு, “ஐயா நானும் எத்தனையோ சாதகங்களைப் பாத்துருக்கோன். ஆனா இந்த மாதிரி பாவப்பட்ட சாதகத்தைப் பாத்ததே இல்லை. ஒங்க பையன் பிற்காலத்துல ரொம்பக் கஷ்டப்படப் போறான். அவன் நல்லாப் படிப்பான் எல்லாஞ்செய்வான். ஆனா கஷ்ட சீவனந்தான் நடத்துவான் அப்படித்தான் இருக்குன்னு” பட்டுன்னு சொல்லிப்புட்டாரு.
அதக் கேட்ட அந்தப் பெரியவருக்கு மனசு கலங்கிருச்சு. இருந்தாலும் அதக் காட்டிக்காம எல்லாம் இறைவனோட செயல் அப்படின்னு நெனச்சுக்கிட்டு வீட்டுக்குப் போனாரு. யாருக்கிட்டயும் எதுவும் பேசல, சொல்லவும் இல்ல. இறைவன் விட்டவழின்னு நெனச்சிக்கிட்டு இருந்தாரு.
இப்படி இருக்கயில ஒருநாளு அந்தப் பெரியவரு திடீர்னு இறந்துட்டாரு. காலமும் ஓடிக்கிட்டே இருந்துச்சு. பையனும் கலியாணமாகி நாலஞ்சு பிள்ளைகளுக்குத் தகப்பனாயிட்டான். சொத்துப்பத்தெல்லாம் போயிருச்சு. இவன் படிச்ச படிப்புக்கேத்த வேலை கெடைக்கல. எந்த வேலைக்குப் போனாலும் அவன் விதி அவன அங்க இருக்க விடல பசுமாட்ட வச்சிப் பால்கறந்து வித்துக் குடும்பத்தக் காப்பாத்துனான். வருமானம் போதல. கைக்கும் வாய்க்குமே சரியா இருந்துச்சு.
ஊரே அவனப் பாத்து இரக்கப்பட்டுச்சு. வள்ளல் மகனோட வாழ்க்கை இப்படியா அமையணும்னு உமுறுக் குடிச்சது. அவனும் அந்த வறுமையான வாழ்க்கையிலயும் தன்னால முடிஞ்ச ஒதவிகள மத்தவங்களுக்குச் செஞ்சிக்கிட்டு இருந்தான்.
இப்படி இருக்கயில அந்த ஊருக்கு ஒரு சாமியாரு வந்தாரு. ஊருக்குள்ள வந்தவரு இவன் வீட்டுக்கும் வந்தாரு. தன்னோட வீட்டுக்கு வந்த சாமியாருக்கு எல்லாவிதமான பணிவிடைகளையும் வள்ளலோட மகன் செஞ்சான்.
சாமியாரு அவனோட பணிவைப் பாத்துட்டு அவனோட வறுமைக்குக் காரணம் என்னன்னு கண்டுபிடிக்கணும்னு நெனச்சி அங்க தங்குனாறு. அவனோட வறுமைக்குக் காரணம் அவனப் படைச்ச விதிதான்னு கண்டுபிடிச்சாரு.
பால்மாட்ட வச்சித்தான் அவன் பிழைப்பு நடத்தணும்னு விதி இருக்கு அப்படீங்கறதத் தெரிஞ்சிக்கிட்டாரு. இந்த விதிய மதியால வெல்லணும். வள்ளலோ மகன் வள்ளல் வாழ்ந்த வாழ்க்கைய வாழணும்னு நெனச்சிக்கிட்டு, வள்ளலோட மகனக் கூப்பிட்டு, “மகனே நாஞ்சொல்றத மட்டும் நீயி கவனமாக் கேட்டுச் செய். வேற எதையும் செய்யாதே. மறுக்காதே. ஏன்னும் கேக்காத. நான் சொல்றதத் தட்டாமச் செஞ்சிக்கிட்டே இரு. இப்ப ஒன்னோட மாட்ட வித்துரு” அப்படீன்னாரு.
அதக் கேட்ட வள்ளலோட மகன், “ஐயையோ நான் மாட்ட வித்துட்டு என்ன சாமி பண்றதுன்னு” கேட்டான். அதுக்குச் சாமியாரு, “ஒன்னப் படைச்சவன் எல்லாத்தையும் பாத்துக்குருவான். நான் சொன்னதை மட்டும் செய்” அப்படீன்னு சொன்னாரு.
வள்ளலோட மகனும் சரின்னுட்டு இருந்த ஒத்த மாட்டையும் கன்னுக் குட்டியையும் வித்துட்டான். வித்த காசில வீட்டுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிப் போட்டுச் சாப்பிட்டான். மறுநாளு சாப்பாட்டுக்கே வழியில்ல. சரி இராத்திரித் தூங்குவோம் காலையில பாத்துக்குவோம்னு நெனச்சிக்கிட்டு பேசாமத் தூங்கிட்டான்.
மறுநாளு காலையில மாடுங் கன்னும் கத்துற சத்தத்தக் கேட்டுட்டு எந்திருச்சு வீட்டுக்குப் பின்னால போயிப் பாத்தான். ஒரு பசுமாடும் கன்னுக்குட்டியும் அங்க கட்டிக் கிடந்தது. அவனுக்கே ஆச்சரியம். அன்னைக்குக் காலையில அந்தச் சாமியாரு மறுபடியும் வந்தாரு. வந்தவரு வள்ளலோட மகனப் பாத்துட்டு, “தம்பி இந்த மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துரு. இதேமாதிரி ஒவ்வொரு நாளும் வரக்கூடிய மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துக்கிட்டே இரு. என்னன்னு ஏதுன்னு கேக்காதே” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
அவனும் சாமியாரு சொன்னதைப் போல மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துக்கிட்டே இருந்தான். பல நாளா இது நடந்துக்கிட்டே இருந்தது. அவனுக்கு இதெல்லாம் யாரு செய்யிறான்னும் தெரியல. இருந்தாலும் அந்தச் சாமியாரு சொன்னதை அப்படியே செஞ்சிக்கிட்டு வந்தான்.
வள்ளல் மகனப் பிடிச்சிருந்த விதிக் கடவுளுனாலே தெனமும் ஒரு பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் கொண்டு வந்து கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுருச்சு. அதுமட்டுமில்லாம மத்த விஷயத்துல எல்லாம் அந்த விதிக்கடவுளுனாலே கவனஞ் செலுத்த முடியல. சரி இந்தப் பயலுக்கு யாரு சொல்லிக்குடுக்குறான்னு பாத்துட்டு அந்தச் சாமியாருக்கிட்டயே விதிக்கடவுள் போச்சு.
அப்படிப் போன விதிக்கடவுள் அந்தச் சாமியாரப் பாத்து, “ஏஞ் சாமியாரே, அந்தப் பய ஒரு மாட்டோடவும் கன்னோடவும் இருந்து கஷ்டப்படணும்னு விதி இருக்கு. அப்படி இருக்கயில இப்படி நீங்க அவனுக்குச் சூட்சுமத்தச் சொல்லி விதிய மீறலாமா?”ன்னு கேட்டது.
அதக் கேட்ட சாமியாரு, “விதிக்கடவுளே, ஒன்னையக் கும்புடுறேன். ஒரு நல்லவரோட மகன் இப்படிக் கஷ்டப்படக் கூடாதுல்ல. கெட்டவன் கஷ்டப்பட்டா பரவாயில்லை. ஆனா ஒரு நல்லவனும் நல்லவரோட மகனும் கஷ்டப்பட்டா மக்கள் யாரும் தெய்வத்தை நம்ப மாட்டாங்க. தெய்வங்கறது பொய்யி. தெய்வம்னு ஒன்னு இருந்துச்சுன்னா இப்படி நல்லவங்க கஷ்டப்படுவாங்களான்னு நெனக்க ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான் இப்படி நான் செஞ்சேன். நீ இனிமே இந்தப் பயல விட்டுட்டுப் போயிரு. கஷ்டப்படுத்தாத. அப்பத்தான் ஆண்டவன இந்த மக்கள் நம்புவாங்க. நீபாட்டுக்கு அவனுக்குக் கஷ்டத்தக் கொடுத்தியினா யாரும் ஆண்டவன நம்ப மாட்டாங்க. அது மட்டுமில்லாம நானும் அவனுக்கு ஒதவி செய்வேன்” அப்படீனு சொன்னாரு.
இதக் கேட்ட விதிக்கடவுள் கொஞ்சம் யோசிச்சிப் பாத்துச்சு. அவரு சொல்றதும் ஞாயமாப்பட்டது. சரி நாம ஒரு நல்லவரோட மகனும் நல்லவனா இருக்கறபோது அவனச் சிரமப்படுத்தக் கூடாது. நாமளும் வேற வேலையப் பாக்கணும். இதே பொழப்பா இருக்கக் கூடாது. இனிமே இந்தப் பயல விட்டுருவோம்னு நெனச்சிக்கிட்டு சாமியாரப் பாத்து, “நீங்க சொல்றது சரிதான். நான் அவன விட்டுட்டுப் போயிடறேன். ஆனா அவன் கெட்டவனா மாறுனான நான் வந்து அவனப் பிடிச்சிடுக்கிடுவேன். அது மட்டுமில்லாம நீங்களும் அவனுக்கு ஒதவக் கூடாது. நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டத அவனுக்கிட்டயோ மத்தவங்கக்கிட்டயோ நீங்க சொல்லக் கூடாது. இதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா நான் அவன விட்டுட்டுப் போயிடறேன்னு” சொன்னது.
அதுக்குச் சாமியாரும் சரின்னு ஒத்துக்கிட்டாரு. விதிக்கடவுளும் அவன விட்டுப் போயிருச்சு. விதிக்கடவுள அந்தச் சாமியாரு மதியால ஜெயிச்சுட்டாரு. அதுக்குப் பெறகு சாமியாரு வள்ளல் மகன் வீட்டுக்குப் போயி நீ இனிமே நல்லா இருப்பே. ஒங்க அப்பா மாதிரி நீயும் பலபேருக்கு ஒதவி செய்யி. மேலும் மேலும் ஓங்கிட்ட செல்வம் பெருகும். மத்தவங்களுக்கு எந்தக் காரணங் கொண்டும் ஒதவறத நிறுத்திடாத. ஒனக்குக் கஷ்டமே வராது. நான் இனிமே வரமாட்டேன். போறேன்னு” சொல்லிட்டு அவன வாழ்த்திட்டுக் கௌம்பிட்டாரு.
அந்த வள்ளலோட மகனுக்கு எதுவும் புரியல. அவனுக்குப் பணத்து மேல பணமாச் சேந்துச்சு. அவனும் அதையெல்லாம் தனக்குன்னு வச்சிக்காம பலருக்கும் கொடுத்து ஒதவி செஞ்சான். அந்த வள்ளலப் போல இவனும் நல்ல பேரு எடுத்தான். அடுத்தவங்களுக்கு ஒதவக் கூடிய மனசும் செயல்பாடும் இருந்துச்சுன்னா விதியக்கூட வெல்லலாங்கறதுக்கு இந்தக் கதையச் சொல்வாங்க...