ஒரு ஊருல பக்கத்துப் பக்கத்து வீட்டுல ரெண்டுபேரு இருந்தாங்க. அதுல மூத்தவ ஒருத்தி இருநூறு கோழி வச்சிப் பண்ணையா வளத்துக்கிட்டு வந்தா. பக்கத்துல இருந்த சின்னவ பத்துக்கோழி வச்சி வளத்துக்கிட்டு இருந்தா. இதுல மூத்தவ பேராசைக்காரி.
தன்கிட்ட இருக்கற கோழியை விடப் பக்கத்து வீட்டுல சின்னவ வளக்கற கோழிமேல அவளுக்கு ஒரு கண்ணு. அவளுக்கு எப்படியாவது சின்னவளோட கோழிகள்ள ஒன்னையாவதுத் புடிச்சித் தின்னுப்புடனும்னு சமயம் பாத்துருந்தா.
அப்ப ஒருநாளு சின்னவ சந்தைக்குப் போயிருந்தா. இதப் பாத்த பக்கத்து வீட்டுல இருந்த மூத்தவ இதுதான் சமயம்னு நெனச்சிக்கிட்டு சின்னவ வீட்டுக் கோழிய ஒன்னப் புடிச்சி சமைச்சி ருசியாச் சப்புட்டுட்டா. சந்தைக்குப் போயிட்டு வந்த சின்னவ கோழிகள அடைக்கிறதுக்காகப் பார்த்த போது ஒரு கோழியைக் காணோம்.
அவளும் தட்டுத் தட்டா ஒவ்வொரு இடமாப் போயித் தேடிப் பார்த்தா... கோழி அகப்படல. பக்கத்து வீட்டுல இருந்த மூத்தவ வீட்டுல கோழி அடிச்சிக் கொழம்பு வச்ச வாசனை வந்தது. சின்னவ இது மூத்தவ செஞ்ச வேலைதான்னு நெனச்சிக்கிட்டா. மூத்தவகிட்ட வந்து ஏங்க்கா என்னோட கோழியத் திருடிச் சமைச்சிச் சாப்புட்டே. இது ஒனக்கே நல்லா இருக்கான்னு கேட்டா.
அதுக்கு மூத்தவ, “அடிபோடி இவளே... ஏன்டி ஏங்கிட்ட எத்தனை கோழி இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு உன் வீட்டுக் கோழியத்தான் வந்து புடிச்சிக் கொழம்பு வச்சிச் சாப்புடறனாக்கும். இந்த மாதிரியெல்லாம் பேசிக்கிட்டுத் திரியாதே.. ஆமா” அப்படீன்னு பேசி மெரட்டுனா.
உடனே சின்னவ பஞ்சாயத்தாருக்கிட்டப் போயிச் சொன்னா. பஞ்சாயத்துப் பெரியவங்களும் பெரியவளக் கூப்பிட்டுக் கேட்டாங்க.
அதுக்குப் பெரியவ, ‘‘ஏங்க நான் இருநூறு கோழிகள வச்சி வளர்த்துக்கிட்டு வர்றேன். இவ வீட்டுக் கோழிய நான் ஏன் புடிக்கப் போறேன். சத்தியமா நான் திருடித் திங்கல. அவ என் மேல வீண் பழியப் போடறா. அத நம்பி நீங்க என்னையக் கூட்டிக்கிட்டு வந்து விசாரிக்கிறீங்களே...” அப்படீன்னு கன்னாப்பின்னான்னு சத்தம் போட்டா.
பஞ்சாயத்தாருக்கு என்னடா இவ செய்யிறதையும் செஞ்சிப்புட்டு இந்தமாதிரி பேசறாளேன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. சரி போம்மா நீன்னு சொன்னாங்க. மூத்தவளும் சந்தோஷமாப் போனா.
அப்பப் பஞ்சாயத்துப் பெரியவரு, “கோழி திருடித் தின்னவளுக்கு கொண்டையில இருக்காம் மயிருன்னு” சொன்னாரு. மூத்தவ போயிக்கிட்டு இருந்தவ, ஆஹா நம்ம தலையிலதான் கோழி மயிரு ஒட்டியிருக்கோ அப்படீன்னு தலையத் தடவிப் பார்த்தாளாம்.
இதைப் பாத்த பஞ்சாயத்துத் தலைவரு, அவளக் கூப்புட்டு, “நீதாம்மா கோழியத் திருடியிருக்க. மரியாதையாக் கோழிக்கானப் பணத்தைக் கொடுத்துருன்னு” சொன்னாரு.
மூத்தவளும், “அடடா நாம செஞ்ச தப்பைக் கண்டுபிடிச்சிட்டாங்களேன்னு பஞ்சாயத்தாரு போட்ட அபராதத்தைக் கட்டிப்புட்டு மன்னிப்புக் கேட்டுட்டுப் போனா. அப்போதிருந்து இருந்து இப்ப வரைக்கும், "கோழி திருடித் தின்னவ கொண்டையில இருக்காம் மயிருங்கற கதையாவுள்ள" இருக்குங்கற பழமொழி இந்தப் பக்கம் வழங்கி வருது...