ஒவ்வொருத்தரும் கெடைக்கிற வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கணும். அப்படிப் பயன்படுத்திக்கிறவங்க வாழ்க்கையில முன்னுக்கு வந்தர்றாங்க. அதுலயும் புத்திசாலி எந்தச் சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்கிறான். அவன் எதையும் வீணடிக்கிறது இல்ல. இதப்பத்தின ஒரு கத இந்த வட்டாரத்துல வழங்கி வருது.
ஒருத்தன் நாடோடியாத் திரிஞ்சிக்கிட்டு இருந்தான். ஒரு இடத்துல இருக்க மாட்டான். ஒவ்வொரு ஊராப் போயிக்கிட்டே இருப்பான். இப்படி இருக்கறதால அவன ஊருல உள்ளவங்க எல்லாரும் நாடோடின்னு அழைச்சாங்க.
இந்த நாடோடி விவரமானவன். எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்குவான். இப்படித்தான் ஒரு நாளு அவன் கால் போன போக்குல போய்க்கிட்டே இருந்தான். தன்னோட ஊரவிட்டுட்டு பல நாளு நடந்தே பல ஊருகளுக்குப் போயிட்டு ஒரு ஊருல வந்து தங்குனான்.
அந்த ஊருல அவனுக்கு யாரையும் தெரியாது. அவன் போன நேரம் ரொம்ப இருட்டிப் போச்சு. என்னடா செய்யிறதுன்னு பாத்தான். இருட்டுக்குள்ள போனா யாரையும் பாத்துப் பேச முடியாது காலையில விடிஞ்ச பெறகு போவோம்னு நெனச்சிக்கிட்டு ஊருக்கு வெளியில ரோட்டோரமா இருந்த ஆலமரத்து அடியில துண்ட விரிச்சிப் போட்டுப் படுத்துட்டான்.
நடந்து வந்த களைப்பும் பசியும் அவன வாட்டியதால அவன் நல்லா அசந்து தூங்கிட்டான். விடிகாலையில அவனச் சுத்தி ஒரே கூட்டமா இருந்துச்சு. அந்தக் கூட்டத்தோட சத்தத் கேட்டுட்டு கண்ண முழிச்சிப் பாத்தான். எதுக்காக நம்மள இவங்கள்ளாம் சுத்தி நிக்கிறாங்க அப்படீன்னு அவனுக்கே புரியாம இருந்துச்சு. தூக்கத்துல இருந்து எந்திருச்சி ஒக்காந்துக்கிட்டு அங்க உள்ளவங்களப் பாத்துக்கிட்டு இருந்தான்.
அப்ப அந்தக் கூட்டத்துல இருந்த ஒரு பெரியவரு, ‘‘தம்பி நீங்கதான் இந்த நாட்டுக்கு ராசா. இந்த நாட்டுக்கு ராசா இல்ல. அப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சோம். இந்த நாட்டுல உள்ளவங்கள்ள முக்கியமானவங்க எல்லாரும் சேந்து அதிகாலையில இந்த ஆலமரத்துக்கு வந்து பாப்போம் அப்பதைக்கு எங்க கண்ணுல யாரு மொத மொதல்ல தென்படுறாங்களோ அவங்கள இந்த நாட்டுக்கு ராசாவா ஆக்கிடுவோம். அதுமட்டுமில்ல. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த நாட்டுக்கு ரெண்டு வருஷம் வரைக்கும் ராசாவா இருப்பாரு. அதுக்குப் பெறகு அவர மேளதாளத்தோட பக்கத்துல இருக்கற தீவுல கொண்டுபோயி விட்டுட்டு வந்துருவோம். அந்தத் தீவுக்குப் போனவங்க யாரும் திரும்பி வரமுடியாது. அங்கேயே இருந்து செத்துப்போயிடுவாங்க. அதனால நாங்க திரும்பவும் இன்னொருத்தர இப்படி ராசாவாத் தேந்தெடுப்போம். அப்படித்தான் ஒன்னையும் ராசாவாத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வா எழுந்திரு. அரச பதவிய ஏத்துக்க’’ அப்படீன்னு சொன்னாரு.
அவனும் நிலைமைய யூகிச்சிக்கிட்டு சரி ரெண்டு வருஷந்தானே நாம ராசாவா இருந்து பாப்போம்னுட்டு எந்திருச்சி அவங்களோட அரண்மனைக்குக் கிளம்பினான். அவன ராசாவ பட்டாபிஷேகம் பண்ணி வச்சாங்க. அவன் சந்தோசமா இருந்தான். தன்னால முடிஞ்ச நல்ல காரியங்கள எல்லாம் மக்களுக்குச் செஞ்சான். இப்படியே விருவிருன்னு ரெண்டு வருஷம் ஓடிப் போயிருச்சு.
இவனத் தீவுக்கு அனுப்பி வைக்கிற நாளு வந்துருச்சி. அந்த நாட்டுல இருக்கற முக்கியமானவங்க எல்லாரும் சேர்ந்து அரண்மனைக்கு வந்தாங்க. வந்தவங்க அவனத் தீவுக்குக் கௌம்பச் சொன்னாங்க. அவனும் சரின்னுட்டு ரெம்பச் சந்தோஷமா அவங்க சொன்ன தீவுக்குக் கௌம்புனான். அவங்களுக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு.
என்னடா எல்லாரும் அழுது பொலம்புவாங்க. இவன் மட்டும் அழுகவும் இல்ல ஒண்ணும் செய்யல. ரொம்ப சந்தோஷமாக் கௌம்புறான்னு நெனச்சிக்கிட்டு சரி இவன் ஏதோ பைத்தியக்காரன் போல இவனுக்கு அந்தத் தீவப் பத்தி தெரியாது போல இருக்கு. இவனக் கொண்டுபோயி விட்டுட்டு வந்துடுவோம்னு அவன ஒரு கப்பல்ல ஏத்திக்கிட்டு அவங்களும் ஏறிக்கிட்டு மேளதாளத்தோட கௌம்பினாங்க.
அந்தத் தீவும் வந்துருச்சி. இந்த நாடோடியாகிய மன்னனும் மேளதாளத்த ரசிச்சிகிட்டு வந்தான். கப்பல்ல இருந்து எறங்குனான். அந்த நாட்டோட முக்கியஸ்தர்களும் அவன் எறங்கறதப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அப்படி இறங்குறவன அந்தத் தீவுல இருக்கறவங்க எல்லாரும் வரவேற்றாங்க.
வந்தவங்களுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இந்தத் தீவுல ஆளரவமே இல்லாம இருக்கும். இப்ப இந்தத் தீவு சொர்க்கபுரியாவுள்ள இருக்கு. இத யாரு இப்படி மாத்துனான்னு புரியாம பேந்தப் பேந்த விழிச்சாங்க. இந்த நாடோடி ராசாவ அந்தத் தீவுல உள்ள மக்கள் வரவேற்று அழைச்சிக்கிட்டுப் போனாங்க. அந்த நாடோடி கப்பல்ல வந்தவங்களையும் அந்தத் தீவுக்கு அழைச்சான்.
அவங்களும் எறங்கிப் போயி அவங்கிட்ட நின்னு அந்தத் தீவப் பாத்தாங்க. அருமையான வீடுக, பெரிய அரண்மனை, அப்படி இப்படின்னு அந்தத் தீவு அப்படியொரு அழகா இருந்துச்சு. ஆச்சரியமாப் பாத்த அவங்களப் பாத்துட்டு அந்த நாடோடி ராசா, என்னங்க பாக்குறீங்க இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னுதானே நீங்க நெனக்கிறீங்க. நீங்க நெனக்கிற மாதிரி நான் ரெண்டு வருசமா வீணாப் பொழுதப் போக்கல. நீங்க அந்தத் தீவப் பத்தி என்கிட்டச் சொன்னவுடனேயே கைதிகளா சிறையில இருந்தவங்கள வச்சி இந்தத் தீவ சீர்படுத்தி வீடு அரண்மனையெல்லாம் கட்டவச்சி இங்க புதுசா ஒரு நாட்டையே உருவாக்கிட்டேன். இங்க வந்து உழைச்ச கைதிகள இங்க கொண்டுவந்து குடியேத்துனேன். இந்தத் தீவுக்கு வர விரும்பியவங்களயும் கொண்டுவந்து குடிவச்சேன். இது எல்லாம் ரெண்டு வருஷத்துல முடிச்சிட்டேன். அதனாலதான் நீங்க தீவுக்குக் கௌம்பு அப்படீன்னு சொன்னவுடனே நானும் சந்தோஷமாக் கௌம்புனேன். இதுக்கு முன்னால இருந்தவங்க எல்லாம் ரெண்டு வருஷத்தையும் நல்லா உண்ணுதின்னுட்டு மகிழ்ச்சியா இருந்து வீணாப் பொழுதப் போக்கிட்டு இங்க வந்து செத்துப் போனாங்க. ஆனா நான் அப்படி இல்லாம இந்தத் தீவுக்கு இரகசியமா ஒவ்வொரு முறையும் வந்து வந்து எல்லா வேலைகளையும் செஞ்சி முடிச்சிட்டேன். நாடோடியா இருந்த என்னைய இப்படி ராசாவா ஆக்குன ஒங்களுக்கு என்னோட நன்றி. நீங்க எல்லாரும் இங்க வந்து சந்தோஷமா இருந்துட்டுப் பெறகு ஒங்க நாட்டுக்குப் போங்கன்னு’’ சொன்னான்.
அவங்களும் ஆஹா இப்படியொரு ஆளா.. இந்தமாதிரி புத்திசாலிய நாம பாத்ததே இல்லியேன்னுட்டு, "ராசா ராசா நீங்க இந்தத் தீவுக்கு மட்டுமில்ல இனிமே எங்களோட நாட்டுக்கும் நீங்கதான் ராசாவா இருக்கோணும். ஒங்கள எங்களோட ராசாவா மீண்டும் தேர்ந்தெடுத்துட்டோம்னு’’ சொன்னாங்க. அவனும் சரின்னுட்டு அந்தத் தீவுல இருந்துக்கிட்டே அந்த நாட்டையும் ஆளா ஆரம்பிச்சிசான். நாடோடியாத் திரிஞ்சவன் தன்னோட புத்திசாலித்தனத்துனால தானும் நல்லா இருந்து தன்னைய நம்புனவங்களுக்கும் நல்லது செஞ்சான்.