ஊருல ஒரு பெரிய சாமியாரு இருந்தாரு. அவரு ரெம்ப நல்லவரு. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனப்பாரு. தன்னால மத்தவங்களுக்கு எப்படியெல்லாம் ஒதவி செய்ய முடியும்ணு நெனச்சி இறைவனக் கும்பிட்டுக்கிட்டு வாழ்ந்தாரு. அவரையும் அந்த ஊருக்காரவுங்களும் பக்கத்து ஊருகள்ல இருந்தவங்களும் கண்கண்ட தெய்வமா நெனச்சி வாழ்ந்துக்கிட்டு வந்தாங்க.
இப்படி இருக்கையில பக்கத்து ஊருக்குப் புதுசா ஒருத்தன் வந்தான். அவன் பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்ததால எல்லாரையும் அவன் மட்டமா நெனச்சான். அவன் நல்லாப் படிச்சவங்கறதால அவன அந்த ஊருல இருந்தவங்க எல்லாரும் நல்லா மதிச்சாங்க. ஆனா அவந்தான் மத்தவங்கள மதிக்காம ஆணவத்தோடு நடந்துக்கிட்டான்.
எல்லாரும் பக்கத்தூரு சாமியாரப் பத்தி ரெம்ப உயர்வாப் பேசுனது இவனோட காதுலயும் விழுந்துச்சு. இப்படி ரெம்பப் புகழ்ற அந்தச் சாமியாரப் போயிப் பாக்கணும்னு அவனும் முடிவு செஞ்சான். மறுநாளு அவன் அந்தச் சாமியாரப் பாக்குறதுக்குப் போனான்.
சாமியாரு அவன அன்போட வரவேற்று பக்கத்துல ஒக்கார வச்சிப் பேசிக்கிட்டிருந்தாரு. அவன் சாமியாரப் பாத்து சில கேள்விகளக் கேட்டுக்கிட்டே இருந்தான். சாமியாரும் சலிக்காம புன்னகை தவழும் முகத்தோடவும் அன்போடவும் பதிலச் சொல்லிக்கிட்டு இருந்தாரு.
ஆனா அவன் தான்தான் எல்லாரையும் விட ரெம்பப் படிச்சவன். உயர்ந்தவன்னு நெனச்சிக்கிட்டே சாமியாருகிட்டப் பேசிக்கிட்டு இருந்தான். அதச் சாமியாரும் கவனிச்சிக்கிட்டே இருந்தாரு. அவன் சாமியாருக்கு எல்லாந் தெரியுமா? இல்ல எல்லாந் தெரிஞ்சமாதிரி அவரு நடந்துக்கிறாரா?ன்னு நெனச்சிக்கிட்டு அவர மட்டந்தட்டுவோம்னு, ‘‘இந்த உலகத்துலேயே உயர்ந்தவரு யாரு? அதேமாதிரி இந்த உலகத்துலேயே தாழ்ந்தவரு யாரு? சொல்லுங்கன்னு’’ கேட்டான்.
அந்தக் கேள்வியக் கேட்ட சாமியாரு, ‘‘உன்னோட கேள்விக்குப் பதில் தேவைன்னா நாஞ் சொல்றதச் செஞ்சிக்கிட்டு வான்னு’’ சொன்னாரு. அதுக்கு அந்தப் பயலும் ‘‘சரி சொல்லுங்க செய்துகிட்டு வர்றேன்னு’’ சொன்னான்.
‘‘ஒன்னைய விட மோசமான ஒன்ன ஏம்முன்னாடி கொண்டு வந்து வையி. இன்னக்குள்ளாற நீயி இதச் செய்யணும். போயி ஒன்னவிட மோசமானதக் கொண்டு வான்னு’’ சொன்னாரு சாமியாரு. இது என்ன பெரிய விஷயமா? இப்பவே போயி கொண்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வேகமாப் போனான்.
அப்படிப் போனவன் நம்மளவிட மோசமானது எதுன்னு யோசிச்சான். அவனோட காலடியில இருந்த புல்லப் பாத்துட்டு நம்மள விட மோசமானது இந்தப் புல்லுதானன்னு நெனச்சிக்கிட்டு அந்தப் புல்லப் புடுங்கறதுக்குப் போனான்.
அப்ப அந்தப் புல்லு அவனப் பாத்துட்டு, ‘‘எதுக்கு என்னய வந்து புடுங்குற? காரணத்தச் சொல்லுன்னு’’ கேட்டது. அதுக்கு அவன், ‘‘இந்த ஒலகத்துல என்னயவிட மோசமானது நீதான் அதனாலதான் ஒன்னையப் புடுங்கப் போறன்னு’’ சொன்னான்.
அதக் கேட்ட புல்லு, ‘‘ஏய் நிறுத்துடா.. ஒன்னயவிட நான் மோசம்னு எப்படி நீ சொல்லலாம். ஒலகத்துலயே உயர்ந்தவன்னு நான்தான். ஏந்தெரியுமா, ஆண்டவன் படைச்ச ஆடு, மாடு, கோழி முயல்னு எல்லாத்தோட பசியையும் நான் போக்குறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் பிறருக்கு ஒதவி செய்றேன். என்னையப் போயி ஒன்னவிட ரெம்ப மோசமானவன்னு நீயி சொல்ற. நீ என்னையத் தொடாத. என்னத் தொட்டியினா அது பாவம். அந்தப் பாவம் என்ன வந்து சேரப்பிடாது. பேசாமாப் போயிருன்னு’’ சொன்னதக் கேட்ட அந்தப் பையன்,
‘‘ச்சே ஒரு புல்லு நம்மளவிட ஒசந்ததா? சரி இதவிட ரொம்ப மோசமான எதுன்னு தேடிப் போவோம்னு’’ நெனச்சிக்கிட்டு மரம், செடி, கொடி, பறவை, புழு, பூச்சின்னு கண்ணுல படற எதையும் விடா அவையெல்லாம் தன்னைவிட ரெம்ப மோசம்னு நெனச்சி அதுகல எடுக்கப் போனபோது அதுக எல்லாம், ‘‘நாங்க எங்களால முடிஞ்சத மத்தவ உயிருங்களுக்குச் செஞ்சிக்கிட்டு இருக்கோம் அதனால எங்களவிட நீயிதான் மோசமானவன் எங்களத் தொடாமப் போயிரு. எங்க கிட்ட வராதன்னு’’ சொல்லிருச்சுக.
இவனுக்குப் பெருத்த அவமானாமாப் போயிருச்சு. என்னடா இது இந்த ஒலகத்துல நம்மள மோசமானதே இல்லையோன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தான். பொழுதும் வேற முடியிற நெலையில இருந்ததால சாமியாரு சொன்னத ஒடனே கொண்டுக்கிட்டுப் போகணும்னு பரபரத்தான் அந்தப் பய. அப்ப அவனோட மனசுக்குள்ளாற ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துருச்சு.
பக்கத்துல மனுசனோட கழிவான ஆயி கெடந்துச்சு. அவன் ஒடனே ஒரு ஓட்டாஞ்சில்ல எடுத்துக்கிட்டுப் போயி இந்த ஒலகத்துலேயே இந்த மனுசக் கழிவுதான் நம்மளவிட மோசம். ஏன்னா இதப்பாத்த ஒடனே மனுசங்க எல்லாரும் மொகத்தச் சுளிச்சிக்கிட்டும், மூக்கப் பொத்திக்கிட்டும் போறாங்க. அதனால இதுதான் மோசமா இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு அத ஓட்டாஞ்சில்லுல எடுக்கறதுக்குப் போனான்.
அப்ப அந்த மனிதக் கழிவான மலம் அவனப் பார்த்துப் பேச ஆரம்பிச்சிருச்சு. ‘‘டேய் அப்படியே நில்லு. என்னையத் தொடாதே. என்னோட இந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம். ஒங்கக்கிட்ட இருந்து வர்றதுக்கு முன்னால நான் எல்லாரும் விரும்பக் கூடிய உணவா இருந்தேன். நீங்க அதச் சாப்பிட்ட பின்னால எல்லாரும் அருவருக்கக் கூடிய ஒன்னா மாறிட்டோம். இப்பக் கூட நான் வண்டு, புழு, பூச்சிகளுக்கு உணவா ஆயிருவேன். திரும்பவும் நீயி என்னத் தொட்டியினா இதவிடக் கேவலமா மாறிப்போயிருவேன். என்னயத் தொடரதுக்கு ஒனக்கு அருகத இல்லை’’ அப்படீன்னு சொன்னது.
அதக்கேட்ட அந்தப் பய வெலவெலத்துப் போயிட்டான். என்னடா தன்னைவிடக் மோசமானதுன்னு எதை நெனச்சமோ அதுவே இப்படி நம்மளக் கேவலமாப் பேசிப்புட்டுது. அப்ப இந்த உலகத்துலேயே ரெம்ப ரெம்ப மோசமானது இந்த மனுசப் பிறவிதானா? ஐயோ இது தெரியாமா நான் மத்தவங்களக் கேவலமா நெனச்சனே! எவ்வளவு ஆணவமா நான் இருந்துட்டேன். எல்லாப் பொருளும் மத்தவங்களுக்கு ஏதோ ஒரு வகையில ஒதவியா இருக்கு. ஆனா இந்த மனுசங்களாகிய நாங்க ஏதாவது ஒரு வகையில மத்தவங்களுக்கு உபத்திரவம் கொடுத்துக்கிட்டு இருக்கமே. இன்னக்கி முழுதும் தேடியும் மனுசனவிடக் கேவலமானதக் கண்டுபிடிக்க முடியலையேன்னு’’ நெனச்சிக்கிட்ட அந்தப் பய சாமியாரப் பாக்கறதுக்காகப் போனான்.
அந்தப் பயலப் பாத்த சாமியாரு, ‘‘என்ன தம்பி நான் சொன்னதக் கொண்டுட்டு வந்துட்டீங்களா? எங்க கொடுங்க’’ அப்படீன்னு சொன்னாரு. அதுக்கு அவன், ‘‘நான் தோத்துப் போயிட்டேன் சாமி. என்னய மன்னிச்சிருங்க. இந்த மனிசப் பிறவியவிட மோசமானது எதுன்னே எனக்குத் தெரியலன்னு’’ சொல்லி நடந்ததெல்லாம் சொல்லிட்டு அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டான்.
அதக் கேட்ட சாமியாரு, ‘‘தம்பி வருத்தப்படாதீங்க. நாம மத்தவங்களுக்கு ஒதவி செய்யிறதுக்காகவும் பயன்படுறதுக்காகவும்தான் ஆண்டவனால படைக்கப்பட்டுருக்கோம். நாம மத்தவங்களுக்குப் பயன்படுறது மாதிரி வாழ்ந்தா மனிதப்பிறவி மாதிரி ஒசந்தது எதுவுமே இல்லை. உலகத்துலயே ரொம்ப ஒசந்தவனும் மனுசந்தான். ரொம்ப மோசமானவனும் மனுசந்தான். அவனோட நடத்தைதான் அவனை ஒயரவும் வைக்குது. கீழானவனாவும் ஆக்குது. இதப் புரிஞ்சிக்கோங்க’’ அப்படீன்னு சொன்னாரு.
அவரோட பேச்சக் கேட்ட அந்தப் பய ஆணவத்தைக் கைவிட்டுட்டு மத்தவங்கள மதிச்சி ஒதவியா வாழ்வேன்னு முடிவு செஞ்சிட்டுக் கிளம்பினான்.