கடல் தண்ணீர் ஏன் உப்புக் கரிக்குது தெரியுமா? அதப்பத்தி ஒரு கதை இந்த வட்டாரத்துல வழங்கி வருது.
அந்தக்காலத்துல ஒரு வியாபாரி இருந்தாரு. அவரு ஒவ்வொரு ஊருக்கும் போயி மக்களுக்கு வேணுங்கறத வாங்கிக்கிட்டுப் போயிக் கொடுத்துட்டு காச வாங்கிக்கிட்டு மறுபடி பொருள வாங்கி வித்துட்டு காச வாங்கிகிக்கிட்டு வருவாரு. இப்படி இருக்கற போது அவருகிட்ட ஒரு கிராமத்துல இருக்கற பெரியவரு ஒருத்தரு வந்து, “ஐயா ஐயா என்கிட்ட ஒங்கக் கிட்ட பொருளு வாங்குறதுக்கு ஏங்கிட்டக் காசு இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு பழங்காலத் திருகை ஒண்ணு இருக்கு. அத வச்சிக்கிட்டு இப்பதைக்குப் பொருளக் கொடுங்க. எனக்குப் பணங் கெடைச்சவுடனே திரும்ப வாங்கிக்கிறேன்னு” சொல்லிப் பொருள்களக் கேட்டாரு.
அந்த வியாபாரியும் அந்தப் பெரியவர் மேல எறக்கப்பட்டு “காசெல்லாம் வேண்டாம். பொருளத் தர்றேன். அதவச்சிக்கோங்க. ஒங்களுக்குப் பணம் எப்பக் கிடைக்குதோ அப்பத் தாங்கன்னு” சொல்லி அந்தத் திருகைய வாங்கிக்காமலேயே பொருளக் கொடுத்துவிட்டு வந்தாரு. அந்த வியாபாரியும் எல்லா ஊருக்கும் போயி பொருள்கள வித்துட்டு எப்பவும் அந்தக் கிராமத்து வழியா வருவாரு. அப்ப அந்தப் பெரியவரு பணம் தானா வந்து கொடுப்பாருன்னு நெனச்சிக்கிட்டே தன்னோட ஊருக்குப் போயிருவாரு.
இப்படிப் பல நாளு ஆயிருச்சு. அந்த வியாபாரி என்னடா அந்தப் பெரியவரு பணங் கொடுக்காம இருக்காரேன்னு நெனச்சிக்கிட்டு, அவரப் பாக்குறதுக்காக அவரோட வீட்டுக்குப் போனாரு. அங்கபோயிப் பாத்தா அந்தப் பெரியவரு ஒடம்புக்கு முடியாமப் படுத்திருந்தாரு. அதப் பாத்த ஒடனே அந்த வியாபாரிக்கு தர்ம சங்கடமாப் போயிருச்சு.
வியாபாரி வந்துருக்காருன்னு தெரிஞ்சவுடனேயே அந்தப் பெரியவரு அந்த வியாபாரிக்கிட்ட பக்கத்துல இருந்த திருகைய எடுத்துக் கொடுத்து, “ஐயா கோவிச்சுக்காதீங்க. என்கிட்ட பணமில்லை. ஒங்களப் பாத்து இந்தத் திருகையக் கொடுக்கலாம்னு நெனச்சேன். அதுவும் முடியாமப் போயிருச்சு. இப்ப இத வச்சிக்கோங்க. இது அதிர்ஷ்டமான திருகை. கேட்ட உடனே உப்பக் கொடுக்கும்”ன்னு சொல்லி அதுக்குரிய மந்திரத்தையும் சொல்லித் திருகையக் கொடுத்தாரு.
அந்த வியாபாரியும் அத வாங்கிக்கிட்டுப் போயி வீட்டுல வச்சி அதப் பார்த்துக் கொஞ்சம் உப்பக் கொடுன்னு கேட்டான். அதக் கேட்டவுடனேயே கரகரன்னு உப்பக் கொடுக்கத் தொடங்கிடுச்சு. திரும்ப மந்திரத்தச் சொன்னவுடனேயே அரக்கறத நிப்பாட்டிடுச்சு.
அதப் பாத்த அந்த வியாபாரிக்கு ஆச்சரியமாப் போயிருச்சு. அன்னையில இருந்து அந்த வியாபரி நெறைய உப்ப வரவழைச்சு வித்து நெறையப் பணம் சம்பாதிச்சான். அந்தப் பணத்தால பலருக்கும் ஒதவி செஞ்சி பேரும் புகழுமா இருந்தான்.
இதப் பாத்த அவனோட வியாபாரம் பாத்த அந்த வியாபாரியோட கூட்டாளி எப்படி இவனுக்குப் பணங்காசு சேந்துச்சு. இவன் நம்மளவிட பேரும் புகழுமா இருக்கானே. இதனோட ரகசியத்தைத் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சிக்கிட்டு தன்னோட நண்பனுக்குத் தெரியாம உளவு பாத்தான். அப்பத்தான் அவனுக்கு அந்தத் திருகையோட தன்மை தெரிஞ்சது. உப்ப அரைச்சுத்தான்னு சொன்னதக் கேட்டதையும் நிப்பாட்டுன்னு சொன்னதையும் கேட்டுட்டு எப்படியாவது இந்தத் திருகையத் திருடிக்கிடடுப் போயி நாம பெரியாளா ஆகணும்னு நெனச்சான்.
மறுநாளு அந்த வியாபாரி தன்னோட நண்பன் குடும்பத்தோட வெளியூரு போயிருக்கறதத் தெரிஞ்சிக்கிட்டு அந்தத் திருகை மாதிரி இருக்கற இன்னொரு திருகைய வாங்கிக் கொண்டு வந்து அவனோட வீட்டுல வச்சிப்பிட்டு அந்த மந்திரத் திருகையத் தூக்கிக்கிட்டுப் போயிட்டான்.
தான் இங்க இருந்தா தன்னோட நண்பன் கண்டுபிடிச்சி தன்ன உண்டு இல்லைன்னு பண்ணிப்பிடுவான்னு நெனச்ச அந்த நட்புத் துரோகி தன்னோட பொருள்களை எல்லாத்தையும் தனக்குச் சொந்தமான கப்பல்ல ஏத்திக்கிட்டு பல பொருள்களையும் வாங்கிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயி உப்ப வரவழைச்சு வித்துட்டுத் திரும்பவும் இந்த ஊருக்கு வந்துருவோம். அப்படி வந்தா இவனுக்குத் தெரியாதுன்னு நெனச்சான்.
தன்னோட மனைவிக்கிட்ட தான் வெளிநாட்டுல கப்பல்ல சரக்குகள ஏத்திக்கிட்டுப் போயி வித்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனான். அவங்கூட அவனோட வேலை செய்யிறவங்களும் கிளம்பினாங்க. கப்பல் நடுக்கடல்ல போயிக்கிட்டிருந்தபோது திருகையத் திருடுன வியாபாரிக்குப் பசி வந்துருச்சு.
தன்னோட வேலையாளப் பாத்து சாப்பாடு போடச் சொன்னான். சாப்பாட்டு முன்னால ஒக்காந்து சாப்பிட்ட அவன் சாப்பாட்டுல உப்பு இல்லைன்னு தெரிஞ்சி வேலையாளுகக்கிட்ட உப்ப எடுத்துக்கிட்டு வாங்கடான்னு சொன்னான். ஆனா அவங்க, “நாங்க உப்ப எடுத்து வைக்க மறந்துட்டோம்”ன்னு சொன்னாங்க.
அவனுக்கு ஒடனே தன்னோட கொண்டு வந்த திருகை ஞாபகத்துக்கு வந்தது. ஒடனே வேக வேகமாப் போயி அவன் திருகை இருந்த அறைக்குள்ளாற ஒக்காந்து திருகையப் பாத்து உப்புத்தான்னு மந்திரத்தைச் சொன்னான்.
திருகையில இருந்து உப்பா வர ஆரம்பிச்சிருச்சு. திருகைய நிப்பாட்டணும்னு நெனச்சான். ஆனா அவனுக்கு அந்தத் திருகைய நிப்பாட்டுற மந்திரம் மறந்து போயிருச்சு. திருகையே நிப்பாட்டு நிப்பாட்டுன்னு கத்துனான். ஆனா திருகை அரச்சு அரச்சு உப்ப வெளியில தள்ளுச்சு. கொஞ்ச நேரத்துக்குள்ளாற அந்த அறையே உப்பால நெறஞ்சிருச்சு. அவனால அறைய விட்டு வெளியில வரமுடியல. உப்பு அவனப் போட்டு மூடிருச்சு.
ஐயோ, நல்லவனா இருந்த என்னோட நண்பனுக்கு நான் துரோகம் செஞ்சேன். அந்தத் துரோகம் இப்ப எனக்கு வெனையா மாறிடுச்சேன்னு நெனச்சிக்கிட்டே உயிர விட்டான். அவன் வந்த கப்பலும் கொஞ்சங் கொஞ்சமா மூழ்கிடுச்சு.
ஆனா அந்தத் திருகை உப்ப மட்டும் அரச்சு அரச்சுத் தள்ளிக்கிட்டே இருந்துச்சு. அதனால நல்ல தண்ணியா இருந்த கடலுத் தண்ணி உப்புக் கரிக்கத் தொடங்கிடுச்சு. திருகை உப்ப இன்னைக்கும் அரச்சிக்கிட்டு இருக்கறதாலதான் இப்பவும் கடல் தண்ணி உப்புக் கரிக்குதாம்.
ஓ! அதனாலதான் கடல் தண்ணீர் உப்பாயிருக்குதா?