தாழம்பூவை ஏன் தலையில வைக்க மாட்டங்க? யாருக்காவது தெரியுமா? அதப் பத்தின கதை ஒண்ணு புதுக்கோட்டை வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருது. அது ரொம்பச் சுவையான கதை.
ஒரு சமயம் திருமாலும் பிரம்மாவும் தங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டாங்க. அவங்க சண்டையால அனைத்து உலகத்தோட அமைதியும் கெட்டுக்கிட்டு இருந்துச்சு. இதப் பார்த்த ஈசுவரன் அவங்க சண்டை போடுற இடத்துக்கு வந்தாரு.
அவங்களப் பாத்து, “இங்க பாருங்க சண்டை போடுறத நிறுத்துங்க. ஒங்களால எல்லா உலகத்தோட அமைதியும் கெட்டுக்கிட்டு இருக்கு. ஒங்க சண்டைக்கான காரணத்தைச் சொல்லுங்க. அதைத் தீர்த்து வைக்க முடியுமான்னு பாக்கறேன்”னு சொன்னாரு.
இதக் கேட்ட ரெண்டுபேரும், “எங்களுக்குள்ள யாரு பெரியாளு? இதத் தீர்மானிக்கத்தான் இந்தச் சண்டை. நீங்க வெலகி நின்னு பாருங்க. எங்கள்ள யாரு செயிக்கிறாங்களோ அவங்கதான் பெரியவங்க. நீங்க போங்கன்னு சொல்லிட்டுச் சண்டை போடறதத் தொடர்ந்தாங்க...
இதக் கேட்ட ஈசுவரன், “இதுதான் ஒங்க பிரச்சனையா, இத நான் சுலபமாத் தீத்து வைக்கிறேன். நான் சொல்றதக் கேட்பீர்களா?”ன்னு கேட்டாரு. அதுக்கு ரெண்டு பேரும் சரின்னு சம்மதிச்சாங்க. சண்டைய விட்டுட்டு ஈசுவரங்கிட்ட வந்தாங்க.
ஈசுவரன் அவங்களப் பாத்து, “இங்க பாருங்க நான் இப்ப நெருப்பு வடிவத்துல நிக்கப் போறேன். என்னோட தலைமுடிய பிரம்மா நீங்க போயி பாக்கணும். அதுமாதிரி என்னோட காலடியத் திருமாலே நீங்க போயிப் பாக்கணும். யாரு பார்த்துட்டு சீக்கிரமாத் திரும்ப வர்ரீங்களோ அவங்கதான் பெரியவங்க. என்ன செய்யிறீங்களா?”ன்னு கேட்டாரு.
இதுக்கு பிரம்மனும் திருமாலும் சம்மதிச்சாங்க. திருமாலு பன்றி வடிவத்தை எடுத்துக்கிட்டு பூமியக் கொடைஞ்சி கொடைஞ்சி போயிக்கிட்டே இருக்காரு. அதே மாதிரி பிரம்மா அன்னப் பறவையோட வடிவத்தை எடுத்து ஈசுவரனோட திருமுடியப் பாக்கறதுக்குப் போனாரு.
இவங்க ரெண்டு பேரும் போறாங்க போறாங்க போயிக்கிட்டே இருக்காங்க. திருமாலால ரொம்பக் கீழ போக முடியல. அவரால ஒண்ணுஞ் செய்ய முடியல. அப்படியே வெளியில வந்து ஈசுவரனப் பாத்து, “ஒலகத்தைக் காக்கக் கூடிய ஈசுவரனே நான் தோத்துட்டேன். என்னால ஒங்களோட திருவடிகளைப் பார்க்க முடியல. நான் பெரியவன் இல்லன்னு ஒத்துக்கறேன்”னு சொன்னாரு.
இதக் கேட்ட ஈசுவரன், “பரவாயில்ல. நீங்க எப்போதும் போல எனக்குத் துணையா இருந்து இந்த உலகத்தைக் காத்துக்கிட்டு வாங்க”ன்னு சொன்னாரு. சரின்னுட்டுத் திருமாலு போயிட்டாரு.
அன்னப் பறவை வடிவத்தோட பறந்து போன பிரம்மன் போறாரு போறாரு போயிக்கிட்டே இருக்காரு. அவரால இறைவனோட திருமுடியப் பாக்க முடியல. அப்பப் பாத்து ஒரு தாழம்பூ கீழே வந்துக்கிட்டு இருந்துச்சு.
அந்தத் தாழம்பூவப் பார்த்த பிரம்மா, “ஏய் தாழம்பூவே நீயி எங்க இருந்து வர்ற?” அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு அந்தத் தாழம்பூ, “நான் ஈசுவரனோட திருமுடியில இருந்து வர்றேன்”னு சொன்னது.
அதுக்கு பிரம்மா, “ஆமா எப்பப் பொறப்புட்டே”ன்னுக் கேட்டாரு. தாழம்பூ, “நான் எப்பப் பொறப்புட்டேன்னு தெரியல. நாம்பாட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்”னு சொன்னது.
இதக் கேட்ட பிரம்மாவுக்கு குறுக்குப் புத்தி வேலை செஞ்சது. ஒடனே அவரு தாழம்பூவப் பாத்து, “ஏய் தாழம்பூவே, நான் ஈசுவரனோட திருமுடியப் பாத்துட்டேன். அதப் பாத்ததுக்கு நீதான் சாட்சி”ன்னு சொன்னாரு.
இதக்கேட்ட தாழம்பூவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. “நீங்க யாரு? நீங்க ஈசனோட திருமுடியப் பார்க்கலே? அப்பறம் எப்படிப் பார்த்ததா நான் சொல்றது? நான் சொல்ல மாட்டேன். என்னைய விட்டுருங்க”ன்னு சொன்னது.
பிரம்மாவுக்குக் கோபம் வந்துருச்சு, அவரு தன்னோட சுய உருவத்தைக் காட்டி, ‘‘ஏய், பூவே நான்தான் இந்த உலகத்தப் படைக்கிற பிரம்மா. நான் சொல்லறத நீ கேக்கணும். ஈசங்கிட்ட போறப்ப நான் சொன்னதைச் சொல்லணும். அப்படிச் சொல்லலைன்னா ஒன்ன அழிச்சிருவேன்”னு சொன்னாரு.
பிரம்மனை நேரில பார்த்த தாழம்பூவுக்கு கைகாலெல்லாம் ஒதறலு எடுத்துருச்சு. அடேயப்பா! நமக்கெதுக்கு இந்தப் பொல்லாப்பு. நம்மைப் படைச்சவரே இப்படிச் சொல்லச் சொல்லாருன்னா நாம எப்படிச் சொல்ல மாட்டேன்னு சொல்றதுன்னு நெனச்சிக்கிட்டு வர்றது வரட்டும்னு, “சரி சொல்றேன்”னு சொன்னது.
பிரம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். தாழம்பூவக் கூட்டிக்கிட்டு சர்...ருன்னு கீழ இறங்கினாரு. இறங்கின உடனே ஈசுவரனப் பாத்துக் கும்புடு போட்டுட்டு, “சாமி நான் ஒங்களோட திருமுடியப் பாத்துட்டேன். அதுக்கு இந்தத் தாழம்பூதான் சாட்சி”ன்னு சொன்னாரு.
ஈசுவரன் அந்தத் தாழம்பூவப் பாத்து, “இது உண்மையா?”ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தத் தாழம்பூ, “ஈசனே, நான் சத்தியமாப் பாத்தேன். இவரு ஒங்களோட திருமுடியப் பாத்தாரு”ன்னு பொய்சத்தியம் செஞ்சது.
ஈசுவரனுக்குப் பொல்லாத கோபம் வந்துருச்சு, அவரு பிரம்மாவப் பாத்து, “இந்த உலகத்தைப் படைச்ச ஈசுவரங்கிட்டயேப் பொய் சொல்றீங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா பொய் சொல்வீங்க? இந்தத் தைரியம் ஒங்களுக்கு எப்படி வந்துச்சு?ன்னு அவங்கள அதட்டிக் கேட்டார்.
பிரம்மாவுக்கு பயம் வந்துருச்சு. இருந்தாலும் பயத்தை வெளியில காட்டிக்காம, “ஈசனே நான் சத்தியமா ஒங்களோட திருமுடியப் பாத்தேன். அதுக்கு இந்தத் தாழம்பூதான் சாட்சி’’ அப்படீன்னாரு. ஈசனுக்குப் பயங்கரக் கோபம். தாழம்பூவைப் பாத்து, “ஏய் தாழம்பூவே உண்மையச் சொல்லு இல்லைன்னா உன்னை எரிச்சிடுவேன்”னு சொன்னாரு.
அதுக்குமேல தாழம்பூவால உண்மையச் சொல்லாம இருக்க முடியல. ஈசுவரங்கிட்ட, “ஈசுவரா நான் பொய் சொல்லிட்டேன். என்னய மிரட்டி இந்தப் பிரம்மாதான் பொய் சொல்லச் சொன்னாரு. பிரம்மா உங்களோட திருமுடியப் பார்க்கல”ன்னு சொல்லிருச்சு.
ஈசுவரன் பிரம்மாவைப் பாத்து, “படைக்கிற கடவுளான நீங்களே பொய் சொல்லலாமா? பொய் சொன்னதால இனிமே ஒங்களுக்கு இந்த உலகத்துல எங்கேயும் கோயிலே கெடையாது. ஒங்களுக்காக எங்கேயும் கோயிலக் கட்டி மக்கள் வழிபடமாட்டாங்க”ன்னு சாபம் கொடுத்துட்டாரு. பிரம்மா நொந்து போயிட்டாரு. இதனாலதான் பிரம்மாவுக்கு எங்கேயும் தனியாக் கோயிலே கெடையாது.
தாழம்பூவப் பாத்த ஈசுவரன், “தாழம்பூவே நீ என் தலையில இருந்து வந்துட்டு பொய் சொன்னதால உன்னைப் பெண்கள் யாரும் தலையில வச்சிக்க மாட்டாங்க. இறைவனுக்கும் உன்னைப் படைக்க மாட்டாங்க. உன்னோட இதழ்களுக்குள்ளாற பூ நாகம் வாழும். போயிரு”ன்னு சொல்லி சாபங் கொடுத்தாரு. தாழம்பூ பேசாம அழுதுகிட்டு தான் பொய் சொன்னதுக்குத் தக்க தண்டனை கெடச்சிருச்சு. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்னு நெனச்சிக்கிட்டுப் போயிருச்சு.
அன்னையில இருந்து தாழம்பூவ யாரும் பெண்கள் தங்களோட தலையில வச்சிக்கிறது இல்லை. தாழம்பூவுல ரொம்பச் சின்ன பூ நாகம் இருக்குது. இறைவனுக்கும் அந்தப் பூவ வச்சிப் படைக்கிறது இல்ல.