எல்லாத்துக்கும் நாந்தான் பெரியவன்னு நாம நெனச்சிக்கிட்டு இருக்கக் கூடாது. அவ்வாறு நெனக்கிறது தவறு. என்னாலதான் எல்லாம் முடியும்னு நெனக்கவும் கூடாது. நம்மைவிடத் திறமையானவங்க இங்க இருக்கறாங்க. இதப்பத்தி விளக்கறமாதிரி ஒரு கதை ஒண்ணு இருக்கு.
நாரதரு திரிலோக சஞ்சாரி. அவரு ஒரு இடத்துலகூட நிக்காம ஒவ்வொரு இடமாப் போயிக்கிட்டு வருவாரு. அப்படிப் போறபோது அவரு வாய் ஓயாமா ஓம் நமோ நாராயணாயன்னு சொல்லிக்கிட்டேத் திரிவாரு. இப்படி சொல்லிக்கிட்டேத் திரிஞ்சிக்கிட்டு இருக்கறபோது அவரோட மனசுக்குள்ளாற ஒரு எண்ணம் வந்துருச்சு.
இந்த ஒலகத்துலேயே நாமதான் இறைவனோட பேரச் சொல்லிச் சொல்லித் திரியறோம். நம்மைத் தவிர வேற யாரும் நம்ம மாதிரிச் சொல்றதே இல்லைன்னு ஒரு அகங்காரமான எண்ணம் வந்துருச்சு. இந்த எண்ணத்தோடேயே நாரதர் கடவுளப் பாக்கப் போனாரு. கடவுளப் பாத்து வணங்கிவிட்டு இறைவனைப் பார்த்தார்.
தன்னைப் பார்த்த நாரதரப் பார்த்துக் கடவுள், ”என்ன நாரதா இன்றைக்கு நீ ரெம்ப ரெம்ப சந்தோஷமா இருக்கியே? எதாச்சும் காரணம் இருக்குதான்னு?” கேட்டாரு.
அதுக்கு நாரதரு, ”ஆமாம் இறைவனே! என்னைப் போன்ற பாக்கியசாலிகள் உலகத்துல யாருமே இல்லை. நான் மட்டும்தான் ஒங்க பேர வாய் ஓயாமல் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்”னு சொன்னாரு.
அதக் கேட்ட பகவான் சிரிச்சிக்கிட்டே, ”அப்படியா? ஆச்சரியமா இருக்கே? சரி பூலோகத்துக்குப் போயி நான் சொல்ற ஆளப் போயிப் பாத்துட்டு அவரோட ரெண்டு நாளு இருந்துட்டு வா... அதுக்குப் பிறகு அங்க என்ன நடந்ததுன்னு ஏங்கிட்ட வந்து சொல்லு”ன்னு சொன்னாரு.
நாரதரும் சரின்னுட்டு கடவுள் சொன்னது போல பூலோகத்துக்கு வந்து அவரு சொன்ன ஆள சாதாரணமான ஆளுமாதிரிப் போயிப் பாத்தாரு. அந்தாளு இவரப் பாத்துட்டு, ”ஊருக்குப் புதுசா. என்னோட எங்க வீட்டுல தங்கிட்டுப் பெறகு போங்கன்னு” சொன்னாரு.
சரின்னு சொல்லிட்டு நாரதரும் அந்த ஆளோட தங்குனாரு. நாரதரு போன நேரம் சாயந்தரம். கொஞ்சநேரத்துல சாப்பிட ஒக்காந்தாங்க. அப்ப அந்த ஆளு, ”இறைவனே எனக்குச் சோறுபோட்டு காப்பாத்துற ஒனக்கு நன்றின்னு” சொல்லிட்டு ஓம் நமோ நாராயணாயன்னு சொல்லிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சாரு.
சாப்புட்ட ஒடனே ரெண்டுபேரும் தூங்கப் போனாங்க. அப்ப அந்த ஆளு பாயில ஒக்காந்துக்கிட்டு, ”இறைவனே! இன்னக்கி இன்னின்ன வேலை செஞ்சேன். இதுஇது எனக்குக் கெடைச்சது. எல்லாம் ஒன்னோட கருணையினால்தான் கெடைச்சது. என்னைய இன்னக்கிப் பூராவும் காப்பாத்துனதுக்கு ஒனக்கு நன்றியத் தெரிவிச்சிக்கிறேன்னு” சொல்லிட்டு, ”ஓம் நமோ நாராயணாய”ன்னு இறைவனோட பேரச் சொல்லிட்டுத் தூங்கிட்டாரு.
மறுபடியும் காலையில எழுந்திருச்சாரு. படுக்கைய விட்டு எழுந்திருச்ச பெறகு, முகத்தக் கழுவிக்கிட்டு, “இறைவனோட பேரைச் சொல்லிட்டு, இறைவனே இன்றையப் பொருடுது ஒன்னால நல்லதா இருக்கணும்” அப்படீன்னு சொல்லிக்கிட்டே போயி சாமியக் கும்பிட்டு்டு, வயலுக்குப் போனாரு.
வயல்ல கடுமையா வேலை பாத்தாரு. மறுபடியும் காலையில சாப்புட ஆரம்பிச்சாரு. அப்பவும் சாப்பாட்டுக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு இறைவனோட பேரைச் சொல்லிட்டுச் சாப்புட்டாரு. அதே மாதிரி சாயந்தரம் வயல் வேலை முடிஞ்சி திரும்பவும் வீட்டுக்கு வந்தாரு.
வீட்டுக்கு வந்தவரு இறைவனோட பேரைச் சொல்லிட்டு முன்னால என்ன செஞ்சாரோ அதேமாதிரி செஞ்சாரு. இதைப் பாத்துக்கிட்டு இருந்த நாரதருக்கு வெறுப்பு வந்துருச்சு. ச்சே இதப் போயி பெருசா இறைவன் சொன்னாரு. இங்க பாத்தா ஒண்ணுமில்லைன்னு மனசுக்குள்ளாற நெனச்சுக்கிட்டே அந்த ஆளுகிட்ட சொல்லிக்கிட்டு கடவுளப் பாக்குறதுக்குப் போனாரு.
அங்கபோயி கடவுளப் பாத்துட்டு நடந்ததச் சொல்லிட்டு, “என்னய மாதிரி சொல்வாருன்னு பாத்தா அந்த ஆளு ஒங்கபேர ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவைதான் சொன்னாரு. இதுக்காக அவர தலையில தூக்கி வச்சிக்கிட்டுக் கொண்டாடுறீகன்னு” சொன்னாரு.
அதக் கேட்ட கடவுளு, சரி நீயி சொல்றது அப்பறம் இருக்கட்டும். இங்க வா. இந்தக் கிண்ணத்துல இருக்குற எண்ணெய எடுத்துக்கிட்டு இந்த ஒலகத்தை நீ சுத்திக்கிட்டு வரணும். ஒரு சொட்டுக் கூட இந்தக் கிண்ணத்துல இருக்கற எண்ணெய் கீழ சிந்தக் கூடாதுன்னு’’ சொல்லிநாரதர அனுப்பி வச்சாரு.
இதென்ன பிரமாதமா நான்போயிட்டு வர்றேன்னு இறைவனுக்கிட்ட இருந்த எண்ணெய்க்கிண்ணத்தை வாங்கிக்கிட்டு ஒலகத்தைச் சுத்த ஆரம்பிச்சாரு. எண்ணெய் தளும்பிக்கிட்டு இருந்துச்சு. ஒரு சொட்டுக் கீழ விழாம கவனமா ஒலகத்தைச் சுத்திக்கிட்டு வந்தாரு நாரதரு. ஒருவழியாக் ஒலகத்தைச் சுத்திக்கிட்டு வந்து கடவுளுக்கிட்ட அந்த எண்ணெய்க் கிண்ணத்தை வச்சாரு.
இறைவன் நாதரப் பாத்துட்டு, “என்ன நாரதா எத்தனை முறை என்னோட பேசச் சொன்ன. வாய் ஓயாமா என்னோட பேரைச் சொன்னியா?ன்னு’ கேட்டாரு. அதுக்கு நாரதரு, ”பகவானே எப்படி முடியும். அந்தக் கிண்ணத்துல இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கீழ சிந்தக் கூடாதுன்னு சொன்னீங்கள்ள. அதனால அதுலயே என்னோட கவனத்தை அந்தக் கிண்ணத்துலயே வச்சித் தொலைச்சுட்டேன். அதனால ஒங்க பேரை ஒரு முறை கூட என்னால சொல்ல முடியலன்னு” சொன்னாரு.
அதக் கேட்ட பகவான், “பாத்துக்கிட்டியா ஒன்னையவிட அந்த குடும்பஸ்த்தன்தான் உயர்ந்தவன். தன்னோட கடுமையான குடும்ப வேலைகள்ளையும் என்னைய நெனச்சிக்கிட்டே ஏம்பேரச் சொல்லிட்டுத்தான் எதையும் செய்யிறான். ஆனா நீயி எண்ணைய் கீழ சிந்திவிடமா இருக்கிறதுக்காக என்னோட பேரைச் சொல்லல. அதனால ஒன்னைய விட அந்தக் குடும்பஸ்தான் ஒசந்தவன்னு” சொன்னாரு.
இதைக் கேட்ட நாரதரு வெட்கப்பட்டுத் தலை குனிஞ்சாரு. பகவானப் பாத்துட்டு, “கடவுளே என்னைய மன்னிச்சுருங்க. தலைக்கனமாப் பேசிட்டேன். என்னயவிட அந்த குடும்பஸ்தன்தான் ஒசந்தவன்னு தெரிஞ்சிக்கிட்டேன்னு” சொன்னாரு. தன்னோட கஷ்டமான நேரங்கள்லயும் இறைவனை எவன் நெனைக்கிறானோ அவன்தான் உயர்ந்தவன்னு எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டாங்க.