வெற்றி என்பது சாதாரணமாக் கிடைச்சிறாது. பல வலிகளையும் தாங்கி, பல தடைகளையும் தாண்டி, கடும் உழைப்பாலதான் அந்த வெற்றி கிடைக்கும். இதப் பத்தின ஒரு கதை ஒண்ணு இருக்கு.
ஒரு ஊருல பெரிய சிற்பி இருந்தாரு. அருமையான சிலைகளை எல்லாம் செய்வாரு. அவரு கடவுள் சிலை ஒண்ணச் செய்யணும்னு மெனக்கெட்டாரு. கடவுள் சிலை செய்யிறதுக்கு நல்ல கல்லே கிடைக்கல. என்னடா செய்யிறதுன்னு அந்தக் கல்லத் தேடித் தேடி அலைஞ்சாரு.
அப்படி அலையிறபோது ஒரு பெரிய மலை அடிவாரத்துக்கு வந்து சேந்தாரு. நெறையக் கல்லு கிடந்தது. அந்தக் கல்லு எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்தாரு.
ஒவ்வொரு கல்லையும் பாத்த ஒடனே அத கையில வச்சிருக்கிற உளியால தட்டிப் பாப்பாரு. இப்படி ஒவ்வொன்னாத் தட்டித் தட்டி பாத்துப்பாத்து ஒண்ணும் சரியில்லைன்னுட்டு மனசு ஒடிஞ்சி போயி ஒரு மரத்தடியில போயி சோர்ந்து போயி ஒக்காந்தாரு.
அப்பப் பாத்து, “ஐயா, ஐயா”ன்னு ஒரு குரலு கேட்டது. அவருக்கு ஒண்ணுமே புரியல. இந்த இடத்துல யாரு நம்மலக் கூப்புடுறதுன்னு சுத்துமுத்தும் பாத்தாரு. அப்ப அவருக்குப் பக்கத்துல கிடந்த ஒரு பெரிய கல்லுல இருந்துதான் கூப்புடுற சத்தம் வந்தது.
அவரு அந்தக் கல்லப் பக்கம் போயிப் பாத்தாரு. அப்ப, “ஐயா நான்தான் கூப்புட்டேன். என்னைய வச்சு கடவுள் சிலையச் செய்யுங்க. வாங்கய்யா”ன்னு சொன்னது.
சிற்பிக்கு ரெம்ப மகிழ்ச்சி. அவரு கல்லுக்கிட்ட போயி, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒன்ன வச்சி கடவுள் சில செய்யிறேன். ஆனா நான் ஒன்னச் செதுக்கறபோது ரொம்ப வலிக்கும். அத நீ பொறுத்துக்கணும். அப்பத்தான் என்னால சாமி செலையச் செதுக்க முடியும்”ன்னு சொன்னாரு. அதுக்கு அந்தப் பெரிய கல்லு சரின்னு சொன்னது.
சிற்பி சாமியக் கும்புட்டுட்டு சிலையச் செதுக்கத் தொடங்கினாரு. உளிய வச்சி கொஞ்சங் கொஞ்சமா தேவையில்லாது எல்லாத்தையும் செதுக்கி ஒதுக்கித் தள்ளிவிட்டாரு. அப்ப அந்தக் கல்லு ஐயோ வலிக்குதே வலிக்குதேன்னு கத்துச்சு. சிற்பி, இந்தபாரு கொஞ்சம் பொறுமையா இரு. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள இப்படியா “ஆ ஊன்னு கத்துறது”ன்னு சொல்லிட்டு உளியால செதுக்க ஆரம்பிச்சாரு.
அவரு மொதல்ல கல்லுல உளியால வருவுனாரு. அதுக்கு அப்பறம் கொத்த ஆரம்பிச்சாரு. அவரு கொத்த ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அந்தக் கல்லு, “ஐயையோ என்னைக் கொல்லாதிங்க… என்னைய விட்டுருங்க.. என்னால பொறுக்க முடியல”ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுருச்சு.
சிற்பி அந்தக் கல்லு கத்துறதப் பாத்துட்டு, “ஒனக்குக் கடவுளாகப் பிடிக்கலையா? ஏன் இப்படிக் காட்டுக் கத்தலாக் கத்துற. நீ சொன்னதாலதான ஒன்னையச் சிலையா வடிக்க ஆரம்பிச்சேன். ஒனக்கு வேண்டாம்னா விட்டுரு”ன்னு சொல்லிட்டு உளிய எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு.
கொஞ்ச தூரம் போனபின்னால ஒரு கல்லப் பாத்தாரு. அந்தக் கல்லுல சிலை செஞ்சா நல்லா வரும்னு நெனச்சி அதுக்கிட்டக்கப் போனாரு. அதப் பாத்த அந்தக் கல்லு, “என்ன சிற்பியாரே என்ன வந்து பாக்குறீங்களே! ஏதாவது விசேஷமா?”ன்னு கேட்டது.
அதுக்கு அந்தச் சிற்பி, “கல்லே நான் ஒரு கடவுள் சிலையச் செய்யப் போறேன். அதுக்கு ஒன்னத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஒன்ன சிலையாச் செதுக்கவா?”ன்னு கேட்டாரு. கல்லு, “என்னையச் செலையாச் செதுக்குங்க. ஆனா எனக்கு வலி அதிகமா வரமாப் பாத்துச் செதுக்குங்க. அப்படிச் செஞ்சா நான் ஒத்துக்குறேன்...” என்றது.
சிற்பியும், “சரி, மெதுவாவே... அதிகம் வலிவராமச் செதுக்குறேன்”னு சொல்லிட்டு உளியக் கொண்டு சிலை வடிக்கத் தொடங்கினாரு. வேகமா சிலை வடிக்கிற வேலை ஓடிக்கிட்டே இருந்துச்சு. அரைவாசி முடிஞ்சிருச்சு. சிற்பி உளியக் கொஞ்சம் வேகமா அடிக்கத் தொடங்கினாரு.
ஒடனே அந்தக் கல்லு, “ஐயையோ என்னை ஏன் இப்படிப் பாடப் படுத்தறிங்க. மெதுவா வலிக்காம செதுக்கச் சொன்னதுக்கு இப்படியா மொரட்டுத் தனமா என்னையப் போட்டுக் கொத்தி எடுப்பிங்க. என்னால இதப் பொறுத்துக்க முடியல. இனிமே எம்மேல கைய வக்காதீங்க. என்னைய விட்டுருங்க...”ன்னு சத்தம் போட ஆரம்பிச்சிருச்சு.
சிற்பி எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. ஆனா அந்தக் கல்லு கேக்கற மாதிரி இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கிட்டு இருந்திருந்தா ஒரு நல்ல சிலை உருவாகி இருக்குமே. இந்தக் கல்லு இப்படிச் செஞ்சிடுச்சே! சே… நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான். இனி எந்தக் கல்ல வச்சி செலையச் செதுக்குறது. நம்மளோட கனவு நெறைவேறாமப் போயிருமோன்னு நெனச்சி ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டே நடந்தாரு.
அப்ப வழியில ஒரு பெரிய கல்லு கிடந்துச்சு. சிற்பியாரு அதைக் கவனிக்காம நடந்துக்கிட்டே இருந்தாரு. அவரைப் பாத்த கல்லு, “ஐயா, என்ன... என்னையப் பாக்காமப் போறீங்க. இங்க வாங்க. ஒங்களப் பாத்தா பெரிய சிற்பி மாதிரித் தெரியுது. இங்க வாங்க. நீங்க ஏதோ கவலையோட போறது மாதிரி தெரியுது. இங்க வாங்க. வந்து என்னன்றத ஏங்கிட்ட சொல்லுங்க. என்னால ஒதவ முடியும்னா... நான் உதவுறேன்”னு சொன்னது.
அதக் கேட்ட சிற்பிக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு பெரிய கல்லு நம்மள சரியாப் புரிஞ்சிக்கிடுச்சே. நாம நெனக்கிறது சுருக்கமாச் சொல்லிடுச்சேன்னு நினச்சிக்கிட்டு அந்தக் கல்லப் பாக்குறதுக்கு வந்தாரு. வந்தவரு அந்தக் கல்லப் பாத்து, “ஆமா நான் சிற்பிங்கறத... நீ எப்படிக் கண்டுபிடிச்சே...? அதுவும் கவலையோட போறேன்னுங் கண்டுபிடிச்சி சொல்லிட்டியே...? எப்படி...?”ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்தக் கல்லு, “ஐயா கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்கயோ இருந்து உளிச் சத்தம் கேட்டது. அத வச்சித்தான் நீங்கதான் அந்த உளிச் சத்தத்திற்குக் காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோடு மட்டுமில்லாம ஒங்க மொகத்தப் பாத்து, நீங்க வருத்தத்துல இருக்கறதையும் தெரிஞ்சிக்கிட்டேன்”னு சொன்னது.
அதைக் கேட்ட சிற்பி நடந்ததச் சொல்லி கடவுள் சிலையச் செதுக்குறதப் பத்திச் சொன்னாரு. கல்லும் என்னைய என்ன வேணுன்னாலும் செஞ்சிக்கிடுங்க. ஆனா என்னைய வச்சிப் பெரிய கடவுள் சிலை உருவாக்கிடுங்க. நீங்க என்ன செஞ்சாலும் அதை நான் பொறுத்துக்குவேன்னு தன்னைச் சிலை வடிக்கிறதுக்குச் சம்மதம் தெரிவிச்சது.
சிற்பியும் ராப்பகலா பாடுபட்டு, கடவுள் சிலைய செதுக்கத் தொடங்கினாரு. அந்த மூணாவது கல்லு எல்லா வலிகளையும் பொறுத்துக்கிடுச்சி. முக்கல மொணகல. அதுபாட்டுக்கு இருந்துச்சு. சிற்பி ரசிச்சு ரசிச்சு சிலையச் செதுக்கி முடிச்சாரு. அவராலேயே நம்ப முடியல. அவரு செதுக்க நெனச்சதுக்கும் மேலாவே சில நல்லா அமைஞ்சி போச்சு.
அந்த அற்புதமான செலைய, அந்த மலையோட அடிவாரத்துல வச்சி ஒரு கோயிலக் கட்டினாரு. அந்தச் சிலைய, அந்தக் கோயிலோட கற்பக்கிருகத்துல வச்சாரு. படிக்கு ஒரு கல்லு தேவைப்பட்டது. இரண்டாவதா சிலைவடிக்க எடுத்த கல்ல எடுத்துக்கிட்டு வந்து கற்பக்கிருகத்தோட படியாப் போட்டாரு. மொதக்கல்ல எடுத்துக்கிட்டு வந்து கோயிலுக்கு வெளியில இருக்கற படியாப் போட்டு வச்சாரு.
அவரு படியாப் போட்டபோது மொதக் கல்லும் ரெண்டாவது கல்லும் “என்னாத்துக்கு எங்கள இப்படிப் போட்டுக் கேவலப் படுத்தறீங்க. நீங்க செய்யிறது கொஞ்சங்கூட நல்லாவே இல்ல. கற்பக்கிருகத்துக்குள்ளாற நிக்கிறது எங்கள மாதிரிக் கல்லுதானே. அது உள்ளாற வச்சிட்டு எங்கள வெளியில போட்டுட்டீங்களே இது நியாயமா?”ன்னு கேட்டது.
அதுக்குச் சிற்பி, “நான் யாருகிட்டயும் பாரபட்சமா நடக்கவே இல்ல. ஒங்களுக்கு நீங்களே இந்த முடிவைத் தேடிக்கிட்டீங்க. மொதல்ல நீ என்ன சொன்ன எனக்கு ஒடம்பெல்லாம் வலிக்குது. என்னைய விட்டுருங்கன்னு கத்துனே. அப்பறம் ரெண்டாவது கல்லான நீயி பாதி செலைய ஒன்ன வச்சி உருவாக்குனபோது எனக்கு இதெல்லாம் தேவையில்லை. செலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு கதறுன. ரெண்டுபேரும் இப்ப இப்படிச் சொல்றீங்க. எல்லா வலியையும் பொறுத்துக்கிட்ட மூணாவது கல்லு சாமியா இருக்கு. வலியப் பொறுத்துக்காத மத்த ரெண்டு கல்லான நீங்க வெறுங்கல்லாவே வெளியில கெடக்குறீங்க... எல்லாம் அவங்க அவங்க எண்ணப்படி தான் நடக்கும். இதப் புரிஞ்சிக்கோங்க. மத்தவங்களக் குத்தம் சொல்லாதீங்க”ன்னு சொன்னாரு. வெளியில கெடந்த அந்த ரெண்டு கல்லும் தங்களோட செயலுக்காக வெக்கப்பட்டுக்கிட்டுக் கிடந்ததுங்க. இன்னவரைக்கும் இந்தக் கதை இந்தப் பக்கக் கிராமத்துல வழக்குல வழங்கி வருது.