எதையும் புரிந்து கொள்ளாமல் சிலர் மனம் போனபடி நடப்பாங்க. எது சரி, எது தவறுன்னும் அவங்களுக்குத் தெரியாது. அப்படியே நியாயம் எதுன்னு தெரிஞ்சாலும், அதை ஏத்துக்க மாட்டாங்க. அவங்களுக்கே தான் செய்யுறது தவறுன்னு தெரிஞ்ச பிறகும் அதுக்காக வருத்தப்பட மாட்டாங்க. அதனால ரொம்ப இழப்புகளைச் சந்திப்பாங்க.
இழப்புகள் வரவர அவங்க, தான் செஞ்சது தவறுன்னு தெரிஞ்சுக்குவாங்க. அதனால பலரும் அவங்கள ஒதுக்கி வச்சிடுவாங்க. கடைசியில அவங்க தனிமரமாவே நின்னு நொந்து போவாங்க. அதப்பத்தின கதைதான் இந்தக் கீரிப்பிள்ளை கதை.
ஒரு ஊருல ஒருத்தி இருந்தா. அவளுக்குக் கலியாணம் பண்ணி ரொம்ப நாளு குழந்தை இல்லை. அவ தன்னோட வீட்டுல ஒரு கீரிப்பிள்ளைய வளத்துக்கிட்டு வந்தா. அவளும் அவளோட புருஷனும் அந்தக் கீரிப்பிள்ள மேல உசிரயே வச்சிருந்தாங்க.
அவங்க தங்களுக்குக் குழந்தப் பாக்கியம் கிடைக்கணும்னு கடவுளுக்கிட்ட வேண்டித் தவமாத் தவமிருந்தாங்க. கடவுளோட அருளாள அவங்களுக்கு அழகான ஆம்பளப்பிள்ள பொறந்தது.
அந்தக் குழந்தையக் கண்ணுங் கருத்துமா வளத்துக்கிட்டு வந்தாங்க. அவங்க வளத்துக்கிட்டு வந்த கீரிப்பிள்ளையும் அந்தக் குழந்தை மேல ரொம்பப் பிரியமா இருந்துச்சு. அந்தக் குழந்தையும் கீரிப்பிள்ளையும் சேர்ந்தே விளையாடுவாங்க. அந்தக் கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைய விட்டுட்டு எங்கயும் போகாது.
இப்படி இருந்துக்கிட்டு இருந்தப்ப ஒரு நாளு புருஷங்காரன் வேலை விஷயமா வெளியில கிளம்பிக்கிட்டு இருந்தான். அப்ப தன்னோட வீட்டுக்காரிக்கிட்ட, ‘‘நான் வெளியில போயிட்டு வந்துடறேன். நீ குழந்தையையும் வீட்டையும் பத்தரமாப் பாத்துக்கோ. கவனமா இரு’’ அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டான்.
அவளும் குழந்தைக்குத் தாய்ப்பாலக் கொடுத்து விளையாட விட்டுட்டு வீட்டுல வேலையப் பாத்துக்கிட்டு இருந்தா. அப்பறம் கொஞ்ச நேரம் ஆனவுடனே மறுபடியும் குழந்தைக்குப் பாலக் கொடுத்துத் தொட்டில்ல போட்டு ஆட்டிவிட்டுத் தூங்கப்போட்டுட்டுத் தண்ணி எடுத்துக்கிட்டு வர்றதுக்காக கதவச் சாத்திட்டுக் குடத்த எடுத்துக்கிட்டுக் குளத்துக்குப் போனா.
அப்ப அங்க இருந்த கீரிப்பிள்ளை குழந்தை படுத்துருக்கிற தொட்டிலுக்குக் கீழேயே படுத்திருந்தது. அந்தக் கீரிப்பிள்ளை எதுவும் வீட்டுக்குள்ளாற வருதான்னு கவனமாப் பாத்துக்கிட்டே இருந்துச்சு. அப்ப ஒரு கருநாகப் பாம்பு ஒண்ணு வீட்டுக்குள்ளாற மெதுவா ஊர்ந்து வந்தது.
அப்படி வந்த பாம்பு குழந்தை படுத்திருந்த தொட்டிலுக்கிட்ட வந்துருச்சு. வந்ததோட இல்லாம தொட்டில்ல ஏறப்போச்சு. அதப் பார்த்த கீரிப்பிள்ளை அந்தப் பாம்பத் தொட்டிலுக்கிட்ட விடாம விரட்டுச்சு.
ஆனா அந்தப் பாம்பு கீரிப்பிள்ளைய விரட்டுச்சு. பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் கடுமையான சண்டை வந்துருச்சு. கீரிப்பிள்ளை பாம்பைக் குழந்தை படுத்துருக்கிற இடத்துக்கிட்ட விடாம பாம்பத் தொரத்தித் தொரத்திச் சண்டை போட்டுச்சு.
அப்படிச் சண்டை போட்ட கீரிப்பிள்ளை பாம்போட தலையப் பிடுச்சிக் கடிச்சிக் குதறிப் போட்டுருச்சு. பாம்பு செத்துப் போச்சு. குழந்தையக் கீரிப்பிள்ளை காப்பாத்திருச்சு. அப்பப் பாத்து தண்ணியத் தூக்கிக்கிட்டு அம்மாகாரி வீட்டுக்குள்ளாற வந்தா.
அவ முன்னால இந்தக் கீரிப்பிள்ளை ஓடிப்போயி காலத் தூக்கிக்கிட்டு நின்னது. கீரிப்பிள்ளையோட வாயி முகம் எல்லாத்திலயும் ரத்தத்தப் பாத்த அம்மாகாரி, ஐயையோ இந்தக் கீரிப்பிள்ளை நம்ம குழந்தையக் கொன்னுப்புடுச்சே. இதப் போயி நாம பிள்ளையாட்டம் வளத்தமே? இப்படிப் பண்ணிப்புடுச்சேன்னு நெனச்சு, தான் கொண்டு வந்த குடத்தத் தண்ணியோட கீரிப்பிள்ளை தலையில போட்டா. அப்படிப் போட்டதால அந்தக் கீரிப்பிள்ளை தலை நசுங்கிச் செத்துப் போச்சு.
அவ தொட்டில்ல போயி குழந்தையப் பாத்தா. குழந்தை நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்துச்சு. தொட்டிலுக்குக் கீழ கருநாகம் ரெண்டு துண்டா செத்துக்கிடந்தது. அதப் பாத்தவளுக்கு நடந்தது தெரிஞ்சிருச்சு.
ஐயோ எதையும் புரிஞ்சிக்காம புள்ளையாட்டம் வளத்த கீரிப்பிள்ளையக் கொன்னுட்டமே? நம்ம புள்ளையக் காப்பாத்துனத... இப்படித் தெரியாத்தனமா கொன்னுட்டமேன்னு தலையில அடிச்சிக்கிட்டு அழுதா.
அப்பப் பார்த்து அவளோட புருஷங்காரன் வந்தான். அவன் பொண்டாட்டிகாரி அழுதுகிட்டு இருந்ததைப் பாத்துட்டு என்னன்னு கேட்டான். அவளும் நடந்ததச் சொன்னா. புருஷங்காரனுக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு.
ஏண்டி என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்காமயே கீரிப்பிள்ளையப் போட்டுக் கொன்னுட்டியே. இனிமே நீ இங்க இருக்காத. ஒங்க அப்பன் வீட்டுக்குப் போயிருன்னு அடிஅடின்னு அடிச்சி வெரட்டிட்டான். அவளும் தன்னோட தலைவிதிய நெனச்சிக்கிட்டுப் புள்ளையத் தூக்கிக்கிட்டு அப்பன் வீட்டுக்குப் போயிட்டா.
அதுக்குக் கொஞ்ச நாளுக்குப் பெறகு அவ அப்பனாத்தாளோட புருஷன் வீட்டுக்கு வந்து அவனோட கால்ல விழுந்தா. தெரியாம நடந்து போயிருச்சு. மன்னிச்சிக்கோங்கன்னு கதறி அழுதா. அவ அழுததப் பார்த்த புருஷங்காரனும் சரி போயித் தொலையிதுன்னு அவள வீட்டுக்குள்ளாறச் சேத்துக்கிட்டான். எதையும் உண்மையத் தெரிஞ்சிக்கிட்டு செய்யணும். தெரியாமச் செய்யக் கூடாது. அப்படிச் செஞ்சா இந்த மாதிரிதான் நடக்கும்.