ஒவ்வொரு ஊருலயும் ஒரு சாமியாரு இருப்பாரு. அவங்களப் பத்தின கதைகளும் இருக்கும். அப்படிப்பட்ட சாமியாரப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கத்துல வழங்கி வருது. சாமியாரு ஒருத்தரு ஒரு சமாதிக்குப் பக்கத்துல குடிசையப் போட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு.
எப்பப் பாத்தாலும் அந்த சமாதிய மெழுகி பூப்போட்டு வணங்கிக்கிட்டு இருப்பாரு. அதுக்குச் சூடம், சாம்பிராணி எல்லாம் போட்டு வர்றவங்களுக்குக் காட்டிட்டுப் பக்கத்துல ஒக்காந்து அவங்களுக்குக் குறி சொல்லுவாரு. அப்படி வர்றவங்க அந்தச் சாமியாருக்குக் காணிக்கையைக் கொடுத்துட்டுப் போவாங்க. அதனால அந்தச் சாமியாருக்கு நெறைய வருமானம் கெடச்சிக்கிட்டு இருந்துச்சு. சாமியாரு அந்தப் பணத்தை எல்லாம் தங்கமா மாத்தித் தன்னோட ஆசிரமத்துல வச்சிருந்தாரு. அவரு யாரையும் தன்கிட்ட சீடனாச் சேத்துக்கிறதே இல்லை.
இதப் பாத்த ஒருத்தன் எப்படியாவது இந்தச் சாமியாருக்கிட்ட சீடனாச் சேர்ந்து, அவரு வச்சிருக்கிற தங்கக் கட்டிகளைக் களவாண்டுக்கிட்டுப் போயிடனும்னு நெனச்சான். அப்படித் திருட முடியலைன்னா அந்த சமாதியோட ரகசியத்தையாவது தெரிஞ்சிக்கிட்டு வந்துடணும்னு நெனச்சி அந்த ஆசிரமத்தையும் சாமியாரையும் சுத்திச்சுத்தி வந்தான்.
அதப் பாத்த சாமியாரு இவன் எதுக்கு இப்படி வர்றான். ஏன் இங்கயே பழியாக் கிடக்கிறான்? இத விசாரிக்கணுமேன்னு நெனச்சிக்கிட்டு ஒருநாள் அவனக் கூப்புட்டு, ‘‘ஏப்பா நீ யாரு? எதுக்கு இங்கயே சுத்திச் சுத்தி வர்றே? ஒனக்கு என்ன வேணும்னு’’ கேட்டாரு.
அதுக்கு அந்தத் திருடன், ‘‘சாமி நான் ஒங்ககிட்ட சீடனாச் சேந்துக்கணும். ஒங்களுக்கு நான் பணிவிடை செய்யணும். ஒங்களுக்குத் தெரிஞ்ச வித்தை எல்லாத்தையும் நான் கத்துக்கணும். எனக்குக் கருணை காட்டுங்க’’ அப்படீன்னு சொன்னான்.
அதுக்கு அந்தச் சாமியாரு, ‘‘அப்பா நான் யாரையும் சீடனாச் சேத்துக்கறது இல்லை”ன்னு சொன்னாரு.
அதக்கேட்ட திருடன், ‘‘சாமி அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நீங்க என்னயச் சீடனா ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். இல்லைன்னா நான் இங்க ஒக்காந்து சாப்பிடாமயே இருந்து என்னோட உசிர விட்டுடறேன்”னு சொன்னான்.
சாமியாரும் அவம்மேல இரக்கப்பட்டு, ‘‘சரி, உன்னை என்னோட சீடனா ஏத்துக்கறேன். நான் சொல்றத மட்டும் செஞ்சாப் போதும். வேற எதையும் நீயா செய்யக் கூடாது”ன்னு சொன்னாரு.
திருடனும் சரின்னுட்டு அவருகிட்ட சீடனாச் சேந்துட்டான்.
சாமியாருக்கு வேண்டியதை எல்லாம் அவரு குறிப்பறிஞ்சி செஞ்சான் திருடன். உண்மையிலேயே அவன் நல்ல சீடனா நடந்துக்கிட்டான். அவனோட செயல்களைப் பாத்து அவரு அவன முழுசா நம்புனாரு. ஆனா அவரு தன்னோட பணங்காசெல்லாம் வச்சிருக்கிற எடத்தை மட்டும் அவனுக்குக் காட்டல. அவனும் அதப் பத்திக் கேக்கல. அவனுக்கு இந்தச் சாமாதியப் பத்தி மட்டும் தெரிஞ்சிக்கிட்டுப் போயிடுவோம்னு மெதுவா மெதுவா அந்த சாமாதியைப் பத்திக் கேட்டான்.
அவனோட நச்சரிப்புத் தாங்க முடியாததால அந்தச் சாமியாரு யாரும் இல்லாத சமயத்துல அவனக் கூப்பிட்டு, ‘‘சீடனே! நான் ஒரு கழுதைய வளத்துக்கிட்டு வந்தேன். அதுமேல எனக்கு ரொம்பப் பிரியம். நான் எவ்வளவு சுமைய வச்சாலும் அது தூக்கிக்கிட்டுப் போகும். கொஞ்சங்கூட எடக்குப் பண்ணாது. அதனால அந்தக் கழுதைய நான் நல்லாப் பாத்துக்கிட்டேன். அப்படி இருந்தப்ப திடீர்னு அந்தக் கழுதை செத்துப் போச்சி. அத அப்படியே ஒரு பெட்டியில வச்சி எடுத்துக்கிட்டுப் போயி இந்த ஊருக்கு வந்தேன். அப்படி வந்து இந்த மரத்தடியில அதப் பொதைச்சு மகான் இங்க சமாதி ஆயிருக்காருன்னு சொன்னேன். இந்த ஊரு மக்களும் அதை நம்பிட்டாங்க. நானும் இதை வச்சே இப்பக் காலந்தள்ளிக்கிட்டு இருக்கேன். இதுதான் இந்தச் சமாதியோட ரகசியம். இதை யாருக்கிட்டயும் சொல்லாத. இப்ப இந்தக் கழுதையோட குட்டிதான் இங்க நிக்குது. இப்பத் தெரிஞ்சிக்கிட்டியா”ன்னு சொன்னாரு.
அதுக்கு அந்தச் சீடன், ‘‘சாமி இதெயெல்லாம் வெளியில சொல்லமாட்டேன். எனக்கு அந்தக் குட்டிக் கழுதையத் தந்நீங்கன்னா போதும் இதுதான் நான் ஒங்கக் கிட்ட வேண்டுற பொருளு. இதத் தந்தீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போயிடும்”ன்னு சாமியாருக்கிட்ட வேண்டினான்.
அதைக் கேட்ட சாமியாரு, ‘‘அப்பா அதை என்னால கொடுக்க முடியாது. அதுக்கும் வயசாயிருச்சு. அந்தக் குட்டி நின்னா எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும். அதனால அந்தக் கழுதையக் கேக்காத. போயி வேலையப் பாரு’’ அப்படீன்னாரு.
திருடனாகிய சீடனால எதுவும் பேச முடியல. சரியான நேரத்தை அந்தச் சீடன் எதிர்பாத்துக்கிட்டு இருந்தான். அவனவிட அந்தச் சாமியாரு இவம் மேலயும் அந்தக் கழுதை மேலயும் ரொம்ப ரொம்பக் கவனமா இருந்தாரு. இப்படியேக் கொஞ்ச காலம் போயிருச்சு. அப்போதைக்கு அந்தச் சாமியாரு அசந்த நேரத்துல இந்தச் சீடன் இராத்தியோட இராத்திரியா அந்தக் கழுதையப் புடிச்சிக்கிட்டுக் கௌம்பிட்டான்.
அப்படிப் போனவன் பல மைல் தள்ளி இருக்கிற கிராமத்துல போயி குளத்தங்கரையில சாமியாரா தன்னை மாத்திக்கிட்டு அங்கேயேத் தங்கிக்கிட்டான். அப்போதைக்கு அவன் இழுத்துக்கிட்டு வந்த கழுதை ரொம்ப முடியாம இறந்து போயிருச்சு. இவன் ஒடனே அதை ஒரு மரத்தடியில ஒரு பொட்டிக்குள்ளாற வச்சிப் புதைச்சிட்டான். அப்படிப் பொதைச்சிட்டு அந்த பொதைகுழிய மெழுகி பொட்டெல்லாம் வச்சி கும்புட ஆரம்பிச்சான். அந்தப் பக்கம் போயிக்கிட்டு இருந்தவங்க இதப் பாத்துட்டு இது என்னாதுன்னு கேட்டாங்க. அவன், ‘‘இங்க ஒரு மகான் ஜீவ சமாதியாயி அடக்கமாயிருக்காரு. என்னைய வந்து கும்புடுறவங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுப்பேன். அவங்களோட குறைகளை எல்லாத்தையும் தீத்துவச்சிருவேன். இதை எல்லாருக்கிட்டயும் சொல்லு. நீதான் என்னோட சீடன்னு சொல்லிட்டுப் போனாரு. அதனாலதான் மகான் முத்தி அடைஞ்ச சமாதிய நான் பத்திரமா மெழுகிக் கோலம்போட்டு வணங்கிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னான்.
அதக் கேட்ட அவன், ‘‘ஐயா என்னோட மாடு ஒண்ணு காணாமப் போயிருச்சு. அதத் தேடிக்கிட்டுத்தான் வந்தேன். இப்ப இந்த மகானக் கும்புட்டுட்டுப் போயித் தேடப் போறேன். அந்த மாடு மட்டும் கெடைச்சிருச்சின்னா இந்த மகானுக்கு என்னால முடிஞ்சதச் செய்யிறேன் சாமி”ன்னு சொல்லிட்டு கழுதையப் பொதைச்ச இடத்தக் கும்புட்டு திருநீற எடுத்துப் பூசிக்கிட்டுப் போனான்.
இப்படியே வர்றவங்க போறவங்கக்கிட்ட எல்லாம் இங்க ஒரு மகான் ஜீவ சமாதி அடைஞ்சிருக்காருன்னும் அவர வணங்குனா நல்லது எல்லாம் நடக்கும்னும் சொல்லிக்கிட்டே இருந்தான். ரெண்டு மூணு நாள்ல அந்த மாடு தேடிப் போனவன் வேக வேகமா வந்தான். வந்தவன் சீடனாகிய சாமியாரக் கும்புட்டுட்டு, ‘‘ஐயா, என்னோட மாடு கெடைச்சிருச்சு. எல்லாம் இந்த மகானோட அருள்தான் காரணம். இந்த மகானுக்கு ஊருக்குள்ள உள்ள எல்லாருக்கிட்டயும் சொல்லி ஒரு பெரிய மண்டபம் கட்டச் சொல்றேன். ஒங்களுக்கும் ஒரு குடிலு கட்டச் சொல்றேன்”னு சொல்லிட்டுக் காணிக்கையும் கொடுத்துட்டுப் போனான்.
அவம் போயி ஊருக்குள்ளாறச் சொன்னவுடன் கூட்டம் அலைஅலையா வர ஆரம்பிச்சிருச்சு. எல்லாரும் சேந்து மண்டபம் எல்லாம் கட்டிக் கொடுத்தாங்க. சீடனாகிய சாமியாரும் நல்ல கொழுத்த பணத்தைப் பார்த்தான். நெறையப் பணம் சேத்தான். இங்க கூட்டம் அலை மோதினதால அவனோட பழைய குருவோட மகான் அடக்கமாகி இருக்கற சமாதிக்கு ஆட்கள் போகல. அதனால அவருக்கும் வருமானம் குறைஞ்சது.
இது எதுனாலன்னு தெரிஞ்சிக்கிறலாம்னு இந்தச் சாமியாரு விசாரிச்சி விசாரிச்சி சீடன் சாமியாரா இருக்கற மடத்துக்கு வந்தாரு. அவரு போன சமயத்துல கூட்டம் இல்லை. சீடச் சாமியாரைப் பாத்த குருவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. சீடனாகிய சாமியாரு தன்னோட குருவப் பாத்துட்டு ஓடி வந்து அவரை வரவேற்று, ஒரு ஆசனத்துல ஒக்காற வச்சான்.
குருவுக்கு ஏகப்பட்ட கடுப்பு. கோபத்தை வெளியில காட்டாம, ‘‘ஏப்பா என்னோட கழுதையைத் திருடிக்கிட்டு வந்துட்டு எப்படியப்பா இந்தமாதிரி ஆனன்னு’’ கேட்டாரு.
அதைக் கேட்ட சீடன், ‘‘குருவே! எல்லாம் இந்த சமாதியில ஐக்கியமாகி இருக்கற மகானோட மகிமை”ன்னு சொன்னான்.
குருவுக்கு ஒண்ணுமே புரியல. புரியாமலேயே, ‘‘ஏப்பா எந்த மகான்? எங்க இருந்தாரு? ஆமா ஏங்கிட்ட இருந்து திருடிக்கிட்டு வந்தியே அந்தக் கழுதை எங்கே? சொல்லப்பா’’ன்னு சொன்ன ஒடனே, சீடச் சாமியாரு,
‘‘ஹஹஹ..குருவே மகான் மகான்னு சொல்லி நீங்க அங்க ஏமாத்துனீங்கள்ள அதே மாதிரி ஒங்கக் கிட்ட இருந்து திருடிக்கிட்டு வந்த கழுதை செத்துப் போயிருச்சு. அதைத்தான் நீங்க சொன்ன மாதிரி இந்த ஜனங்கக்கிட்ட மகான் ஒருத்தரு ஜீவ சமாதி ஆயிட்டாரு. நான் அவரோட சீடன் அப்படி இப்படின்னு நெறையப் பொய்யச் சொன்னேன். எல்லாரும் நம்பி இப்ப பெரியஅளவுல வந்துட்டேன். எல்லாம் ஒங்கக்கிட்ட கத்துக்கிட்டதுதான். பேசாம கொஞ்சநாளு இருந்துட்டு ஒங்க இடத்துக்குப் போயிருங்க”ன்னு சொன்னான்.
அவனோட பேச்சக் கேட்ட குரு அதுக்குமேல பேச முடியாம அங்க இருந்து கிளப்பிட்டாரு. அவங்க ரெண்டுபேரும் தொடர்ந்து மக்கள ஏமாத்தத் தொடங்கிட்டாங்க.
ஏமாறுகிறவங்க இருக்கற வரைக்கும் ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படீங்கறதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டான கதை.