சிலர் தங்களுக்கு எது கிடைத்தாலும் மற்றவர்களுக்கு ஒரு துளி கூடக் கொடுக்க மாட்டார்கள். அதைத் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும். எதற்காக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தன்னலத்துடன் செயல்படுவார்கள். இது குறித்த கதை ஒன்று உள்ளது.
கடவுள் மேல அதிகமான பக்தியுள்ள ஒருத்தன் இருந்தான். அவன் எப்பப் பாத்தாலும் கடவுள் பேரைச் சொல்லிக்கிட்டே இருப்பான். ஆனாலும், அவன் எப்பவும் தான் நல்லா இருக்கணும்னு மட்டுமே நெனைப்பான். அதைத் தாண்டி அவனது சிந்தனை வேற எங்கயும் போகாது. அவன் சுயநலமா இருந்தாலும் கடவுளுக்கு அவம்பேர்ல கொஞ்சம் பிரியம் இருந்துச்சு. அதனால அவன் கேட்டத அவனுக்குக் கொடுத்தாரு. அவனும் அத வாங்கிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தான்.
அப்படி இருக்கறபோது அவனுக்குள்ளாற ஒரு ஆசை வந்தது. அமுதம் அமுதம்னு சொல்றாங்களே! அதை நாம கண்ணால பார்த்தது கூட இல்லையே... கடவுளநேராப் போய்ப் பாத்து அவருகிட்ட இருந்து நாம அமுதத்தை வாங்கிச் சாப்பிடணும். அதுக்கு இந்த ஒடம்போட கடவுளப் பாக்கப் போகணும்னு முடிவு செஞ்சான்.
அமுதத்தை வாங்குறதுக்காக அவன் தினமும் கடவுளுக்கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தான். எப்பப் பார்த்தாலும் அவனுக்கு இதே சிந்தனை. அவனது வாய் ஓயாம அவனோட விருப்பத்தை இறைவன் கிட்டச் சொல்லிக்கிட்டே இருந்தது. கடவுளுக்கிட்ட இருந்து எந்தவிதமான செய்தியும் இவனுக்கு வரல.
அவன் ரொம்ப வருந்தி கடவுளுக்கிட்ட கேட்டான். ‘‘சாமி இந்த ஒடம்போட ஒன்னையப் பார்க்க வந்து ஓங்கையால நான் அமுதம் வாங்கிச் சாப்பிடணும்னு நெனக்கிறேன். நீதான் எனக்கு இந்த ஆசையை நிறைவேற்றணும்”னு மனமுருகி வேண்டினான்.
கடவுளுக்கு அவன் மேல இரக்கம் வந்துருச்சு. சரி இவந்தான் கேட்டுக்கிட்டே இருக்கறான். அவனக் கூப்பிட்டு கொஞ்சம் அமுதத்தைக் கொடுப்போம்னு நெனச்சிக்கிட்டு அவனத் தன்னோட பூதகணங்கள அனுப்பி உடம்போட தன்னப் பாக்குறதுக்காகக் கூட்டி வந்தாரு.
உடம்போட கடவுளப் பாத்த அவனுக்குப் பரம சந்தோஷம். அவரோட காலில விழுந்து விழுந்து வணங்கினான். அவனோட பக்திப் பரவசத்தைப் பார்த்த கடவுள் அவன் கேட்ட அமுதத்தை ஒரு சிறிய குடத்துலக் கொடுத்து, ‘‘மகனே இந்தக் குடத்துல இருக்கற அமுதத்தை இப்பவேக் குடிச்சிரு. நீ கேட்ட அமுதத்தை நீ விரும்பியது போலவே ஒனக்குக் கொடுத்திருக்கேன். அமுதத்தைச் சாப்பிடு”ன்னு சொன்னாரு.
அதக் கேட்ட பக்கதனுக்குத் தலைகாலு புரியாத சந்தோஷம். அமுதம் குடிச்சவங்க நீண்ட நாளு இருப்பாங்கன்னு அவன் நெனச்சான். அதனால தானும் தன்னோட மனைவி குழந்தைகளும் சாப்பிடலாம்னு நெனச்சிக்கிட்டு, ‘‘சுவாமி நான் பூலோகத்துக்குப் போயி சாப்பிட்டுக்கிறேன்னான்’’. அதுக்குக் கடவுள், ‘‘அப்பா அமுதத்தப் பத்தி ஒரு விஷயத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ. நீ பூலோகத்திற்குக் கொண்டு போறாதா இருந்தா இந்தக் கலயத்தை எக்காரணங் கொண்டும் தரையில வைக்கக் கூடாது. அதோட மட்டுமில்லாம இதை கையில வைத்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக் கூடாது. அப்படிச் செஞ்சா இது மாயமா மறைஞ்சிடும்”னு சொல்லி அனுப்பிச்சாரு.
அமுதக் கொடத்த வாங்கிக்கிட்டவன் அதை ஒரு பெரிய துணியால நல்லாக் கட்டி கையில எடுத்துக்கிட்டுப் பூலோகத்துக்கு வந்தான். அப்படி வந்தவன் தன்னோட வீட்டுக்கு வேகவேகமா நடந்தான். அப்படிப் போயிக்கிட்டு இருக்கற போது அவனுக்கு வெளிய போற மாதிரி கடுமையா வயித்த வலிச்சது. கூடவே ஒண்ணுக்கும் போகணும்னு மாதிரி இருந்துச்சு.
கொஞ்சம் கட்டுப்படுத்திக்குவோம்னு பல்லக் கடிச்சிக்கிட்டு அடக்கிக்கிட்டு நடந்தான். கொஞ்ச தூரம் போயிருப்பான். அவனால எதையும் கட்டுப்படுத்த முடியல. என்ன செய்யிறதுன்னு யோசிச்சான். யாராவது எதுத்தாப்புல வராங்களான்னு பாத்தான். அப்பப் பாத்து தலையில முக்காட்டப் போட்டுக்கிட்டு ஒருத்தன் நடந்து வந்தான். அவன் பாக்குறதுக்கு அசிங்கமா இருந்தான்.
அவனப் பாத்த இவனுக்கு, ‘‘அப்பா கடவுளாப் பாத்து இவன அனுப்பி வச்சிருக்காரு. இவங்கிட்ட கொடுத்துட்டு நாம வெளிய போயிட்டு வந்துருவோம்”னு நெனச்சிக்கிட்டு, அவனக் கூப்பிட்டு, ‘‘ஐயா இது கொடிய நாகப்பாம்போட விஷம். இத ஒருத்தரு கொண்டுக்கிட்டு வரச்சொன்னாரு. அதனால நான் கொண்டுபோறேன். இதக் கீழ வைக்கக் கூடாது. நான் வெளிய போயிட்டு வந்துடறேன். கொஞ்ச நேரம் இத வச்சிருங்க. நான் போயிட்டு வந்துடறேன்”னு சொல்லி அவங் கையில அமுதம் நிறைஞ்ச குடத்தைக் கொடுத்துட்டுப் போனான்.
போனவன் ரொம்ப நேரமா எழுந்திருச்சி வரல. வந்தவன் குடத்தைத் தெறந்து பார்த்துட்டு அதை அப்படியேக் குடிச்சிட்டான். குடத்தைக் கொடுத்தவன் காலு கையெல்லாம் கழுவிட்டு வந்து குடத்தை வாங்குனவனத் தேடினான். அங்க ஒரு கட்டுமஸ்தான அழகான ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான்.
அவனப் பாத்த இவனுக்கு ஒண்ணும் புரியல. என்னடா ரெம்ப கர்ணகடூரமா இருந்த அந்தப் பயலக் காணோமேன்னு சுத்தும் முத்தும் பார்த்துத் தேடுனான். அவன் தேடுறதப் பாத்த இவன், ‘‘ஐயா என்னத்தைத் தேடுறீங்க. நீங்க குடத்தைக் கொடுத்த ஆளத்தானே! அந்த ஆளு நான்தான். வேற யாருமில்லை. எனக்கு குஷ்டரோகம். மேலெல்லாம் பொத்துப் பொத்து வடிஞ்சது. நோயோட கொடூரத்தை என்னால தாங்க முடியல. அதனால தற்கொலை பண்ணிக்கிடலாம்னு நெனச்சிக்கிட்டு சாகறதுக்காகப் போனேன். அப்பத்தான் நீங்க விஷம் நிறைஞ்ச குடத்தைக் கொடுத்தீங்க. சாகத்தானே போறோம். இந்தக் கொடிய விஷத்தைக் குடிச்சிட்டுச் செத்துப் போயிருவேமேன்னு நெனச்சி அதைக் குடிச்சிட்டேன். அதுக்குப் பெறகு என்னோட நோயி வேதனை எல்லாம் போயிருச்சி. இந்தாங்க இந்த விஷம் இருந்த குடம். நீங்க செஞ்ச உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ரொம்ப நன்றின்னு’’ சொல்லிட்டுக் கிளம்பிட்டான்.
இவனுக்கு ஒண்ணும் புரியல. அட நாம ரொம்ப நாளாக் கஷ்டப்பட்டு வாங்கிக்கிட்டு வந்த இந்த அமுதம் இப்ப யாரோ முகந்தெரியாத ஆளுக்கிட்ட போயிச் சேந்துருச்சேன்னு வருத்தப்பட்டான். அந்தக் குடத்தைத் தெறந்து பாத்தான். ஏதாவது மிச்சம் இருக்கும்னு. ஆனால் அந்தக் குடம் வழிச்சி தொடச்சிக் கழுவுனது மாதிரி இருந்துச்சு. அட ஆண்டவனே என்னோட சுயநலத்தால இப்படி ஆயிப்போயிருச்சே. நான் என்ன செய்யிறது. நம்மளோட சுயநலத்துக்குக் கிடைச்ச பரிசு இதுதான்னு நெனச்சி நொந்துக்கிட்டு வீட்டுக்குப் போனான்.
ரொம்பவும் சுயநலமா யாரும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா நமக்கு எதுவும் கிடைக்காது. நாம கடைசியில எல்லா நல்லவற்றையும் இழக்கறது மாதிரி ஆயிடும். இந்தக் கதை சுயநலத்தோட யாரும் இருக்கக் கூடாதுங்கறதுக்காக பெரியவங்களால சொல்லப்பட்டு வந்தது.