இறைவன் முயற்சியும் உழைப்பும் உள்ள மனிதர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பான். முயற்சி செய்யாதவங்களுக்கு இறைவன் உதவி செய்ய மாட்டான். இறைவன் மீது பக்தி செலுத்தும் அடியவராக இருப்பினும் முயற்சியும் உழைப்பும் ஒருவனிடம் இருத்தல் வேண்டும். இதைப் பற்றிய கதை ஒன்று இவ்வட்டாரத்தில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
ஒரு கிராமத்துல ரெண்டு பேரு இருந்தாங்க. ஒருத்தன் பேரு சோமு. இன்னொருத்தன் பேரு ராமு. ரெண்டுபேரும் சாமிமேல ரெம்ப பக்தி உள்ளவங்க. தினமும் கோவிலுக்குப் போயி சாமியக் கும்புட்டுட்டு அதுக்குப் பிறகுதான் தங்களோட வேலைங்களைச் செய்வாங்க.
அதிலும் ராமு நல்ல உழைப்பாளி. எதையும் முயற்சி செஞ்சு பார்த்துருவான். ஆனால் சோமு எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்க வந்து தனக்கு ஒதவி செய்யணும்னு நெனைப்பான். இப்படி இருந்த சோமுவைப் பார்த்து ராமு, ‘‘டேய் சோமு ஒன்னைய நீ மாத்திக்க. எப்பவும் அடுத்தவங்க நமக்கு வந்து ஒதவி செய்வாங்கண்ணு நெனக்காதே. நாமளும் நம்மளால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்யணும். அது நமக்கு எப்போதும் கைகொடுக்கும். நாம கொஞ்சமாவது முயற்சி செய்யாம அடுத்தவங்களையே எப்போதும் நம்பி இருந்தா நாம முன்னேற முடியாது. அதே மாதிரி நாமளும் மத்தவங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் ஒதவி செய்யணும்டா”ன்னு அறிவுரை சொல்லுவான்.
ஆனால் ராமு சொல்றதை சோமு கேக்காம, “டேய் மரத்த வச்ச ஆண்டவன் தண்ணி ஊத்தாமப் போகமாட்டான்டா. நாம முயற்சி செய்யலைண்ணாலும் ஆண்டவன் நமக்கு ஓடி வந்து உதவி செய்வான்டா”ன்னு மறுத்துப் பேசுவான்.
இவங்க பக்கத்து ஊருக்கு ஒவ்வொரு நாளும் தங்களோட மாட்டு வண்டியில விறக ஏத்திக்கிட்டுப் போயி போட்டுட்டு வருவாங்க. அதுல கிடைக்கிறப் பணத்தை வச்சிக்கிட்டு ரெண்டுபேரும் வாழ்ந்துங்கிட்டு இருந்தாங்க.
இப்படி இருக்கறபோது ஒரு நாளு ராமு விறகு ஏத்தறதுக்கு வரல. அவனுக்குக் கொஞ்சம் வேலை இருந்ததால அவனால விறகு ஏத்திக்கிட்டுப் போறதுக்கு முடியலை. அதனால சோமு மட்டும் விறக ஏத்திக்கிட்டு பக்கத்து ஊருக்குப் போய்கிட்டு இருந்தான்.
அப்ப சரியான மழை. கொட்டோ கொட்டுன்னு கொட்டத் தொடங்கிடுச்சி. சோமு வண்டிய ஒரு ஓரமா நிப்பாட்டி வச்சிட்டு மழை நின்னதுக்கப்புறம் போகலாம்னு நின்னுட்டான். மழையும் நின்னது. மறுபடியும் சோமு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போனான்.
வண்டி போயிக்கிட்டே இருந்தது. அப்ப வழியில ஒரு காட்டாத்துல மழைபேஞ்சதுனால தண்டி ஓடிக்கிட்டு இருந்துச்சு. தண்ணி அதிகமா இல்லை. அதனால சோமு வண்டிய தைரியமா காட்டாத்துல குறுக்க ஓட்டிக்கிட்டுப் போனான்.
அப்படிப் போறபோது வண்டி காட்டாத்தக் கடந்து பக்கத்துல இருக்கற பள்ளத்துக்குள்ளாற மாட்டிக்கிருச்சு. சோமு மாட்ட தட்டி அடிச்சி ஓட்டிப்பாத்தான். வண்டி நகரல. வண்டிச் சக்கரம் நல்லா சகதியில சிக்கிக்கிருச்சு. ரெம்ப தரை ஈரமா இருந்ததால மாடுகளால வண்டிய இழுக்க முடியல.
சோமுவுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அவன் வண்டியவிட்டு இறங்கி, “கடவுளே என்னோட வண்டிய சகதியில இருந்து தள்ளிவுடு. இப்படி வண்டிச் சக்கரம் சிக்கிக்கிருச்சே நான் என்ன செய்யிறது. கடவுளே கடவுளே இங்க வந்து என்னோட வண்டிய சகதியில இருந்து மேல தூக்கிவிட்டுரு”ன்னு கடவுளுக்கிட்ட மனமுருக வேண்ட ஆரம்பிச்சிட்டான்.
வழியில போறவுங்க வாரவுங்க எல்லாரும் அவனப் பாத்துட்டு என்னமோ இந்தாளு செஞ்சிக்கிட்டு இருக்கான்னு நெனச்சிக்கிட்டு அவங்க பாட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தாங்க. சோமுவும் ரொம்ப நேரமாக கடவுள வேண்டிக்கிட்டே இருந்தான். கடவுள் வரலை. சோமுவுக்கு ரொம்பக் கோவமாப் போயிருச்சு.
“கடவுளே ஒன்னைய எவ்வளவு நம்பி இப்ப அழைச்சிருப்பேன். ஆனா நீ வந்து எனக்கு ஒதவி செய்யலையே. நான் யாருக்கிட்ட போவேன். எம்மேல ஒனக்குக் கருணையே இல்லையா”ன்னு மறுபடி மறுபடி கடவுள நெனச்சி வேண்டிக்கிட்டே இருந்தான்.
அவனோட வேண்டுதலக் கேட்ட கடவுள், அவன் மேல இரக்கப்பட்டு அவன் முன்னால வந்து நின்னாரு. கண்ணத் தொறந்து பாத்த சோமுவுக்கு தலைகாலு புரியல. சந்தோஷத்தால குதிச்சான். கடவுள் சோமுவப் பாத்து, “எதுக்கு நீ என்னயக் கூப்புட்ட. ஒனக்கு என்ன வேணும் சொல்லு” அப்படீன்னாரு.
சோமு கடவுளப் பாத்து, “கடவுளே என்னோட வண்டிச் சக்கரம் இந்தப் பள்ளத்துல உள்ள சேத்துல சிக்கிக்கிருச்சு. அத நீ தூக்கிவிடணும். இதுக்காகத்தான் நான் ஒங்களக் கூப்புட்டேன்”னு சொன்னான்.
கடவுள் சோமுவப் பாத்து சிரிச்சாரு. “அட முட்டாள். இதுக்குப் போயா என்னையக் கூப்புடணும். வழியில போறவங்க வாரவுங்களப் பாத்து கொஞ்சம் இந்த வண்டியத் தள்ளி விடுங்க”ன்னு சொன்னா வந்து தள்ளிவுடப் போறாங்க. அப்படியே இல்லை. நீயே மாடுகளப்புடுச்சி முன்னால இழுத்துக்கிட்டுப் போயி முயற்சி செஞ்சிருக்கலாம். இல்லை வண்டிப் பின்னால நின்னு நீயே தள்ளி மாட்ட விரட்டி சேத்துல இருந்து வண்டிய ஓட்டி இருக்கலாம். அதெல்லாம் விட்டுப்போட்டு நீ எந்த முயற்சியும் செய்யாம என்னையக் கூப்புடுறியே! இதுக்கெல்லாம் போயி நீ என்னையக் கூப்புடலாமா? ஒன்ன மாதிரி முயற்சி செய்யாதவனுக்கும் ஒழைக்காம இருக்கறவனுக்கும் நான் வந்து ஒதவி செய்யமாட்டேன். நீயா முயற்சி செஞ்சி இதுல இருந்து போகமுடியும் போ முயற்சி செய். என்னையக் கூப்புடாதே”ன்னு சொல்லிட்டுக் கடவுள் மறைஞ்சிட்டாரு.
சோமுவுக்கு அப்பத்தான் புத்தி வந்தது. அடடா. நாமலே முயற்சி செஞ்சிருக்கலாமோ. இல்லை. வழியில போறவங்களக் கூப்புட்டு நாம ஒதவி கேட்டுருக்கலாமோ. இதெல்லாம் நமக்குத் தோணாமப் போச்சே. அது மட்டுமில்லாம நம்ம முன்னால கடவுளு வந்து ஒனக்கு என்ன வேணும்”னு கேட்டபோது முட்டாள் தனமா இந்த வண்டிச் சக்கரத்தத் தூக்கிவிடுன்னு கேட்டுட்டோமே. ச்சே நம்மளோட அறியாமையை என்ன சொல்றதுன்னு நொந்து போயி, இனிமே நாமளே முயற்சி செய்வோம். நாம முயற்சி செஞ்சா நமக்குக் கடவுள் நாம கூப்புடாமலேயே வந்து ஒதவுவாருன்னு நெனச்சிக்கிட்டு வழியில போறவங்களக் கூப்புட்டு வண்டிய சேத்துல இருந்து எடுத்துக்கிட்டுக் கிளம்பினான்.
கடவுள் முயற்சி செய்யிறவனுக்குத்தான் ஒதவி செய்வாருங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.