எல்லாம் இறைவனது அருளால் தான் இவ்வுலகில் நடைபெறுகின்றது. நாம் நினைப்பதை விட தெய்வம் நினைப்பதுதான் நடக்கின்றது. இறைவனது அருள் ஒருவருக்கு முழுமையாகக் கிடைக்கப் பெற்றால் அவர்களுக்கு எந்தவிதமான துன்பங்களும் வராது. மனிதன் கைவிட்டாலும் இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஓருயிரைக் காப்பதும் அதனை மாய்ப்பதும் இறைவனே! இது குறித்த கதை ஒன்று இவ்வட்டாரத்தில் மக்களிடையே வலம் வருகின்றது.
ஒரு பெரிய காடு இருந்தது. அதில் மான், சிங்கம், கரடி, புலி என பல மிருகங்கள் வசித்து வந்தன. அந்தக் காட்டுக்கு வேடர்கள் வேட்டையாடுவதற்கும் வருவாங்க. அடர்த்தியான காடாக இருந்ததால வேட்டையாடுறவங்களைத் தவிர வேற யாரும் வரமாட்டாங்க. அப்படிப்பட்ட காட்டுல ஒரு கலைமான் குட்டி போடுற நிலையில இருந்தது. அது குட்டி போடுவதற்காக அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருந்தது.
கடைசியில அது ஒரு ஆலமரத்தடியை குட்டி போடுறதுக்காகத் தேர்ந்தெடுத்து அங்கே போய் நின்றது. அந்தச் சமயம் காட்டுக்குள்ளாற வேட்டையாடுறதுக்காக வில்லோட வந்த வேடன் ஒருத்தனோட கண்களில் இந்தப் பிள்ளத்தாச்சி மான் தென்பட்டது.
இந்த மான் அவனைப் பாக்கலை. அதுபாட்டுக்குக் குட்டி ஈன்றதுலேயே கவனம் செலுத்தியது. அப்படி இருக்கறபோது பசியோட ஒரு கருஞ்சிறுத்தை ஒன்று இரையைத் தேடி அந்தப் பக்கமா வந்துக்கிட்டு இருந்தது. அந்தச் சிறுத்தையோட கண்ணுலயும் இந்த குட்டிபோடக் கூடிய நிலையில இருந்த மான் தென்பட்டது.
கருஞ்சிறுத்தை மெதுவா மெதுவா நடந்து வந்துகிட்டே இருந்தது. அப்ப அந்தச் சிறுத்தை கண்ணுல அந்த வேடன் தென்பட்டான். அதனால அந்த சிறுத்தை பதுங்கிப் பதுங்கி மெதுவா வரத் தொடங்கியது. இதையும் அந்த மான் பாக்கலை. ஒருபக்கம் மானை வேட்டையாடக் கூடிய வேடன் வில்லை எடுத்துக் குறி பார்க்கத் தொடங்கினான். மறுபக்கம் கருஞ்சிறுத்தை மான்மேல பாயுறதுக்குச் சமயம் பாத்துக்கிட்டு இருந்தது.
இந்தச் சமயத்துல காட்டுல பெருந்தீ ஏற்பட்டது. அந்தத் தீ காற்று வீசியதால கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி குட்டி போடுற மானை நோக்கி வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் வேடன், மறுபக்கம் காட்டுத்தீ, இன்னொருபக்கம் கருஞ்சிறுத்தை இப்படி நாலாபக்கமும் மானைக் கொல்றதுக்காக ஆபத்துக்கள் நெருங்கிக்கிட்டு இருந்துச்சு.
ஆனா மான் எதைப் பற்றியும் கவலைப்படலை. குட்டிய ஈன்றதுலேயே அதன் கவனம் இருந்தது. அதை மேலுலகத்தில இருந்து பார்த்த இறைவன் அந்த மானை எப்படியாவது காப்பத்தணும்னு நெனச்சாரு. ஒடனே வானத்துல திடீரென ஒரு மின்னல் வெட்டியது. அந்த மின்னல் மானை நோக்கி அம்பக் குறிவச்ச வேடனைத் தாக்கியது.
அதனால பார்வை பறிபோன வேடன் அலறிக்கிட்டே கீழ விழுந்தான். அப்ப அவனோட கையில இருந்த வில்லுல இருந்து அம்பு நேராப் புறப்பட்டுப் போயி மானைக் கொல்றதுக்குப் பதுங்கி இருந்த கருஞ்சிறுத்தை மேல பட்டுச்சு. சிறுத்தை இறந்துருச்சு.
அப்பறம் வானத்துல இடிஇடிச்சி மழைபெய்ய ஆரம்பிச்சது. அந்த மழை பெய்ததால காட்டுத்தீ அணைஞ்சிருச்சி. மானும் குட்டிய போட்டுச்சு. மானும் குட்டியும் பொழைச்சிக்கிட்டாங்க. இறைவன் காப்பாத்தணும்னு நெனச்சா யாரையும் எந்தச் சூழல்லையும் எப்பவும் காப்பாத்துவான். அதைப் போன்று யாரை அழிக்கணும் நெனைக்கிறானோ அதையும் சரியாச் செஞ்சிருவான். இறைவன நம்பினவங்களை அவரு ஒருபோதும் கைவிடமாட்டாருங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.