ஒரு ஊருல ஒரு நாய் இருந்துச்சு. அது ஒரு தெரு நாய். எப்பப் பார்த்தாலும் அது எந்தத் தெருவுலயாவது சுத்திக்கிட்டுத் திரியும். ஒவ்வொரு தெருவுலயும் குடியிருக்கறவுங்க மீந்து போன சாப்பாட்டத் தெருவுல போடறபோது அதைச் சாப்பிட்டு அந்த நாய் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு.
இப்படி இருக்கற போது அந்த நாய்க்கு ஒரு ஆசை வந்துச்சு. அதுக்கு ஆட்டு எலும்பக் கடிச்சுத் திங்கணும்னு ஆசை. தெருத்தெருவா ஆட்டு எலும்பு கிடைக்குமான்னு தேடித் தேடி அலைஞ்சது. ஆனா ஒரு வீட்டுல இருந்தும் எலும்பு கூடக் கெடைக்கல.
ஆட்டு எலும்புக்கு எங்க போறது? அப்படீன்னு அந்த நாய் யோசிச்சது. அந்த ஊருல இருக்கற கறிக்கடைக்கெல்லாம் போயிப் பார்த்தது. ஆனாலும், ஒரு சின்னத் துண்டு எலும்பு கூடக் கெடைக்கல. அந்த நாய்க்கு ஆசை அடங்கல. எப்படியாவது ஆட்டு எலும்பக் கடிச்சித் திங்கனும்னு நெனச்சிக்கிட்டு எலும்பத் தேடி அலைஞ்சது.
அப்படித் தேடித்தேடி அது ஆத்தங்கரைப் பக்கம் வந்துருச்சு. கரைப்பக்கம் தேடுனபோது ஒரு எலும்பு ஒண்ணு நாய்க்குக் கெடைச்சது. அதப் பாத்த ஒடனேயே அந்த நாய்க்கு வாயில எச்சில் ஊறிடுச்சு. அதை ஓட்டமா ஓடிப் போயி வாயில கவ்வுச்சு. ஆனா அந்த எலும்பு ரொம்ப நாளாக் கெடந்த எலும்பு அதுல ஒண்ணுமில்லை.
அதுல ஒண்ணுமில்லாட்டியும் அதைப்போட்டு சவஞ்சிக்கிட்டு இருந்துச்சு அந்த நாய். எலும்ப நாய் கடிச்சக் கடியில அது ஒடஞ்சி அந்த நாயோட வாயில குத்திக் கிழிச்சிருச்சு. அந்த நாயோட வாயில இருந்து ரத்தம் வந்துருச்சு.
ரத்தம் வந்தத அந்த நாய் கவனிக்கல. அந்த எலும்புல இருந்துதான் இந்த ரத்தம் வருதுன்னு நெனச்சிக்கிட்டு அந்த நாயி தன்னோட ரத்தத்தையே நக்கி நக்கிக் குடிக்க ஆரம்பிச்சிருச்சு. ஆஹா இந்த எலும்பு எவ்வளவு சுவையா இருக்கு அப்படீன்னு நெனச்ச நாயி முன்னக் காட்டிலும் இப்ப பலமா அந்த எலும்பக் கடிச்சிச்சு.
அப்படிக் கடிச்சதால அந்த எலும்பு ஒடஞ்சி அந்த நாயோட தொண்டைக்குள்ளாற மாட்டிக்கிருச்சு. அதை அந்த நாயால எடுக்க முடியல. தொண்டையில குத்துன எலும்பு தொண்டையக் கிழிச்சிக்கிட்டு வெளியில வந்துச்சு. ரத்தம் முழுவதும் வடிஞ்சி நாயி செத்துப் போச்சு.
அறியாமையால சிலபேரு எதையும் புரிஞ்சிக்காம, ஆசையில விழுந்து அந்த ஆசையிலேயே உயிரையும் போக்கிக்கிறாங்க. இதுதான் உலக இயல்பு. இந்த உலக இயல்பைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது.