இந்த உலகத்தில் யாரும் திருப்தியோட வாழ்வதில்லை. மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டே தங்களுடைய வாழ்க்கையை கரடு முரடாக ஆக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்தல் வேண்டும். யாருக்கு இறைவன் எதைக் கொடுக்க வேண்டுமோ அப்படியே இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றான். இதை வலியுறுத்தும் கதை ஒன்று இவ்வட்டாரத்தில் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு வீட்டுல ஒரு வெள்ளாடும் ஒரு பசுமாடும் இருந்ததுங்க. அதுக ரெண்டும் நண்பர்களா இருந்துச்சுங்க. அப்படி நண்பர்களா அதுக இருந்தாலும் அந்த வெள்ளாட்டுக்கு மனசுக்குள்ளாற ஒரு ஏக்கமும் அதே சமயம் பசுமாட்டுமேல ஒருவிதமான பொறாமையும் இருந்துச்சு. ஆனா அதை வெள்ளாடு வெளியில காட்டிக்காமலேயே பசுமாட்டோடு நட்பா இருந்து வந்துச்சு.
எதுனால இந்தப் பொறாமை வெள்ளாட்டுக்கு வந்தது? அது அந்த வெள்ளாட்டுக்கு இருந்த மனப்பான்மைதான் காரணம். இந்த வெள்ளாடு எப்பப் பாத்தாலும் பசுவோட தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கும். தனக்கும் பசுவுக்கும் எதெதுல ஒத்துமை. எதெதுல வேற்றுமைன்னு பாக்கும். அப்படிப் பாக்குறபோது சிலது வெள்ளாட்டவிட பசுமாட்டுக்கு உயர்ந்ததா இருக்கும் அதை நெனச்சிக்கிட்டு வெள்ளாடு மனம் புழுங்கும்.
அந்த வெள்ளாடு எல்லாத்தையும் பொறுத்துக்கிருச்சு. ஆனா தனக்கும் பசுமாட்டுக்கும் இருக்குற வாலை மட்டும் ஒப்பிட்டுப் பாத்துப் பாத்து அதைமட்டும் பொறுத்துகிட முடியல. இந்த ஆண்டவன் நம்மமேல இப்படி வஞ்சகம் காட்டக் கூடாது. நமக்கு வாலைச் சிறிசா வச்சிட்டு, இந்த மாட்டுக்கு மட்டும் பெரிய வால வச்சிருக்கானே! இந்த வஞ்சகத்தைப் போயி யாருக்கிட்ட சொல்றது. ஆண்டவனுக்கு இப்படி ஓர வஞ்சனை இருக்கலாமா? அடக் கடவுளே! ஏன் இப்படி என்னையப் படைச்சேன்னு மனசுக்குள்ளாறயே மறுகும்.
இப்படியே இருந்துக்கிட்டு இருந்தபோது அந்த வெள்ளாட்டுனால சரிய மேய முடியல. வரவர அது ரொம்ப ஒடம்பு மெலிஞ்சிக்கிட்டே போச்சு. பசுக்கிட்ட கூட அந்த ஆடு சரியாப் பேசல. இதப் பாத்த பசுமாடு அந்த வெள்ளாட்டப் பாத்து, “ஏன் நண்பா ஒனக்கு ஒடம்பு எதுவும் சரியில்லையா? ஒடம்புக்கு என்ன பண்ணுது. வரவர நீ மெலிஞ்சிக்கிட்டே போறியே? ”ன்னு கேட்டது.
அதுக்கு அந்த வெள்ளாடு, “ஒண்ணுமில்லை நண்பா. ரொம்ப நாளா எனக்குள்ளாற ஒரு கேள்வி மனசப் போட்டு அரிச்சிக்கிட்டே இருக்கு. ஆனா அதை ஒன்கிட்ட கேட்டா நீ கோவிச்சிக்குவியோன்னு யோசனையா இருக்கு. சரி ஏன் அதப் பத்திப் பேசற. இத விட்டுரு”ன்னு சொல்லிட்டுத் திரும்பிக்கிடுச்சு. அதுக்குப் பசுமாடு, “இங்க பாரு. நீ எதைச் சொன்னாலும் நான் கோபப்படமாட்டேன். நீ பேசாம இருக்கறதுதான் தப்பு. எதுவாக இருந்தாலும் என்கிட்ட மனசுவிட்டுச் சொல்லு”ன்னு சொன்னது.
அதுக்கு வெள்ளாடு, “சரி சொல்றேன். இந்த ஆண்டவனுக்கு ஏன்தான் இந்த ஓரவஞ்சனையோ தெரியலை? உனக்குப் பெரிய வாலைப் படைச்சிட்டு எனக்கு மட்டும் சின்னதா வச்சிப் படைச்சிருக்காரு? இதுதான் எனக்குப் பெரிய வருத்தமா இருந்துச்சு. உனக்கு இருக்கற மாதிரி எனக்கும் பெரிய வால் இருந்த எப்படி இருக்கும்னு நெனச்சி நெனச்சி எனக்கு மனசு கஷ்டமாப் போச்சு”ன்னு சொன்னது.
இதைக் கேட்ட மாடு, “அட இதுக்குப் போயித்தான் இப்படி வெசனப்படுறியா? ஒனக்கு ஒடம்பெல்லாம் நெறைய முடி இருக்கு. அதனால கொசுவோ ஈயோ ஒன்னக் கடிக்காது. ஆனா என்னைய இந்த ஈயும் கொசுவும் எப்படி கடிக்குது தெரியுமா? ஒடம்பெல்லாம் வலிக்குது. அதுக கடியில இருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் எனக்கு ஆண்டவன் வாலைப் பெரிசாப் படைச்சிருக்கான். இது தெரியாம ஆண்டவனைக் குறைசொல்றீயே? இது சரியா”ன்னு சொன்னது.
இருந்தாலும் வெள்ளாட்டின் மனசு சமாதானமடையல. மாட்டைப் பாத்து, “இருந்தாலும் என்னோட வாலை ஆண்டவன் இன்னும் கொஞ்சம் பெரிசாப் படைச்சிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்”னு திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
அதுக்கு பசுமாடு, “இதோ பாரு, திரும்பத் திரும்பச் சொன்னதையேச் சொல்லாதே. சும்மாவா சொன்னாங்க. ஆட்டுக்கும் அளந்துதான் வச்சிருக்கான்னு. பேசாம இருப்பியா? சும்மா சும்மா ஆண்டவனக் கொறை சொல்லிக்கிட்டு இருக்கே”ன்னு சொன்னது.
வெள்ளாடு, “அது என்ன ஆட்டுக்கும் அளந்துதான் வச்சிருக்கான்னு சொல்றே. ஏன் ஒனக்கு மட்டும் அளக்காம வச்சிருக்காறா. இதக் கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்”னு மாட்டைப் பார்த்துக் கேட்டது.
அதுக்கு மாடு, “நண்பா நான் சொல்றதக் கேட்டு மனசு சங்கடப்படாத. உள்ளதத்தான் சொல்லப் போறேன். எனக்கு ஏன் வாலைப் பெரிசாப் படைச்சான்னா என்னைக் கடிக்கிற கொசுக்களையும் ஈக்களையும் விரட்டுறதுக்காகத்தான் தெரிஞ்சிக்கோ. அதுமட்டுமில்லாம நான் தேவைன்னாத்தான் என்னோட வாலை ஆட்டுவேன். ஆனா நீ தேவை இருந்தாலும் இல்லாட்டியும் சும்மா சும்மா வாலை ஆட்டிக்கிட்டே இருப்பே. அது மத்தவங்களுக்குப் பெரிய தொந்தரவா இருக்கும். அதனாலதான் ஒன்னோட வாலை ஆண்டவன் சிறிசாப் படைச்சிருக்காரு. இது தெரியாம நீபாட்டுக்கு ஆண்டவனைக் கொறை சொல்லிக்கிட்டு என்மேலயும் பொறாமைப்பட்டுக்கிட்டு கவலைப்பட்டுக்கிட்டுத் திரியற. இனிமே இப்படி இருக்காத”ன்னு புத்திமதி சொன்னது.
இதைக் கேட்ட பின்னாலதான் ஆட்டுக்குப் புரிஞ்சது. ஆஹா நாம புரியாம எதைஎதையே நெனச்சிக்கிட்டு இருந்துட்டமேன்னு வெக்கப்பட்டு மாடுக்கிட்ட மன்னிப்புக் கேட்டுச்சு.
ஆண்டவன் யாராருக்கு எதை எதைக் கொடுக்கணுமோ அதைக் கண்டிப்பாக் கொடுப்பான். யாருக்கு எதைக் கொடுக்கணுமின்னு அவனுக்குத் தெரியும். இது புரியாம பலரும் குழம்பிக்கிட்டு இந்த உலகத்துல மத்தவங்களக் குறை சொல்லிக்கிட்டுத் திரியறாங்க. யாரையும் புரிஞ்சிக்கிட்டு எதையும் சொல்லணும். அதுதான் சரி. இதைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது