சிலபேரு எதுவாக இருந்தாலும் அடுத்தவங்க நம்பும்படி சொல்வாங்க. பொய்யக் கூட உண்மைன்னு நம்பும்படி சொல்றதுல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. இவங்க சொல்றத நம்புறதுக்கு ஆளு இருந்தாங்கன்னு வச்சுங்கங்க அவங்கபாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே இருப்பாங்க... சிலபேரு தங்களுக்கு ஆளு இருக்குதுன்னு நடக்காததை எல்லாம் நடந்தது மாதிரி ஜோடிப்பாங்க... அவங்க வழியில போயித்தான் அவங்களத் திருத்த முடியும்.
ஒருத்தன் தன்னோட ஊருலருந்து பக்கத்துல இருந்த டவுனுக்குப் போயி அங்க நடக்கிற சந்தையில நல்ல குதிரையா வாங்கலாம்னு நடந்தே போனான். குதிரைச் சந்தைக்குப் போயி நல்ல குதிரையாப் பாத்து வாங்கிக்கிட்டு நடந்தே வந்தான். அந்தக் குதிரை குட்டி போடுற நெலமையில இருந்தது. அதனால அந்தாளு குதிரைய மெதுவாவே ஓட்டிக்கிட்டு வந்தான்.
அந்தமாதிரி பக்கத்தூருக்கு வர்றபோது இருட்டிப் போச்சு. அதனால அவன் ஊருக்கு வெளியில ஒரு எடத்துல இருந்த செக்குல குதிரையக் கட்டிப்போட்டுட்டு ஊருக்குள்ளாறப் போயி சாப்பிட்டு வந்துட்டு செக்குக்குப் பக்கத்திலேயே படுத்துகிட்டான்.
நடந்து வந்த அசதியில அப்படியே தூங்கிட்டான். நல்லா விடிஞ்சிருச்சு. எந்துருச்சுப் பாத்தான். அப்ப குதிரக் குட்டியப் புடுச்சிக்கிட்டு ஒருத்தன் வெளையாண்டுக்கிட்டு இருந்தான். அதப்பாத்த குதிரைய வாங்கிக்கிட்டு வந்தவன், “யோவ் இது என்னோட குதிரை போட்ட குட்டி அத விட்டுருய்யா’ன்னான். அதக்கேட்ட அந்தாளு, ‘‘வாய்யா வா... என்னோட செக்கு போட்ட குட்டி இது தெரியுமா...? நீபாட்டுக்கு பேசாமப் போயிரு” அப்படீன்னு மிரட்டுனான்.
குதிரைக்காரன், “செக்குக் குட்டி இல்லய்யா, இது குதிரைக் குட்டிய்யா... என்னோட குதிரைக் குட்டிய விட்டுரு... நீ இந்தமாதிரி பேசறது சரியில்லை... யார வேணுமின்னாலும் கேட்டுப்பாரு... இது என்னோட குதிரை போட்ட குட்டி... அதவிட்டுரு... நா என்னோட ஊருக்கு ஓட்டிக்கிட்டுப் போகணும்னு” சொன்னான்.
ஆனா செக்குக்காரன் குதிரைக் குட்டிய விடல. குதிரைக்காரனுக்கு ஒண்ணும் புரியல. அவன் எவ்வளவோ செக்குக்காரங்கிட்ட சொல்லிப் பாத்தான். ஆனா அவன் அதைக் காதுலேயே போட்டுக்கல... அதோடு மட்டுமில்லாம அவன் ஊருக்குள்ளாறப் போயி அவங்க ஆளுகளக் கூட்டிக்கிட்டு வந்து, “என்னோட செக்கு குட்டி போட்டுருச்சு... இது செக்குபோட்ட குட்டி... நீ ஒன்னோட குதிரையப் புடிச்சிக்கிட்டுப் போயிரு... இல்லாட்டி ஒனக்கு வேண்டியவங்கள கூட்டிக்கிட்டு வா... பஞ்சாயத்து வச்சிக்குவோம்”ன்னு சொன்னான்.
குதிரைக்காரனுக்கு ஒண்ணும் புரியல, அவனோட ஊருக்குப் போறதுன்னா ரெம்ப தூரம் போகணும்... சரி மெதுவா நடந்து போயி கூட்டிக்கிட்டு வருவோம்னு நொந்து போயிப் போனான். அவனோட ஊருக்குப் போறதுன்னா ஒரு பெரிய காட்டக் கடந்து போகணும். காட்டுக்குள்ளாற பயந்துகிட்டே போனான். எனக்கு யாரு தொணையா வருவான்னு நெனச்சிக்கிட்டே போனான்.
அப்போதைக்கு அவன் முன்னால ஒரு நரி வந்துச்சு. குதிரைக்காரன் பொலம்பிக்கிட்டும் அழுதுகிட்டும் போனதப் பாத்துட்டு அவன் மேல ரொம்ப இரக்கபட்டு அவனப் பார்த்து, “ஏய்யா இப்படிப் பொலம்பிக்கிட்டும் அழுதுகிட்டும் போற... எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. நான் ஒனக்கு ஒதவுறேன்னு” சொன்னது.
அவனும் பொலம்புறத நிறுத்திட்டு நடந்ததச் சொல்லிட்டு, “ஏஞ்சார்பா பேசறதுக்கு யாரு இருக்கா...ன்னு” திரும்பவும் பொலம்பிக்கிட்டு அழ ஆரம்பிச்சான். அதப் பார்த்த நரி, “நீ கவலப்படாத நான் ஓஞ்சார்பா பஞ்சயத்துல பேறதுக்கு வாரன்னு” சொல்லிட்டு அவனக் கூட்டிக்கிட்டு குதிரை குட்டிபோட்ட செக்கடிக்குப் போச்சு.
அங்கே அந்த ஊருக்காங்க எல்லாரும் ஒக்காந்துகிட்டு இருந்தாங்க. குதிரைக்காரனப் பார்த்துட்டு, “என்னய்யா ஒனக்குப் பேசறதுக்கு யாரய்யா கூட்டியாந்துருக்கே”ன்னு கேட்டாங்க.
அதுக்குக் குதிரைக்காரன், “ஐயா ஏஞ்சார்பாப் பேசறதுக்கு இந்த நரியத்தான் கூட்டியாந்துருக்கேன். ஏஞ்சார்பா அது பேசும்னு” சொன்னான். அதக்கேட்டு அந்த ஊரு ஆளுக சிரிச்சாங்க.
பஞ்சாயத்துத் தொடங்கிச்சு. அந்த ஊருக்காரங்க செக்குக்காரனுக்குச் சாதகமாப் பேச ஆரம்பிச்சாங்க. என்னென்னமோ சொல்லி கடைசியில செக்குத்தான் குட்டி போட்டுச்சு... அதனால இந்தக் குட்டி செக்கு போட்ட குட்டிதான்... செக்குக்காரனுக்குத்தான் இது சொந்தம்னு...” சொன்னானுக.
நரி அந்தச் சமயத்துல கண்ண மூடிக்கிட்டுத் தூங்கிக்கிட்டு இருந்துச்சு. அதப் பாத்த அந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரு, “என்னய்யா பஞ்சாயத்துக்கு வந்த ஆளு இப்படித் தூங்கிக்கிட்டு இருக்கற”ன்னு கேட்டு சிரிச்சாரு.
அதுக்கு நரி, “ராத்திரி கடல்ல தீப்புடிச்சிருச்சி அத ரொம்ப நேரமா நானே நின்னு அணைச்சிட்டு வந்தேன்... அதனால சரியாத் தூங்க முடியல... இப்ப கொஞ்சம் கண்ண அசத்திருச்சு”ன்னு சொன்னது.
அந்த ஊரு நாட்டாமை கெக்கபிக்கன்னு சிரிச்சிட்டு, “ஏய்யா என்ன காது குத்துரியா... கடல்ல எப்பவாது நெருப்புப் புடிக்குமா... அதுல நீ மட்டும் போயி தனியா அணைச்சிட்டு வர்ரியா... பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு வேணாம்...”ன்னு கேட்டாரு.
உடனே அந்த நரி கோபமா, “ஆமாய்யா, ஒங்க ஊருல செக்குக் குட்டிபோடலாம்... ஆனா கடல்ல தீப்பிடிக்காதா...?”ன்னு கேட்டவுடனே அந்த ஊராளுக ஆஹா நாம ஓரநாயஞ்சொல்றம்னு இந்த நரி கண்டுபிடிச்சிருச்சி...ன்னு எல்லாரும் தலையக் குனிஞ்சிக்கிட்டு இருந்தாங்க.
நரி அவங்களப் பாத்து, “ஏய்யா ஒருத்தன் அப்புராணியா இருந்தா நீங்கள்ளாம் குதிரைக் குட்டியப் புடிச்சி செக்குக்குட்டின்னு பொய் சொல்லி அவன ஏமாத்தப் பாப்பிங்களா... நீங்க சொல்லறது உண்மைன்னா நாஞ்சொல்றதும் உண்மைதான்...” னு சத்தம் போட்டவுடனே அந்த ஊராளுக தப்பு நம்ம மேலதான்னு ஒத்துக்கிட்டு குதிரைக் குட்டிய குதிரையோட குதிரைக்காரங்கிட்ட கொடுத்துட்டு அவங்கிட்டயும் நரிக்கிட்டயும் மன்னிப்புக் கேட்டாங்க.
குதிரைக்காரனும் நரிக்கு மனசாற நன்றியச் சொல்லிட்டு தன்னோட ஊருக்கு குதிரைய ஓட்டிக்கிட்டுப் போனான். நரியும் காட்டுக்குள்ளாற குதிரைக்காரனுக்குத் தொணையா வந்துட்டு பெறகு தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு.