ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் சாமி கும்புடவே மாட்டான். அவனுக்கு அப்பா இல்ல. அவனோட அம்மா தன்னோட மகன் சாமியும் கும்புட மாட்டேங்குறான் திருநீறு கொடுத்தாப் பூசவும் மாட்டேங்கிறானேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அந்தம்மா எத்தனையோ தடவை சொல்லிப் பாத்துட்டாங்க அவன் கேக்குறமாதிரி இல்ல.
அவங்க துணி நெசவு செய்யறவுங்க. பையனும் அவங்க தொழிலயே செஞ்சிக்கிட்டு இருந்தான். அந்த அம்மா மகனக் கூப்புட்டு, “மகனே நீ கோயிலுக்குப் போகாட்டியும் விபூதியாவது பூசிக்க. ஒன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்” அப்படீன்னு சொன்னாங்க.
ஆனா அவன், “அம்மா இதெல்லாம் எனக்குப் புடிக்காது. என்னயத் தொந்தரவு செய்யாதே... பேசாம வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டான். அந்த அம்மாவுக்கு மனசு கஷ்டமாப் போயிருச்சு. மகன் சொல்லறதக் கேக்க மாட்டேங்குறானேன்னு ரொம்ப நொந்து போயிட்டாங்க. அவங்களுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு.
படுத்த படுக்கையா ஆகிப் போயிட்டாங்க. அவங்க சாகப் போற நேரத்துல மகனக் கூப்பிட்டு, “மகனே, என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துறியா? நீ வந்து திருநீறப் பூசமாட்டே. பரவாயில்ல... ஆனா திருநீறப் பூசனவங்கள மட்டும் காலையில பாத்துட்டு அப்பறமா நீ வேலையப் பாரு. தினந்தோறும் இப்படிச் செஞ்சிட்டு நீ வேலையப் பாத்துக்கிட்டு வா... இந்தக் கடைசி ஆசையயாவது அம்மாவுக்காகச் செய்வியா...?”ன்னு கேட்டாங்க.
அவனும் சரி, அம்மா சாகப் போற நேரத்துல கேக்குறாங்களேன்னு திருநீறு பூசுறவங்களப் பாக்க மட்டும்தானே சொல்றாங்க... அது நம்மால முடியும் பாத்துருவோம்னு அம்மாகிட்ட சரின்னு வாக்குக் கொடுத்துட்டான். அந்த அம்மாவும் இறந்து போயிருச்சு.
மறுநாளு அவன் வேலையப் பாக்குறதுக்கு முன்னால திருநீறு பூசுனவனப் பாக்கனுமேன்னு நெனச்சபோது அவனுக்கு அவனோட பக்கத்து வீட்டுல சட்டிபான செய்யறவன் திருநீறு பூசறது ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒடனே ஓடிப்போயி அவனப் போயிப் பாத்துட்டு வந்தான். அந்த சட்டிபான செய்யிறவன். காலையில எந்திருச்சு சாமியக் கும்பிட்டுட்டு நெற்றி நிறையத் திருநீறு பூசிக்கிட்டு சட்டிபான செய்யத் தொடங்குவான்.
அவனப் பாத்துட்டுத் தெனமும் ஓடிவந்து தறிக்கட்டயில ஒக்காந்து வேலையப் பாக்க ஆரம்பிச்சிடுவான். இப்படியே நாளு போயிக்கிட்டே இருந்துச்சு. அப்படி இருக்கறபோது ஒருநாளு இவன் வேலையப் பாக்குறதுக்கு முன்னால அவனப் போயிப் பாத்துட்டு வந்துடலாம்னு அவனோட வீட்டுக்குப் போனான். ஆனா சட்டிபான செய்யிறவன் அங்க இல்ல.
அங்கங்க அவனத் தேடினான். காணோம். பொழுதும் ஆயிருச்சு. சட்டிபான செய்யிறவன் பொண்டாட்டிகிட்ட கேட்டதுக்கு அவன் சட்டி பான செய்யிறதுக்காக கண்மாய்க்கு வண்டியக் கட்டிக்கிட்டுப் போனதத் தெரிஞ்சிக்கிட்டான். சரி கம்மாய்க்குப் போயிப் பாத்துட்டு வந்துருவோம்னு நெனச்சிக்கிட்டு ஓட்டம் ஓட்டமா ஓடுனான். சட்டி பான செய்யிறவன் கம்மாய்க்குள்ளாற உள்ள பெரிய பள்ளத்துக்குள்ள மண்வெட்டியால மண்ண வெட்டிக்கிட்டு இருந்தான். அப்ப டம்னு ஒரு சத்தம் வந்துச்சு. மம்மபட்டியப் போட்டுட்டு அந்த எடத்துல இருந்த மண்ணக் கிளறிவிட்டான். ஒரு வெங்கலப் பான அதுக்குள்ளாற இருந்துச்சு. மண்ண நோண்டி நோண்டி அத மெதுவா வெளியில எடுத்துத் தொறந்து பாத்தான்.
அந்தப் பானை நெறயத் தங்கக் காசு இருந்துச்சு. ஆகா நமக்குத் தங்கப் புதையல் கெடைச்சிருச்சு. இதயாராவது பாக்குறாகளான்னு நெனச்சுப் பள்ளத்துக்குள்ளாற இருந்து மெதுவாத் தலையத்தூக்கி வெளியில பாத்தான். அப்ப அந்த நெசவு செய்யறவன் வேகவேகமா வந்தவன் அவனப் பாத்துட்டு, “ஆகா நாம் பாத்துட்டேன் நாம் பாத்துட்டேன்னு” கத்திக்கிட்டே வீட்டப்பாக்க ஓடுனான்.
சட்டி பான செய்யிறவனுக்கு பயமாப் போயிருச்சு. “அடடா... என்னடா இது வம்பாப் போயிருச்சு. நாம யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நெனச்சோம் இந்தப் பய பாத்துட்டு நாம் பாத்துட்டேன் பாத்துட்டேன்னு கத்திக்கிட்டு வேற போறான். அவனக் கூப்புட்டு இத யாருக்கிட்டயும் சொல்லாதடான்னு சொல்லணும்னு” நெனச்சிக்கிட்டு கொஞ்சம் மண்ண அள்ளிப் போட்டு அந்தப் புதையல் பானை மறைச்சி எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனான்.
வீட்டுக்குப் போனவன் அந்த நெவாளியக் கூப்புட்டான். எதுக்கு என்னான்னு தெரியாம நெய்யிறத விடடுட்டு இவனும் போனான். சட்டி பான செய்யிறவன், “இங்க பாரு... நான் புதையல் எடுத்ததப் பார்த்தத யாருகிட்டயும் சொல்லிப்பிடாத... நாம ரெண்டுபேரும் சமமா வச்சிக்கிருவோம்”ன்னு சொல்லி அந்தப் பானையத் தூக்கிக்கிட்டு வந்து அதுல இருந்த தங்கக் காசக் கீழ கொட்டி சரிசமமா அவனுகிட்ட பாதியக் கொடுத்தான்.
துணி நெய்யிறவனுக்கு ஆச்சரியமாப் போயிருச்சு. அட நாம அவன் திருநீறு பூசியிருக்கறதப் பாத்ததப் பாத்துட்டேன்னு சொன்னோம், இவன் புதையலப் பாத்துட்டதா நெனச்சிக்கிட்டாம் போலருக்கு... பரவாயில்ல... திருநீறு பூசிக்கிட்டவனப் பாத்ததுக்கே ஆண்டவன் இப்படி நெறயப் புதையலத் தந்தாருன்னா உண்மையிலயே திருநீறப் பூசுனம்னா ஆண்டவன் எப்படியெல்லாம் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பாருன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு புதையல அள்ளிக்கிட்டு வந்து அம்மா படத்துக்கு முன்னால வச்சி கும்புட்டான்.
திரும்ப அம்மா படத்தப் பாத்துட்டு, “இனிமே நானும் தெனந்தோறும் திருநீறப் பூசிக்குவேம்மா... நீ சொன்னதக் கேக்குறம்மா... இனி நீ சொன்னதுமாதிரி நானும் கோயிலுக்குப் போறேம்மான்னு” கும்புட்டான். அன்னியில இருந்து அவன் கோயிலுக்குப் போயி சாமியக் கும்புட்டுட்டு திருநீறப் பூசிக்கிடடு வந்துதான் வேலையப் பார்ப்பான். இப்படியே அவன் சந்தோஷமா இருந்தான்.