வீடு கட்டும் பல்லிகள்
நமது வீட்டில் பல இடங்களிலும் வீட்டுப் பல்லிகளை பார்க்கலாம். சுவர்களில் மின் விளக்குகளின் அருகிலும், மாட்டப்பட்ட படங்களின் பின்னாலும், மின்சாரச் சந்திப்புப் பெட்டிகளிலும் இவைகள் வாழ்கின்றன. இந்தப் பல்லிகளைப் பார்த்ததுமே அருவெறுப்பும், பயமும் சிலருக்கு ஏற்படும். வேறு சிலர் பல்லிகளை எப்படியாவது அடிப்பதற்குத் துடிப்பார்கள். அடிக்க முடியாதவர்கள் அதன் மீது எதையாவது வீசிக் கொல்லப் பார்ப்பார்கள்.
பல்லிகள் பலவகையில் நமக்கு நன்மை செய்கின்றன. இவை வீடுகளில் உள்ள ஈ, கொசு, கரப்பான், சில சமயங்களில் குட்டித் தேள்கள் ஆகியவற்றை அழித்து நம்மைக் காப்பாற்றுகின்றன. இது நமது நண்பன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்லிகளில் சில வித்தியாசமான செய்கைகளைக் கொண்ட பல்லிகளும் இருக்கின்றன.
தண்ணீரில் நடக்கும் பல்லிகள்
நமது ஊர்ப்பல்லிகள் சுவற்றில் தலைகீழாக நடக்கின்றன, தண்ணீரில் நடக்கும் பல்லி இனம் ஒன்று அமெரிக்காவில் வாழ்கிறது. ஏசுகிறிஸ்து தண்ணீரின் மீது நடந்து அதிசயம் செய்தார். அதைப்போல இந்தப் பல்லியும் நடப்பதால் அவர்கள் இந்த பல்லி இனத்தை ஜீசஸ் பல்லி என்றே அழைக்கின்றனர்.
அறிவியில் அறிஞர்கள் இந்த இனத்தை பாசிலிகஸ் பல்லிகள் என்று அழைக்கின்றனர். இவை அதிகம் சுறுசுறுப்பே இல்லாத சோம்பேறியான வாழ்க்கைக் குணம் உடையவை. இவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரப்பல்லிகளான இவைகளை எதிரிகள் பிடிக்க வரும்போது அவற்றிடம் இருந்து தப்பிக்க உடனே மரத்தில் இருந்து கீழே குதிக்கின்றன. அருகே உள்ள நீர்நிலையிலோ அல்லது அந்த மரங்களின் அடியில் உள்ள நீர்ப்பரப்பிலோ விழுந்து தண்ணீரின் மேலே லாவகமாக நடந்து அக்கறைக்குச் சென்று உயிர் தப்புகின்றன.
இந்தப் பல்லிகள் தங்கள் காலினால் சக்தியை உருவாக்கி அதை தனது கால்களில் தேக்கி வைத்துக் கொண்டு நீரின் மீது நடப்பதற்குப் பயன்படுத்துகின்றன. இந்தப் பல்லி தண்ணீரின் மீது ஓடும் போது சிறுசிறு கொப்புளங்கள் தோன்றுவது மிக அழகாக இருக்கும். பிறக்கும் போது இரண்டு கிராம் எடையுள்ள இவைகள் வளர்ந்து பெரிதாகும் போது 200 கிராம் எடையை அடைகின்றன. இவைகள் தண்ணீரின் மீது ஒரு நொடிக்கு ஐந்து அடி முதல் பதினைந்து அடிகள் வரையில் ஓடுகின்றன.
வீடு கட்டும் பல்லிகள்
மணலுக்கு அடியில் வீடுகட்டி வாழும் பல்லிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பாலைவனத்தில் வாழும் ராட்சதப் பல்லிகள் மணலுக்கு அடியில் வீடுகட்டி வாழ்க்கை நடத்துகின்றன என்ற அதிசயத் தகவலை ஆஸ்திரேலிய அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தில் பல்லிக் குடும்பங்கள் வசிக்கின்றன. இவைகள் திட்டமிட்டு குடும்ப வாழ்க்கை நடத்துகின்றன. அதிக வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தரைக்கு அடியில் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்கின்றன.
இவைகள் கட்டும் வீடுகளில் நிறைய வாசல்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்குச் செல்வதற்கு வழிகளும் காணப்படுகின்றன. இந்த வீடு சுமார் 40 அடி நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் சராசரியாக 20 வாசல்கள் காணப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு குடும்பத்தில் உள்ள அத்தனை பல்லிகளும் வேலை செய்கின்றன. குட்டிப் பல்லிகளுக்காக தனி இடம் ஒதுக்கப்படுகிறது. மனிதர்களைப்போலவே தங்கள் வீட்டை தங்களுக்குப் பிறகு தங்கள் வாரிசுப் பல்லிகளே பயன்படுத்த வேண்டும் என்பதிலும் இந்தப் பல்லிகள் உறுதியாக இருப்பதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லிகள் அமைத்த வீட்டில் அவைகள் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் குடும்பத்தோடு வாழ்கின்றன. உலகம் முழுவதும் ஐந்தாயிரம் வகையான பல்லி இனங்கள் உள்ளன ஆனால் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்த ராட்சதப்பல்லி இனம் மட்டுமே வீடுகட்டி வாழ்கின்றன.
- வேணு சீனிவாசன், கல்பாக்கம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.