மனிதர்களின் அலட்சியத்தினாலும், அகம்பாவத்தினாலும் பலதரப்பட்ட விலங்குகளும், பறவைகளும் இந்தப் பூமியில் இருந்து அழிந்து வருகின்றன. அந்தப் பட்டியலில் தவளை இனமும் சேருகிறது. இரவுகளில் தாலாட்டுப் போல வரும் தவளைச் சத்தத்தை இன்றும் கூட மழைக்காலங்களில் நாம் கேட்கலாம்.
இந்த உலகின் வெப்பம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், உலகில் பல தவளை இனங்கள் அழிந்து விட்டன. தங்கத்தவளை இனம், அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட தி வெஸ்டன் டோட் என்ற இனம் ஆகியவை இன்று அழிந்து போய் விட்டன. 1972 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடிய கேஸ்டிங் ப்ரூடிங் என்ற தவளை இனம் தற்போது முற்றிலுமாக அழிந்து விட்டது.
விவசாய வயல்கள் குடியிருப்புக்களாக மாறி விடுவதாலும், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பலநாடுகளில் மக்கள், தவளைகளை உணவாகவே சாப்பிடுவதாலும், பலவிதமான ஆராய்ச்சிகளுக்குத் தவளைகள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதாலும் இந்த இனம் வெகுவேகமாக அழிந்து வருகிறது.
1978 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 3500 டன் தவளையின் கால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்காக ஆறுகோடித் தவளைகள் கொல்லப்பட்டன. இது ஒரு வருடத்தின் கணக்கு, இவ்வாறு பல வருடங்கள் தொடர்ந்து தவளைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
அந்தக் காலத்தில் தவளைகளை விவசாயிகள் தங்கள் நண்பர்களாக நினைத்தார்கள். இவைகள் புழு, பூச்சிகளின் எண்ணிக்கை பெருகாமல் கட்டுக்குள் வைப்பதற்குப் பெரிதும் பயன்பட்டன. ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐம்பது தவளைகளாவது இருந்தால் தான் பூச்சிகள் மிகச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்படும். இதற்காக யாரும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கவேண்டாம். கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சமும் கவனமும் இருந்தாலே போதுமானது.
தவளைகள் கொசுக்களை லார்வா பருவத்திலேயே தின்று அழிப்பதால் கொசுக்களை அழிப்பதற்காக நாம் தனியாக எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை. கொசுக்களால் உருவாகும் மலேரியா, டிங்கு போன்ற காய்ச்சலைப் போக்கவும் மருத்துவச் செலவு செய்ய வேண்யடிதில்லை. தவளைகளைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாத காரணத்தினால், நாம் அன்று அவைகளை ஏற்றுமதி செய்துவிட்டு,இன்று அயல்நாடுகளில் இருந்து பூச்சிக்கொல்லி ரசாயனங்களை பல மடங்கு விலைகொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் நஷ்டம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள்.
எனவே தற்போது கொசுக்களைக் கொல்வதில் ஆர்வம் காட்டுவதைப் போலவே நாம் தவளைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறையும், ஆர்வமும் எடுத்துக் கொள்வதே எதிர்காலத்திற்கு நல்லது. உலக வெப்ப உயர்வின் காரணமாகவே தவளை இனம் இந்தப் பூமியில் அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் வெப்பத்தைக் குறைப்பதற்கு மரங்களை நடுவோம், இரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை குறைவாகப் பயன்படுத்துவோம், மழை நீரைச் சேமிக்க முயற்சிகள் செய்வோம். இவ்வாறு நடந்தால் சூழலியல் பாதுகாக்கப்படும்.