என்னுடைய கடவுள்
கன்னடம்: தேவனூரு மஹாதேவ
தமிழ்: முனைவர் க. மலர்விழி & மதுமிதா
கன்னடத்தின் சிறந்த வாரப்பத்திரிகை ஒன்று, ‘என்னுடைய கடவுள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கேட்டு, அவர்கள் கட்டுரையாக எழுதியதை வாங்கிப் பிரசுரித்துக் கொண்டிருந்தது. தற்செயலாக, அவர்கள் என்னையும் கேட்டால், எதற்கும் இருக்கட்டுமென்று, நான் எந்தக் கடவுளைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் பத்திரிகை ஆசிரியர், எனக்கு கடவுள் இல்லையென்று முடிவு செய்தோ என்னவோ, என்னிடம் என்னுடைய கடவுளைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்கவே இல்லை. அதனால், நான் ஊகித்து உருவகப்படுத்திக் கொண்டிருந்த என்னுடைய கடவுள் எனக்குள்ளேயே குடியிருந்தது. என்னுடைய கடவுள் எனக்குள் குடியிருந்தது இப்படி…
கவிஞர் சித்தலிங்கய்யா, ஒரு முறை எனக்குச் சொன்ன ஒரு கதையில், மனெமஞ்சம்மா என்ற கிராம தேவதையின் உள்ளிருந்து என்னுடைய கடவுள் தோன்றியது. என்னுள் அது தங்கி இருப்பது இப்படி…
ஒரு முறை கிராமத்தில் இருக்கும் மக்களெல்லோரும் ஒன்று சேர்ந்து, தங்களுடைய தேவதைக்கு ஒரு கோயில் கட்டத் தொடங்குகிறார்கள். அப்படிக் கட்டும் போது, அந்தக் கோயில் மேற்கூரை போடும் அளவுக்கு எழுந்து வந்தபோது, ஒருவன் உடலில் அந்த தேவதை மஞ்சம்மா எழுந்தருளி, ’நிறுத்துங்க என் புள்ளைங்களா’ என்று கூப்பாடு போட்டாள்.
அந்த சத்தத்தைக் கேட்டு மக்கள், தங்களுடைய வேலைகளை நிறுத்தி, எதுவும் புரியாமல், எதுவும் செய்யத் தோன்றாமல் நின்று பார்த்துக் கொண்டிருக்க, அந்த தேவதைக்கும் அந்த மக்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தது.
“என்ன புள்ளைங்களா… என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க?”
“உனக்கு ஒரு கோயில் கட்டிக்கிட்டு இருக்கோம் தாயே”
“ஓஹோ எனக்கேச் கோயில் கட்டிக்கிட்டிருக்கீங்களா? அப்படின்னா உங்களுக்கெல்லாம் வீடு இருக்கா என் புள்ளைங்களே?”
“எனக்கு வீடு இல்ல தாயி” என்றான் அங்கிருந்த ஒருவன்.
“அப்படின்னா எல்லாருக்கும் வீடு கிடைக்கிற வரையில எனக்கும் வீடு வேண்டாம்” இப்படிக் கூறிய மஞ்சம்மா தேவி, அப்போதிருந்து மனெமஞ்சம்மா ஆகிறாள்.
மேற்கூரை இல்லாத கோயிலில் தாய் மனெமஞ்சம்மா இன்று பூஜைக்கு உரியவளாக இருக்கிறாள். இது போலவே மேற்கூரை இல்லாத கோயிலில், கருணை நிறைந்த பாகுபாடு பார்க்காத புத்தனை வைத்தால், அவன்தான் என்னுடைய கடவுள் ஆவான்.
*****
தேவனூரு மஹாதேவ
இவர் பிறந்தது 1948 இல் ஏதோ ஒரு மாதத்துத் திங்கள்கிழமை. மைசூர் மாவட்டத்தின் சிக்கவலந்தெ. ஹுணசூரு, ஹொம்மரகள்ளி, தேவனூரு, சாலிகிராம மற்றும் மைசூரில் கல்வி. சில காலம் மைசூரில் உள்ள சிஐஐஎல் (C.I.I.L) இல் வேலை செய்தவர். வேலையை ராஜினமா செய்துவிட்டு தற்போது விவசாயம் செய்கிறார். “ஒடலாள” புத்தகத்தை கல்கத்தா பாரதீய பாஷா பரிஷத் 1984 இல் சிறந்த படைப்பாக்க நூல் என்று கௌரவித்துள்ளது. 1990 இல் இவருடைய, “குஸுமபாலே” நூலுக்கு சென்ட்ரல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கர்நாடக ராஜ்யோத்ஸவ விருது, பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கின்ற மஹாதேவா அவர்கள் 1989 இல் அமெரிக்காவில் நடந்த இன்டர்னேஷனல் ரைட்டிங் நிகழ்வில் கலந்து கொண்டார். “தியாவனூரு”, “ஒடலாள”, “ஆர்எஸ்எஸ் ஆள மத்து அகல”, “எதெகெ பித்த அக்ஷரா” மற்றும் “குஸுமபாலே” இவருடைய படைப்புகள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.