வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சம்பந்தியம்மா பேபி ராணி வந்து இறங்கினார். வயது 52. ரோஜா நிறம். எமோஷனல் பெர்சனாலிட்டி. பள்ளப்பட்டியில் இஸ்லாமியப் பள்ளியில் தலைமை ஆசிரியை.
“அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்!”
“வஅலைக்கும் ஸலாம் சிஸ்டர்!” என்றார் ஆர்னிகா.
“பாத்தியா ஓதி முடிச்சாச்சா?”
“முடிச்சிட்டோம்!”
“உங்க மனாஸ்கார்டன் மக்களுக்கு ஒரு விருந்து சமைச்சுப் போட்டிருக்கலாம் பிரதர்!”
“செலவை சுருக்கிட்டோம்!”
“இன்னைக்கு மதியம் தானே கிளம்புறீங்க!”
“ஆமா… மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் 16160-ல் கிளம்பி தாம்பரத்துக்கு நள்ளிரவில் 2.45 மணிக்கு போய் விடுவோம். ஏழரை மணிக்குத்தான் துபாய் பிளைட்!”
உள்ளே வரும்போது ஆர்னிகாவுக்கு பள்ளப்பட்டியில் வாங்கிய பூந்திப் பொட்டலத்தைக் கொடுத்தார்.
தேநீர் கொடுத்தேன்.
நானும் சம்பந்தியம்மாவும் தனியறை ஒதுங்கினோம்.
“மச்சி! தொழுது முடிச்சவுடனே என்ன சொல்வீங்க?”
“சுபஹானல்லாஹ் 33 தடவை சொல்வேன். அல்லாஹு அக்பர் 33 தடவை சொல்வேன். அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை சொல்வேன். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹமீது வஹுவ அல குல்லி ஷய்இன் கதீரை ஒரு தடவை சொல்லி நூறை நிறைவு செய்வேன்!”
“பிரமாதம்!”
“மகிழ்ச்சி!”
“உம்ரா செய்றது பற்றி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நான் ஒரு தடவை நினைவூட்டுகிறேன். உம்ரா என்பது இஹ்ராம் அணிதல், தவாப், சயீ (தொங்கோட்டம்) தலைமுடி மழித்தல் அல்லது கத்தரித்தல் போன்ற செயல்களை உடைய ஒரு வணக்கம் ஆகும். உம்ரா பூர்த்தியாவதற்குரிய நான்கு விஷயங்கள்;
1. மீக்காத் எல்லையில் இஹ்ராம் கட்டி நிய்யத்து செய்தல்.
2. காபாத்துல்லாஹ்வை தவாப் செய்தல்.
3. ஸபா - மர்வாவுக்கு இடையே சயீ தொங்கோட்டம் செய்தல்.
4. தலை முடி இறக்குவது.”
ஆமோதித்தேன்.
“இஹ்ராமில் இருக்கும் போது விலக்கப்பட்ட எட்டு விஷயங்களை பார்ப்போம்.
1. இச்சை சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பேசுவது இஷாரா செய்வது கூடாது.
2. பாவமான காரியங்கள் செய்யக்கூடாது.
3. சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது.
4. தையல் உள்ள ஆடைகள் அணிவது கூடாது.
5. தலை, முகம், புறங்கைகளை மூடுவது கூடாது.
6. நகம், முடி, அழுக்கு இவைகளை நீக்கக்கூடாது.
7. வாசனைத் திரவியங்கள் பூசுவது, சாப்பிடுவது, குடிப்பது கூடாது.
8. ஹரமுடைய எல்லையில் வேட்டையாடுவது வேட்டைப் பொருட்களை காட்டிக் கொடுப்பது மற்றும் பச்சைப் புற்பூண்டுகளை பிடுங்குவது கூடாது!”
முறுவலித்தேன்.
“மீக்காத் எல்லையில் குளித்து அல்லது ஒளூ செய்து இஹ்ராம் அணிந்து கொண்டு உம்ரா நிய்யத்து செய்து இரண்டு ரக்காயத் நபில் தொழுவது கடமை. இஹ்ராம் ஆடை அணியும்போது செய்ய வேண்டிய நிய்யத்து ‘லெப்பைக்கல்லா ஹும்ம உம்ரத்தன்’ ஆகும். தமிழ் அர்த்தம் – ‘நாயனே! உனக்காகவே உம்ராவை நிறைவேற்றுகிறேன்’ என்பதே!”
“சரி!”
“நிய்யத்து வைத்தவுடன் காபாவை வந்தடையும் வரை தல்பியா கூற வேண்டும். ‘நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். நாயனே! உனக்கு நிகரானவர் எவருமில்லை. உனக்கு இணையாக எதுவுமில்லை. நாயனே! உன்னிடமே வந்துவிட்டேன். நிச்சயமாக புகழ், அருள், ஆட்சி அனைத்தும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை!”
“இந்த நிய்யத்து தெரியும் மச்சி!”
“காபத்துல்லாஹ்வை ஏழு முறை தவாப் செய்ய வேண்டும். முதல் முறை காபாவை பார்க்கும் போது அதிகமாக துஆ செய்ய வேண்டும். காபா ஆலயத்தை அடைந்ததும் வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதலாம். ‘அல்லாஹ்வின் திருநாமம் கூறி நுழைகிறேன். கருணையும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக. நாயனே! உன் பாவத்தை மன்னித்துவிடு. மேலும் உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடுவாயாக. மகத்தான நாயனைக் கொண்டும் சங்கையான அவனது முகத்தைக் கொண்டும் பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் சாபத்திற்குள்ளான சைத்தானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் பாதுகாவல்
தேடுகிறேன்!”
“எனக்கு மனப்பாடமாகத் தெரியும் மச்சி!”
“பிரதருக்கு தெரியாதததை சொல்லிக் கொடுங்கள்… அது மிக நல்லது!”
“சரி!”
“புனித காபாவை ஏழுமுறை சுற்ற ‘உம்ராவுக்கான தவாபை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்’ என்கிற தூய எண்ணத்துடன் காபாவின் தென்கிழக்கு மூலையில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும். கல்லை கையால் தொட முடியாத அளவுக்கு கூட்டமிருந்தால் அதனை கையால் தொடுவது போல சைகை செய்து கொள்ளலாம்.
“ஹஜருல் அஸ்வத் கல்லை இடப்பக்கமாக்கி தவாபை தொடங்க வேண்டும். ஏழுசுற்றுகளில் முதல் மூன்று சுற்றுகளை வேகமாக நடந்தும் பாதங்களை நெருங்கி வைத்தும் சுற்ற வேண்டும். இதனை அரபியில் ‘ரமல்’ என்பர். பிந்திய நான்கு சுற்றுகள் நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு தவாப் செய்யும்போது தங்களது மேலாடையை வலது தோள்புஜம் மட்டும் திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது ஒருவர் தமது உடலின் மேற்பகுதியை மறைக்கும் இஹ்ராம் உடைத்துண்டின் நடுப்பகுதியை அவரது வலதுகையின் கீழால் கொண்டுவந்து அதன் இரு தொங்கல்களையும் இடது தோள்புஜத்தின் மேல் பகுதியில் போட்டுக்கொள்ள வேண்டும். இதனை அரபியில் ‘இழ்திபா’ என்பர். இது ஆண்களுக்கான வழிமுறை!”
“ஆமாம்!”
“ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடையே வரும் போது ‘எங்கள் நாயனே இம்மை மறுமை இரண்டிலும் நன்மையை அருள்வாயாக. மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!’ என ஓத வேண்டும்”
“சரி!”
“காபாவின் வடபகுதியில் இடுப்பளவு அரைவட்டமான ஒரு பகுதி உள்ளது. அதுவும் காபாவுக்கு உட்பட்டது. அதனை ‘ஹிஜ்ர்’ என்பர் இதனையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும். இதற்கு ஹதீம் என்று கூறப்படும்!”
“ஓகே!”
“தவாப் செய்து முடித்தவுடன் காபாவில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று இரண்டு ரக்காயத்துகள் தொழ வேண்டும். முதலாவது ரக்காயத்தில் பாத்திஹா ஸுராவையும் குல்யா அய்யுஹல் காபிருனையும் இரண்டாவது ரக்காயத்தில் பாத்தியா ஸுராவையும் குல்குவல்லாஹு அஹ்தையும் ஓத வேண்டும். தொழுது முடித்தபின் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு ஜம்ஜம் நீரை பருக வேண்டும். அடுத்து சயீ எனும் தொங்தோட்டம் செய்ய வேண்டும். ஸபா-மர்வா குன்றுகள் இரண்டுமே அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்கள். ஸபாமலை ஏறியதும் கிப்லாவை முன்னோக்கி நின்று துஆ ஓத வேண்டும். மொத்தம் ஏழு முறை ஸபா-மர்வாவுக்கு இடையே நடந்தவுடன் தலைமுடியை முழுமையாக மழிக்க வேண்டும். பெண்களுக்கு கட்டாயமில்லை. ஒரு கொத்து முடியை கத்தரித்தால் போதும்”
“மகிழ்ச்சி!”
“நமது உடல் தகுதிக்கேற்ப நான்கைந்து உம்ராக்கள் செய்யலாம். ஒவ்வொரு உம்ராவைவும் மீக்காத் எல்லையில் இஹ்ராம் அணிந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு உம்ராவுக்கும் மீண்டும் மீண்டும் முடி இறக்க வேண்டும்!”
“தொகுத்துச் சொன்னதற்கு நன்றி!”
“ஏர்போர்ட்டுக்கு நான் வந்து வழி அனுப்பவா?”
“வேண்டாம். நாங்கள் இறைவனின் பாதுகாப்பில் போய் வருகிறோம்!”
மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 2.50மணிக்கு எங்களை தாம்பரத்தில் இறக்கி விட்டது.