மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூரிலிருந்து தாம்பரம் அடைய 11 மணி நேரம் எடுத்துக் கொண்டது. மற்ற கோவை - சென்னை ரயில்களை விட 210 நிமிடம் பயண நேரம் அதிகம்.
சென்ட்ரலுக்கு போய் சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வர அதிக சிரமப்பட வேண்டி இருக்கும் என்பதற்காக மங்களூர் - சென்னை ரயிலைத் தேர்ந்தெடுத்தார் ஆர்னிகா.
தாம்பரம் ரயில் நிலையம் முகப்பில் ஆட்டோக்காரர்கள் எங்களை மொய்த்தனர்.
அதில் ஒரு தாடிக்காரர் 300 ரூபாய் கேட்டார்.
அவரின் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.
ஆட்டோ கிளம்பியது.
“வெளிநாட்டுப் பயணம் எங்கே போகிறீர்கள்?”
“துபாய் - உம்ரா - எகிப்து!”
“அஸ்ஸலாமு அலைக்கும். நானும் முஸ்லிம்தான். என் பெயர் அன்வர். எங்களுக்கெல்லாம் உம்ரா எட்டாக் கனவு தான்!”
“என்ன இப்படி பேசுகிறீர்கள்? இறைவன் விரும்பினால் நாளையே நீங்கள் உம்ரா போவீர்கள்!”
“காபாவில் எங்களுக்காக துஆ கேளுங்கள். என் மகள் திருமணத்திற்கு காத்திருக்கிறாள். அவளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும். மகன் +2 முடித்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்லக் காத்திருக்கிறான். அவனுக்கும் நல்ல கோர்ஸ் கிடைக்க வேண்டும். எங்கள் மகன் மகளுக்காக துஆ செய்யுங்கள்!” மகன் மகள் பெயரைக் கேட்டுக் குறித்துக் கொண்டார் ஆர்னிகா.
வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி எங்களிருவருக்கும் தேனீர் வாங்கிக் கொடுத்தார் ஆட்டோ டிரைவர்.
காசு நீட்டினோம். வாங்க மறுத்துவிட்டார்.
அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்குப் போகும் வழியில் ஆட்டோவை நிறுத்தினார். பயணச்சுமைகளை இறக்கி வைத்து விட்டு. “இருநூறு ரூபாய் கொடுங்கள் போதும்!” என்றார்.
வற்புறுத்தி 300 ரூபாயை கொடுத்துவிட்டு பயணச்சுமைகளுடன் நகர்ந்தோம்.
ஆர்னிகாவின் முகம் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி இருந்தது.
“என்ன புருஷா… என்னாச்சு?”
“உன் ஆதார் கார்டு குழப்பத்ல உன்னை விமான நிலையத்திலேயேத் தடுத்து நிறுத்திட்டா நான் என்ன பண்ணனும்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்!”
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் கோவை திரும்புறேன். நீங்க மட்டும் மூணு நாடு டூர் போய்ட்டு வாங்க!”
“உன் ட்ராவலிங்கில் ஏதாவது பிரச்சனைன்னா என்னுடைய பயணமும் கேன்சல்!”
பிரதான வாசலில் நின்றவர் எங்கள் பாஸ்போர்ட்களையும் போர்டிங் பாஸ்களையும் பார்த்து உள்ளே அனுமதித்தார்.
சென்னை விமான நிலையம், செங்கல்பட்டு மாவட்டத்தின் திரிசூலத்தில் அமைந்திருக்கிறது. சென்னை விமான நிலையம் 1930 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. சென்னை விமான நிலையம், இந்தியாவின் ஐந்தாவது பெரிய விமான நிலையம். மொத்தம் நான்கு டெர்மினல்கள், டெர்மினல் ஒன்று மற்றும் நான்கில் உள்நாட்டு விமான போக்குவரத்து. டெர்மினல் இரண்டும் மூன்றும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து. இரண்டு ஆஸ்பால்ட் ரன்வேக்கள். ஒன்றின் நீளம் 12011 அடி இன்னொன்றின் நீளம் 9482 அடி. சென்னை விமான நிலையத்திலிருந்து மூன்று கண்டங்களுக்கு நேரடி விமானச் சேவை உண்டு.
கடந்த ஒரு வருடத்தில் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகள் எண்ணிக்கை இரண்டேகால் கோடி. 156126 விமான சேவைகள் நடந்துள்ளன. 379154 டன் கார்கோ ஏற்றி இறக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்துடன் மெட்ரோ போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது.
இருபது வருடங்களுக்கு முன் விமான நிலையங்களும் அதன் சேவைகளும் பணக்காரர்களுக்குரியது என்கிற பாவிப்பு இருந்தது. இப்போது விமானசேவையை கீழ்த்தட்டு மக்களும் மிடில்கிளாஸ் மாதவன்களும் பயன்படுத்துகின்றனர்.
விமான நிலையங்கள் தனி உலகங்களாய் இயங்குகின்றன. ஒரு விமான நிலையத்தில் கீழ்க்கண்டப் பதவிகளுடன் கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இருக்கின்றனர்.
* Emigration Officials (குடியேற்ற அலுவலர்) - ஒரு பயணி சொந்த நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ குடிபெயர்வதைக் கண்காணிக்கும் அதிகாரிகள்.
* Immigration Officials (குடி நுழைவு அலுவலர்) - ஒரு பயணி அயல் நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இடம் பெயர்வதைக் கண்காணிக்கும் அதிகாரிகள். இவர்கள் பாஸ்போர்ட்டு விசாவைச் சோதித்து எந்தக்
காரணத்துக்காக பயணி வருகிறார். எத்தனை நாள் தங்கப் போகிறார் தகுதியான ஆவணங்கள் வைத்திருக்கிறாரா எனச் சோதிப்பர்.
* Custom Officials (சுங்க இலாகா அதிகாரிகள்) - இவர்கள் பயணிகளையும், பயணச் சுமைகளையும் ஸ்கிரீன் செய்வர். சட்டத்துக்குப் புறம்பான பொருட்கள் கொண்டு வந்திருந்தால், அதனைப் பறிமுதல் செய்து அவரை கைது செய்வர்.
* Central Industrial Security Force (CISF) (மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள்
* Civil Aviation Authority (சிவில் விமான போக்குவரத்து ஆணையம்)
* Airport Authority Management (விமான நிலைய ஆணைய மேலாண்மை)
* Airport Manager (விமான நிலைய மேலாளர்)
* Air Traffic Controllers (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்)
* Airline Station Manager (நிலைய மேலாளர்)
* Ground Stafee (தரைமட்டப் பணியாளர்கள்)
* Ramp Agent (தரை செயல்பாட்டு முகவர்)
* Gate Agents (நுழைவாயில் முகவர்கள்)
* Maintenance and Technical Staff (பராமரிப்பு மற்றும் தொழில் நுட்பப் பணியாளர்கள்)
* Gate and Ticketing Staff (நுழைவாயில் மற்றும் பயணச்சீட்டு பணியாளர்கள்)
* Aircraft Rescue and Fire Fighting (விமான மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள்)
* Medical Staffs (மருத்துவர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள்)
* Cargo and Logistic Managers (சரக்கு மட்டும் தளவாடங்கள் மேலாளர்கள்)
* Wildlife Management Personals (பறவைகள் விமானத்தை தாக்கா வண்ணம் கண்காணிக்கும் அதிகாரிகள்)
* Pilots and Flight Attendants. (விமானி மற்றும் விமானப் பணிப்பெண்கள்)
குடியேற்ற அலுவலக வரிசையில் நின்றோம்.
“நீங்கள் இருவரும் கணவன் மனைவியா?”
“ஆமாம்!”
“என்ன விஷயமாக துபாய் போகிறீர்கள்?”
“சுற்றிப் பார்க்க!”
“அதன் பின் எங்கு செல்கிறீர்கள்?”
“மெக்கா மதீனா அதன்பின் எகிப்து. எகிப்தில் இருந்து இந்தியா!”
“இந்த மூன்று நாடுகளில் உங்களை ஆதரிக்க நண்பர்கள் யாரும் இல்லையா?”
“இல்லை… உரிய திட்டமிடலுடன் குறிப்பிட்ட நிதிநிலையுடன் பயணத்தை வடிவமைத்துள்ளோம்!”
“நல்லது!”
“இவர் ஆர்னிகா நாசர் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். பயணம் முடித்து வந்தபின் பயணக் கட்டுரை தொடர் எழுதப் போகிறேன்!”
“கட்டுரையில் எங்களைப் பற்றி நன்றாக எழுதுங்கள்!”
“நிச்சயம் எழுதுவோம்!”
“யூ ஆர் ஏ குட்லுக்கிங் கிராண்ட்மதர். நான் ஒரு கிறிஸ்டியன் உம்ராவில் எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்!”
“உங்கள் பெயர்?”
சொன்னார்.
ஆர்னிகா குறித்துக் கொண்டார்.
அனைத்து நடைமுறைகளும் முடிந்து டெர்மினல் இரண்டில் இளைப்பாறும் அலுமினியப் பறவை WY252 ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினோம்.
காக்டெய்ல் பயணிகள்.
அலுமினியப் பறவை ரன்வேயில் ஓடி வானேறியது.
“நாம் ‘முரண்’ எனும் பாவனை விஞ்ஞானக்கதை எழுதினோம். ஞாபகமிருக்கிறதா?”
“ஆமாம்… விமானப் பயணத்தை முதன்முறையாகச் செய்யும் ஒரு பயணிக்கும் தொடர் விமானப் பயணங்கள் செய்யும் ஒரு பயணிக்கும் இடையே ஆன முரணைக் கூறும் அந்தக்கதை!” என்றேன்.
“முதல் விமானப்பயணம் செய்கிறேன் நான். இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டால்?” பீதியுடன் கணவரை முறைத்தேன்.