ஆர்னிகாவின் வயதைக் கருதி பாவம் பார்த்து அந்தத் துபாய் போலீஸ் ‘குரங்கு மாதிரி குதித்து கைதட்டக் கூடாது’ என சமிக்ஞை செய்தார்.
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். குளோபல் வில்லேஜ் வெளிவாசலில் மருமகனின் சித்தப்பாவும் சாச்சியும் காத்திருந்தனர். அவர்களுடன் காரில் போய் அவர்கள் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டோம். சாச்சி சுற்றுலா தொடர்பான பல டிப்ஸ்கள் கொடுத்தார். ஹோட்டல் வாசலில் விட்டு விட்டு சென்றனர்.
திறன்பேசியின் அலாரம் ஒலித்தது.
முதலில் நான் எழுந்து குளித்து தலைவாரி புத்தாடை உடுத்தித் தயாரானேன். அடுத்து ஆர்னிகா தனது காலைக்கடன்களை முடித்தார்.
சூட்கேஸிலிருந்து ஒரு பிளம்கேக் பாக்கட் எடுத்து ஆளுக்கு நான்கு நான்கு ஸ்லைஸ்கள் சாப்பிட்டோம்.
மாத்திரைகளை விழுங்கினோம்.
சில அடிப்படை அரபு வார்த்தைகளை உச்சரிக்க பழகினார் ஆர்னிகா.
ஆம் - நாம்
இல்லை - லா
தயவுசெய்து - லா சமதா (ஆண்) லா சமதி (பெண்)
நன்றி –சுக்ரன்
ஹலோ – மர்ஹபா
பை – மா-அ- சலாமா
எக்ஸ்க்யூஸ் மீ – அப்வான்
சாரி - ஆசிப் (ஆண்) ஆசிபா (பெண்)
ஓகே -தமாம்
துபாய் ராயல் டூர்ஸ் (தொடர்பு எண் +0529417484) மூலம் ஒரு நாள் அபுதாபி டூர் புக் பண்ணி இருந்தோம்.
காலை 8.00 - 8.30 மணிக்குள் கிளம்பி அபுதாபியைச் சுற்றிப் பார்த்து விட்டு இரவு 7 மணிக்கு துபாய் திரும்ப வேண்டும்.
இரவு 9 மணிக்கு படகு சவாரி விருந்து ஆடல் பாடல்.
அறையை பூட்டி விட்டு வெளியே வந்தோம். சிறிய தேனீர்கடை. தேனீர் பருகினோம். விலை ஒரு தேனீர் 5 திர்ஹாம். அதாவது 115 ரூபாய்.
அபுதாபி ஒருநாள் சுற்றுலாக் கட்டணம் ஒருவருக்கு 3000 ரூபாய்.
“அபுதாபி டூரில் பெண்கள் தலையையும் உடலையும் முழுமையாக மூடி இருக்க வேண்டும். ஆண்கள் டவுசர் அணியக் கூடாது!” எனக் கட்டளையிடப்பட்டிருந்தோம்.
மௌன்ட் சினா ஹோட்டலின் வாசலில் காத்திருந்தோம்.
கார் வந்து சேர்ந்தது .
ஏறிக்கொண்டோம். டூரை நிர்வகிப்பது வட இந்தியர்கள் தான். ஹிந்தி சரளமாக பேசினர். உடைந்த ஆங்கிலம். தேவைக்கு ஏற்ப அரபு.
முதலில் ஷேக் ஜாயித் மசூதி போய் சேர்ந்தோம்.
மசூதி வாசலில் என்னை தடுத்தனர். “ஆர் யூ நாட் அலவ்டு!”
“ஏன்ய்யா ஏன்?”
“உங்கள் கணவரை அனுமதிப்போம். புர்கா அணியாத உங்களை அனுமதிக்க மாட்டோம்!”
“என்ன செய்வது?”
“அதோ ஒரு புர்கா கடை இருக்கிறது. புர்காவை விலைக்கு வாங்கி அணிந்து கொண்டு வாருங்கள்… அனுமதிக்கிறோம்!”
நானும் ஆர்னிகாவும் ஓடினோம். அந்தக் கடைக்கு நல்ல வியாபாரம். டூரிஸ்ட் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் புர்கா வாங்கினர்.
நானும் 50 திர்ஹாம் கொடுத்து ஒரு புர்கா வாங்கி அணிந்து கொண்டேன்.
மசூதியில் நான்கு நிலைகளில் செக்கிங் நடந்தது.
பாஸ்போர்ட் விசா சோதித்தனர்.
தொழுகை நேரம் குறித்து இருந்தனர்.
பஜ்ர் - 05.24
லுஹர் மதியம்- 12. 12
அஸ்ர் சாயந்தரம்- 3.13
மஹ்ரிப் - 5.37
இஷா – 6.54
இஸ்லாமியக் கட்டடக்கலையின் அருமை பெருமைகளைக் காட்சிப்படுத்த ஐக்கிய அரபு நாடுகள் தலைவர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நயான் 1980 ஆம் ஆண்டில் இந்த மசூதியைக் கட்டத் தீர்மானித்து 1996 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பின் 2007 ஆம் ஆண்டில் தொழுகையாளிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் திறந்து வைக்கப்பட்டது. பிற மதத்தினரும் இம்மசூதியைச் சுற்றிப் பார்க்கலாம்.
இந்த மசூதியை வடிவமைத்தவர் சிரியன் கட்டடக்கலை வல்லுநர் யுசேப் அப்தெல்கே. கட்டடப் பொருட்களை இத்தாலி, ஜெர்மனி, மொராக்கோ, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து தருவித்தனர்.
இஸ்லாமை நவீனப்படுத்தவும் நாட்டின் கலாச்சாரத்தை ஒரு வடிவமாக்கவும் இந்த மசூதி கட்டப்பட்டது.
ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நயான் இறந்த பிறகு அவரது உடல் மசூதி வளாகத்தில் புதைக்கப்பட்டது.
மசூதியைக் கட்ட ஆன செலவு 2 பில்லியன் திர்ஹாம் அல்லது 545 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.
இம்மசூதியில் 41000 பேர் ஒரே வேளையில் தொழலாம். நீளம் 1380 அடி அகலம் 950 அடி. மசூதியில் 82 அழகிய மினாராக்களை எழுப்பியிருந்தனர்.
மசூதியின் வலப்பக்கம் இஸ்லாமிய நூலகம் இருந்தது.
மசூதியில் 60570 சதுர அடி கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கார்பெட்டை 1300 தச்சர்கள் தயாரித்தனர். கார்பெட்டின் எடை 35 டன். அந்தக் கார்பெட்டில் 2268000000 தையல்கள் போடப்பட்டுள்ளன.
முனிச்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸான்ட்லியர் விளக்குகள் தொங்கின.
மசூதியின் தொழுகை சுவரில் இறைவனின் 99 பெயர்களை முகமது மாண்டி அல் தமிமி பொறித்து வைத்துள்ளார்.
மசூதிக்குள் சுற்றிய எங்களைக் கறுப்பினப் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்றனர். நான் இரண்டு ரக்காத்தும் ஆர்னிகா இரண்டு ரக்காத்தும் தொழுதோம்.
இரண்டு மணி நேரத்துக்குப் பின் மீண்டும் கிளம்பினோம்.
அபுதாபி 200 தீவுகளால் ஆனது. அபுதாபியின் பாரம்பரிய கிராமம் சுற்றினோம். பெர்ராரி வொர்ல்ட் போனோம். கடற்கரை ஓரம் நின்று கடலை ரசித்தோம்.
கார் அபுதாபியின் பாப்ஸ் ஹிந்து மந்திருக்கு திரும்பியது. இந்தக் கோவிலை கட்டியவர் போச்சசன்வாசி அக்ஸர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயணன் ஆவார்.
அரபு நாடுகளின் முதல் கோவில் இது. இந்தக் கோவில் இந்தியா- ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே நட்பையும் கலாச்சார நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
இந்தக் கோயில் 14.02. 2024 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட வருடத்தில் 22 லட்சம் பார்வையாளர்கள் கோவிலை தரிசிக்க வந்துள்ளனர்.
இந்தக் கோவிலில் சிவன், பார்வதி, சீதா, ராமன், அய்யப்பா, வெங்கடேஸ்வரா, ஜகனாத் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோவில் 27 ஏக்கர் பரப்பளவு. கோவில் இளம்சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவில் 108 அடி உயரம் 262 அடி நீளம் 180 அடி அகலம்.
கோவில் சுவர்களில் ராமாயணம், சிவபுராணம், பாகவதம், மகாபாரதம் தொடர்பான ஓவியங்களும் அரபியன், எஜிப்சியன், மெசோபட்டோமியன், அமெரிக்கன் நாகரிகங்கள் தொடர்பான ஓவியங்களும் நிறைந்துள்ளன.
இந்தக் கோவில் கட்ட செலவு 700 கோடி. இந்தக் கோவிலை நிர்மாணிக்க 20000 டன் கற்கள் தேவைப்பட்டன. கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது நாங்கள் இரு நீரூற்றுகளைப் பார்த்தோம்.
இரண்டு நீரூற்றுகளும் கங்கை, யமுனை நதிகளை நினைவூட்டுகின்றன. மூன்றாவது நதியான சரஸ்வதியை கோவிலின் ஒளிக் கற்றையாக உருவகப்படுத்தி உள்ளனர்.
இந்தக் கோவிலை ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் தரிசிக்கலாம்.
கோவிலில் மொத்தம் 402 தூண்கள். கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டூர் கைட் அவசரப்படுத்தினார்.
“கிளம்புங்க… கிளம்புங்க… டயமாகுது?”
“மசூதி பார்க்க இரண்டரை மணி நேரம் டயம் கொடுத்தீங்க. கோவில் பார்க்க ஒரே ஒரு மணி நேரமா? ஏனிந்த ஓரவஞ்சகம்?” என்றனர் சிலர்.
டூர் கைட் வாயை பொத்திக்கொண்டார்.
கார் துபாயை நெருங்கியது.
டூர் கைட் எங்களை ஒரு இடத்தில் இறக்கி விட்டு, “நடக்கிற தூரத்தில் ஒரு இரவு படகு விருந்து நடைபெறுகிறது போய் பாருங்கள்!” என்றார்.
இறங்கி நடந்தோம்.
ஆளுக்கு முப்பது திர்ஹாம் கட்டணம் செலுத்தி குறும்கப்பலுக்குள் சென்றோம்.
பப்பே முறையில் விரும்பிய அயிட்டங்களை எங்கள் தட்டில் சேர்த்துக் கொண்டு டேபிளுக்குத் திரும்பினோம்.
உணவு தரம் சுமார்தான்.
ஆடலும் பாடலும் கொண்டாட்டம் அமர்க்களம்.
ஆர்னிகா எழுந்து ஆட ஆரம்பித்தார். சமிக்ஞை செய்து அவரை அடக்கினேன்.
பக்கத்து டேபிளில் இருந்த மூவர் ஆர்னிகாவையே உன்னித்து பார்த்தனர்.
மெதுவாக அருகில் வந்து “நீங்கள் எழுத்தாளர் ஆர்னிகா நாசர்தானே?”
“ஆம். நீங்க?”
“நாங்களும் தமிழ்நாடு தான். உம்ராவுக்கு போற வழில துபாய் வந்தோம்!”
திறன்பேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம்.
ஆடல் பாடல் கொண்டாட்டத்தை முகநூல் பதிவாய் ஆர்னிகா போட்டார்.
அவ்வளவுதான் பழைமைவாதிகள் ஆர்னிகாவை தூற்றினார்கள்.
ஒருவர், “ஆர்னிகா நாசர் உம்ரா போறாரா? காப்ரேடான்ஸ் பார்க்கப் போறாரா? அவர் போய் வந்ததைப் பயணக்கட்டுரையாய் எழுதினால், நான் அவரது கோவை வீட்டின் முன் தீக்குளிப்பேன்!” சூளுரைத்தார்.