படகு விருந்து அயிட்டங்கள் படுசுமார். ஆடலும் பாடலும் அமர்க்களம். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
தப்கே நாடோடி நடனம். (பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், சிரியாவிலும் இவ்வகை நடனம் உண்டு) வட்ட வடிவில் அரங்கேறியது.
பெல்லி நடனம். அர்தா நடனம். கத்தியையும் குச்சியையும் வைத்துக்கொண்டு ஆடுவது. கலீஜி நடனம். யோலா நடனம். சூபிகளின் ஆன்மிக நடனமான தனோரா. அரேபிய காதல் பாடல்கள் பாடப்பட்டன.
நிகழ்ச்சி இரவு 10: 30 மணிக்கு முடிந்தது. படகை விட்டு வெளியே வந்தோம். ஹோட்டலுக்கு எப்படி போவது?
ஒரு டாக்ஸி டிரைவரிடம் கட்டணம் எவ்வளவு என வினவினோம்.
அவர் எங்களைச் சில நொடிகள் ஆழமாகப் பார்த்தார். பின் சமிக்ஞையில் ‘நடக்கும் தூரம்தான். நடந்து போங்கள்’ என திசை காட்டினார்.
ஹோட்டலுக்கு வந்தோம்.
எங்கள் கைபேசியின் கடிகாரம் துபாய் நேரத்திற்கு மாறியிருந்தது.
விடியற்காலை ஆறு மணிக்கு எழ அலாரம் வைத்தோம்.
ஆர்னிகா உம்ராவுக்காக தாடி வளர்த்திருந்தார். கத்திரிக்கோல் வைத்து தாடியை ட்ரிம் செய்தார். இருவரும் பல் துலக்கினோம்.
காலையில் எழுந்தோம்.
மருமகனின் சாச்சி அறிவுரைத்திருந்தார். “எங்கயும் போக டாக்ஸியை பயன்படுத்தாதிங்க. காசு செலவாகும். மெட்ரோல போங்க. உங்க ஹோட்டலிலிருந்து சிறுதூரம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன் வரும். ஏறி துபாய் மாலில் இறங்குங்கள். அங்கிருந்து ஒரு பஸ்சை பிடித்து மிர்ரகிள் கார்டன் போங்கள்!”
அதன்படியே நாங்களும் மெட்ரோ ரயிலில் ஏறினோம். பனியாஸ் ஸ்கொயர் பச்சைலைன். இடையில் சிவப்பு லைன் தாவியது.
நூறு பயணிகளில் எண்பது பயணிகள் இந்தியர்களே.
சிவப்பு லைன் மெட்ரோ எங்களை துபாய் மால் மெட்ரோ ஸ்டேஷனில் இறக்கி விட்டது.
இறங்கி கீழே வந்தோம்.
இருபது நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் மிர்ரகிள் கார்டனுக்கு போகும் பேருந்தில் ஏறினோம்.
மிர்ரகிள் கார்டன் அல் பஸ்ரா தெற்கு மூன்றாவது தெருவில் துபாய் லாண்டில் அமைந்திருந்தது.
தொடர்பு எண் 971 4 422 8902, 971 50 735 2833. பெரியவர்களுக்கு கட்டணம் 2500 ரூபாய் (100 திர்ஹாம்), 3-12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு 2000 ரூபாய் (80 திர்ஹாம்), மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அனுமதி இலவசம்.
மிர்ரகிள் கார்டன் 14.02. 2013 காதலர் தினம் அன்று ஜோர்டானியன் தொழிலதிபர் அப்டெல் நாசர் ரஹலால் திறந்து வைக்கப்பட்டது. வருடத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இந்த அற்புதத் தோட்டம் திறந்திருக்கும். இது உலகின் மிகச் சிறந்த பூந்தோட்டங்களில் ஒன்று. 72, 000 சதுர மீட்டர் பரப்பளவு. இந்தத் தோட்டத்தில் 50 மில்லியன் மலர்கள் 250 மில்லியன் தாவரங்களும் உள்ளன. இங்கிருக்கும் செடி சிற்ப தோட்டங்கள் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றவை. மேற்பூச்சு தோட்டம் எனவும் குறிப்பிடுவர். உள்ளே செடி சிற்ப தோட்டங்கள். மிக்கி மௌஸ், அன்னம், யானை, டெடி பியர் , இருதய வடிவம், ஏரோபிளேன், கோட்டை, கொத்தளங்கள் மற்றும் பல்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களாய் உயிர்ப்பு காட்டின.
செங்குத்தான தோட்டங்களும் இருந்தன.சாமந்திப்பூக்களும் பெய்குழல் வடிவ பூக்களும் நிறைந்திருந்தன. மிர்ரகிள் கார்டன் முழுக்க தேனிலவு கொண்டாடும் புதுமண தம்பதிகளும் காதலர்களும் நிறைந்திருந்தனர். விதிவிலக்காய் சீனியர் சிட்டிசன் தம்பதிகள் நாங்கள்.
கார்டனைட் சுற்றி பார்த்தபடி ஆர்னிகா புலம்பினார். “இந்த கார்டனை சுற்றிப் பார்க்க 6000 ரூபாய்க்கு மேலாக செலவு செய்திருக்கிறோம். மைசூர் பிருந்தாவன் தோட்டத்தின் நுழைவு கட்டணம் 100 ரூபாய். பெங்களூரு கப்பன் பார்க் இலவசம். பெங்களூர் லால் பார்க் நுழைவு கட்டணம் 50 ரூபாய். அந்தத் தோட்டபூக்கள் கொடுத்த பார்வை சுகத்தை இந்த மிர்ரகிள் கார்டன் எனக்கு கொடுக்கவில்லை… ஓவர் ரேட்டட் டூரிஸ்ட் ஸ்பாட்!”
‘புருஷா! என் கஞ்சத்தனம் கூடு விட்டு கூடு பாய்ந்து உனக்குள் போயிருச்சு போல… சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல ஆகுமான்னு ராமராஜன் மாதிரி பாடாதே. அடங்கு மேன்!’ என் மைண்ட் வாய்ஸ் ஆர்னிகாவை அடக்கியது.
சுமார் இரண்டு மணி நேரம் சுற்றினோம்.
மீண்டும் அதே பஸ். மீண்டும் அதே மெட்ரோ. ஹோட்டல் முகப்பிலிருக்கும் தேனீர் கடையில் 3 திர்ஹாமுக்கு தேனீர் அருந்தினோம். கொண்டு வந்திருந்த பிளம்கேக்கில் நான்கு நான்கு ஸ்லைஸ்கள் சாப்பிட்டோம்.
மதியம் 1.15 மணிக்கு ஹோட்டலுக்கு முன்னிருக்கும் நடைமேடையில் காத்திருந்தோம். சரியாக 1. 30 மணிக்கு ஒரு கார் வந்து எங்களை ஏற்றிக் கொண்டது. டெசர்ட் ஸபாரி. ஆளுக்கு கட்டணம் 2000 ரூபாய். இருவருக்கும் நான்காயிரம் ரூபாய். டெசர்ட் சபாரியை வட இந்தியர் ஒருவர்தான் நடத்துகிறார். ஓட்டுநரும் எங்களை காரில் அழைத்துச் செல்பவரும் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர்.
கார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு குறுகலான தெருவுக்குள் நுழைந்து ஒருவரை ஏற்றிக் கொண்டது. மீண்டும் ஏழெட்டு கிலோமீட்டர் போய் இன்னொருவரை ஏற்றிக் கொண்டது. இப்போது கார் நிறைந்து விட்டது.
கார் போய்க் கொண்டே இருக்கிறது. எங்காவது ஒளிவு மறைவான இடத்தில் நிறுத்தி நம்மிடம் உள்ளதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அத்துவானக்காட்டில் விட்டு சென்று விடுவார்களோ என்கிற பயம் எழுந்தது.
காரில் ஒரு துருக்கி நாட்டுத் தம்பதிகள் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தனர். நாங்களும். துருக்கி ஆண் ஓட்டுனரை பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்.
“நாம் போகும் இடம் துபாய் நகரத்திலிருந்து எவ்வளவு தூரம்?”
“உங்களில் யாருக்காவது ஆங்கிலம் தெரியுமா?”
“இன்னும் எத்தனை கிமீ போக வேண்டும்?”
அனைத்துக் கேள்விகளுக்கும் டெசர்ட் சபாரி நடத்துபவர் மையமாகத் தலையாட்டினார்.
முப்பது கிமீ பயணித்தப்பின் ஒரு கடை முன் கார் போய் நின்றது. ஓட்டுனர் இறங்கிப் போய் யாருடனோ பேசி விட்டு வந்தார்.
நாங்கள் அங்கிருந்த கடைகளில் புகுந்து வேடிக்கை பார்த்தோம்.
மீண்டும் கார் கிளம்பியது.
ஒரு நாற்சந்தியில் வலது பக்கம் திரும்பியது கார். நூற்றுக்கணக்கான கார்கள் நிற்கும் ஒரு பகுதியில் கார் நின்றது.
அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குழுகியிருந்தனர்.
எங்களை ஒரு ஜீப்பில் ஏற்றிவிட்டனர்.
பாலைவன மணல் பகுதிகளில் ஜீப் ஏத்தலக்கா பூத்தலக்கா ஆடியது. ஜீப் சிரசாசனம் செய்தது. குடல் பகுதி வாய்க்கு வர துடித்தது.
உற்சாகக் கூச்சலிட்டோம்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கூடாரப் பகுதியில் போய் நின்றது கார். தனியாக காசு வசூலித்து சுற்றுலாப் பயணிகளை ஒட்டகச் சவாரி கூட்டிப் போயினர்.
வட்ட வடிவ மேடை. அதனைச் சுற்றி இருக்கைகள்.
மீண்டும் மேடையில் கவர்ச்சிப் பெண்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடர்ந்தது. படகு விருந்தில் என்ன ஆடினார்களோ அதே ஆட்டம்தான். கூடுதலாக நெருப்பு நடனம். நடனம் முடிந்ததும் இரவு சாப்பாடு வழங்கினர். நூருல்ஸ், பாஸ்டா, சிக்கன். ஆர்னிகா இடைஇடையே ஓடி பிளாக் டீ குடித்தார்.
எல்லாம் முடிந்து சுற்றுலாப் பயணிகள் அவரவர் கார்களில் துபாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு காரும் நிரம்பிப் புறப்படுவதை வேடிக்கை பார்த்தோம்.
ஆர்னிகா புலம்பினார். “போச்சுடா…. நம்மள கூட்டி வந்த கார் அப்படியேத் திரும்பி போய்ருச்சு போல… விடியவிடியப் பாலைவன மணலில் குத்தவைத்து அமர வேண்டியதுதான்!”
“ராயல் டூர்ஸ் கார் கிதர் ஹை?”
அனைவரும் உதடு பிதுக்கினார். ‘அவர்கள் போய் விட்டனர்’ என சமிக்ஞை காட்டினர்.