தொடர்ந்து பயணிப்பதற்கு முன்பாக ஓர் இடைச்செருகல்.
பொதுவாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் எந்தவொரு புகைப்படத்தையும் பிரேமிட்டுச் சுவர்களில் தொங்க விட மாட்டார்கள். காரணம், புகைப்படம் எடுப்பது ஹராம் என்பது அவர்கள் நம்பிக்கை.
ஆனால் விதிவிலக்காக எல்லா முஸ்லிம் வீடுகளிலும் புனித காபா சுவர் ஓவியமாக அல்லது லேமினேட் பண்ணப்பட்ட ஒளிப்படங்களாகத் தொங்கும்.
சிறுவயதில் புனித காபா படத்தைப் பார்த்தாலே பக்தி பரவசமாகி மெய் சிலிர்ப்போம். இவ்வளவு ஏன் எனக்குத் தெரிந்த மற்ற மதச் சகோதரர்கள் காபாவை புனிதச் சின்னமாகக் கருதுவதைக் கண்டிருக்கிறேன்.
அந்த காபாவை நேரில் தரிசிக்கப் போகிறோம் என்கிற நிதர்சனம் வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆட வைத்தது.
புனித காபா என்றால் என்ன ?அதன் உள்ளும் புறமும் ஆராய்வோம்.
காபா என்பது மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித கன சதுர வடிவிலான கட்டடம் ஆகும். காபா என்கிற கன சதுரம் சவுதி அரேபியாவின் மெக்கா நகரின் மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் காபாவை உலகின் முதல் மனிதர் ஆதம் நபி கட்டினார். 40 வருடங்கள் கழித்து இப்ராஹீம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயீல் நபிகளும் புணரமைத்தனர் என கருதப்படுகிறது. மூன்றாவதாக காபாவை தூய்மைப்படுத்தியது நபிகள் நாயகம்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகைக்காகவும் ஹஜ் புனிதப் பயணத்திற்காகவும் காபாவைச் சுற்றி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ஆன்மிக மையப் பொருள் காபா தான். இஸ்லாம் நிறுவப்படும் முன் காபாவில் 360 க்கும் மேற்பட்ட ஹீபல் உட்பட பல சாமி விக்கிரகங்கள் இருந்தன. நபிகள் நாயகம் மெக்காவை வெற்றி கொண்ட பின் அந்தச் சிலைகள் அகற்றப்பட்டு ஓரிறை வணக்கத் தலமாக, காபா மாறியது.
உலகில் உள்ள 200 கோடி முஸ்லிம்கள் தினம் ஐவேளை தொழும் போது காபா நோக்கி தான் தொழுவர். இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் உம்ராவின் முக்கிய பகுதியாக காபாவை சுற்றி ஏழு முறை வலம் (தவாப்) வருவது பின்பற்றப்படுகிறது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று.
காபாவில் உள்ள என்ன இருக்கிறது?
கூரையைத் தாங்கும் மூன்று மரத்தூண்கள். கல்வெட்டுகள். அலங்காரங்களுடன் கூடியப் பளிங்குக்கல் சுவர்கள். அவற்றில் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தொங்கும் வெள்ளி மற்றும் தங்க விளக்குகள்.
வாசனை எண்ணெய் பூசப்பட்ட ஒரு சிறிய அலமாரி.
சுத்தம் செய்வதற்காக கூரைக்கு ஒரு ஏணி.
வரலாற்றுக் கலைப் பொருட்கள்.
காபாவின் முழு சரித்திரம் என்ன என்பதை பார்ப்போம்.
புனித காபா நெருப்பாலும் போர்களாலும் பல தடவைகள் தாக்கப்பட்டு புதிய நிலைக்கு மீண்டிருக்கிறது.
யாசித் படைகள் மெக்காவை கிபி 683ல் கைப்பற்றின. காபா தீப்பற்றியது.
ஹஜர் அல் அஸ்வத் சொர்க்கத்துக்கல் பல துண்டுகளாய் உடைந்தது. காபா தீப்பற்றியதற்குக் காரணம் இருதரப்பும்தான் என பேசப்பட்டது. அப்துல்லாஹ் இபுன் ஜுபைர் காபாவை செவ்வக வடிவில் இரு கதவுகளுடன் நபிகள் நாயகம் விருப்பப்படி மீண்டும் புதுப்பித்தார். கிபி693ல் காலீல் அப்து அல் மாலிக்கின் தளபதி அல்ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப், ஜுபைர் கட்டிய காபாவை இடித்துத் தள்ளினார். குரைஷிகளின் விருப்பப்படி காபா மறுவடிமைக்கப்பட்டது.
உமாயாத்துகள் காபாவின் ஒரு வடிவை அழித்து மறுவடிவாய் கட்டினார்.
கிபி 930-ல் கர்மேஷியன்கள் ஹஜர் அல் அஸ்வத் கருப்புக் கல்லைத் திருடினர்.
கிபி1626-ல் கடும் வெள்ளத்தில் காபா முழுவதும் சேதமுற்றது. ஒட்டமான்கள் காபாவை மீண்டும் கட்டினர்.
கிபி 1996-ல் காபா அதிநவீன அம்சங்களுடன் முழுமையும் புதுப்பிக்கப்பட்டது.
அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தை உண்மைபடுத்தும் இடமாக இறைவனின் இல்லமாக காபத்துல்லாஹ் திகழ்கிறது.
காபா சௌதியின் மேற்குத் திசையிலில் செங்கடலிலிருந்து 100 கிமீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
உலகின் தொப்புளாகவும் உலகின் மையப்பகுதியாகவும் காபா திகழ்கிறது.
இதனை கெய்ரோ வானியல் மற்றும் மண்ணியல் ஆராய்ச்சி தேசியக்கழகம் டாக்டர் முஸ்லிம் சால்தூத் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
இறைவனின் காபத்துல்லாவுக்கு சூட்டியுள்ள பெயர்கள்:
* அல்காபா (மாயிதா- 97)
* அல் பைத் (ஆலஇம்ரான் – 96)
* பைத்துல்லாஹ் (பக்ரா- 125)
* ல் பைத்துல் ஹரம் (மாயிதா -97)
* அல் பைத்துல் அதீக் (ஹஜ் -29)
* கிப்லா (பக்ரா -144)
பூமியின் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது. அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது. பிறகு அது நாளடைவில் விரிந்து கொண்டே சென்று நிலமாக மாறியது. அந்த நுரை தோன்றிய இடத்தில்தான் காபத்துல்லாஹ் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. உலகின் முதல் மனிதர் ஆதம்நபி படைக்கப்படுவதற்கு முன்பே வானவர்கள் இவ்விடத்தில் காபத்துல்லாஹ்வை உருவாக்கி இறைவனை வணங்கி வந்ததாக ஓர் இஸ்லாமிய நம்பிக்கை உண்டு.
அதன்பின் ஆதம் நபி காபாவை கட்டினர். மூன்றாவதாக ஆதம் நபியின் மகன் ஷீத் நபிகள் காபாவை கட்டினார். நூஹ் நபிகள் காலத்தில் சேதம் அடைந்த காபாவை இப்ராஹீம் நபிகளும் இஸ்மாயீல் நபிகளும் நான்காவதாக காபாவை கட்டினர். ஐந்தாவதாக அமாலிகா என்கிற குலத்தாரும் ஆறாவதாக ஜுர்ஹும் குலத்தாரும் ஏழாவதாக நபிகள் நாயகத்தின் ஐந்தாவது தலைமுறை பாட்டனார் குஸைக் பின் கிலாப் காபாவை கட்டினார். எட்டாவதாக குரைஷிகள் கட்டினர். ஒன்பதாவதாக நபி தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) கட்டினார். பத்தாவதாக ஹஜ்ஜாஜ் பின் யூசுப் கட்டினார்.
காபா என்றால் சதுர வடிவக்கட்ட்டம் என பொருள். காபாவின் உயரம் 53 அடி. நீளம் மேற்கில் 45அடி. கிழக்கில் 49அடி. வடக்கிலும் தெற்கிலும் 31அடி. காபாவின் தென்கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த் என்றும், வடகிழக்கு மூலைக்கு ருக்னுல் இராக்கி என்றும், தென்மேற்கு மூலைக்கு ருக்னுல் யமானிக் என்றும், வடமேற்கு மூலைக்கு ருக்னுஷ் ஷாமி என்றும் பெயர் சொல்லி அழைக்கின்றனர்.
இதன் தென்கிழக்கு மூலையில் தவாப் செய்யும் இடத்திலிருந்து 1. 10 மீட்டர் உயரத்தில் வெள்ளி வளையத்திற்குள் ஹஜருல் அஸ்வத் சொர்க்கக்கல் பதிக்கப்பட்டுள்ளது.
தவாப் செய்கிறவர்கள் இங்கிருந்து தான் தவாப்பை ஆரம்பிப்பார்கள். தவாப்பை முடிக்கும் இடமும் இதுதான்.
ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் தரையிலிருந்து இரண்டே கால் மீட்டர் உயரத்தில் காபாவின் உள்ளே நுழைவதற்கான வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 1. 90 மீட்டர். நீளம் 3. 10 மீட்டர். இதன் கதவு முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. 13 420000 சௌதி ரியால் செலவில் 280 கிலோ தங்கத்தால் இக்கதவு தயாரிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு மும்முறை கதவு திறக்கப்பட்டு உள்பகுதி ஜம்ஜம் நீரால் கழுவிச் சுத்தம் செய்யப்படும். ஹஜருல் அஸ்வத்துக்கும் வாசலுக்கும் இடையே உள்ள நான்கடி அகலமுள்ள சுவற்றிற்கு முல்தஜம் என்று பெயர். இந்தச் சுவற்றில் வலது கன்னத்தையும் நெஞ்சையும் பதித்து பிரார்த்தித்தால் வேண்டியது கிடைக்கும்.
மக்காவில் மட்டும் பிரார்த்தனைகள் பலிதமாகும் இடங்கள் 15 உள்ளன.ருக்னே இராக்கி மற்றும் ருக்னே ஷாமி ஆகிய காபாவின் இரு முனைகளுக்கும் எதிரில் அரை வட்ட வடிவில் 1. 32 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு ஹதீம் என்றே பெயர். இதற்கு ஹிஜ்ரே இஸ்மாயீல் என்கிற பெயரும் உண்டு. இச்சுவரின் சுற்றளவு 21. 57 மீட்டர் நீளமாகும். இந்த ஹதீமுக்கு நேர் மேலே காபாவின் மீது விழும் மழை நீர் வடிவதற்காக ஒரு வடி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இது தங்கத்தால் செய்யப்பட்டது. இதற்கு மீ ஜாபுர் ரஹ்மத் என்கிற பெயர் உண்டு. இதன் கீழ் செய்யப்படும் பிரார்த்தனைகளும் நிச்சயம் நிறைவேறும்.
காபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கருப்பு நிற துணிக்கு கிஸ்வா என்கிற பெயர் உண்டு. 700 வருடகளுக்கு முன் வாழ்ந்த ஏமன் நாட்டு மன்னர் துப்பவுல் அயத் என்பவர் முதன் முதலில் காபாவை போர்வையால் போர்த்தி கவுரவித்தார். கிஸ்வா 670 கிலோ பட்டுத்துணி. அதன் மீது தங்கள் வெள்ளி திருக்குர்ஆன் ஆயத்துகள். ஒரு கிஸ்வாவின் மதிப்பு 22மில்லியன் சௌதி ரியால்கள். வருடாவருடம் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அன்று காபா புதுகிஸ்வா அணிந்து கொள்கிறது.
காபாவை சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு ஹரம் ஷரீப் என்று பெயர். பரப்பளவு 88ஏக்கர். பள்ளியில் தலா 89 மீட்டர் உயரமுள்ள ஒன்பது மினாராக்கள். பள்ளிக்கு 95 வாசல்கள். ஒரு மணி நேரத்தில் 130000 பேர் தவாப் செய்யவும் 820000 பேர் தொழவும் இப்பள்ளியில் இடவசதி உண்டு. 60000 காவலர்கள் 10000 பாதுகாப்பு கேமிராக்கள். சங்கை பொருந்திய வீடாகிய காபாவையும் சங்கையான மாதத்தையும் பலி பிராணிகளையும் அடையாளமிடப்பட்ட பிராணிகளையும் மனிதர்களுக்கு நிலைப்பாடமாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான் என திருக்குர்ஆன் கூறுகிறது.
காபாவின் சாவியை பனி ஷாய்பா (அல்ஷாய்பி) குடும்பத்தின் வழி உத்மான் இபன் தல்ஹாவிடம் நபிகள் நாயகம் ஒப்படைத்துள்ளார். தற்சமயம் அவர்களின் நேரடி வாரிசான ஷேக் அப்துல் வஹாப்பின் ஜைன் அல் அபிதீன் அல்ஷாய்பியிடம் சாவி உள்ளது.
அந்தச் சாவி ஒரு கலைப்பொருள். அது தங்கமுலாம் பூசிய நிக்கல் உலோகத்தால் செய்யப்பட்டது. அந்த சாவி பரஸ்பர நம்பிக்கையாலும் விசுவாசத்தாலும் இறை நேசத்தாலும் மகிமை பெற்றுள்ளது.