ஓர் இடைச்செருகல்.
அக்காலத்தில் மக்காவுக்கு வரும் ஹஜ் பயாணிகளிடம் நுழைவு வரி வசூலிக்கப்பட்டது.
அது அந்நகர் ஆளுநர் இட்டிருந்த சட்டம்.
வரிகட்டினால் மட்டுமே ஹஜ்ஜுக்கு அனுமதி என்ற கடுமையான சட்டம்.
வசூலிக்கப்படும் வரிகளே மக்கா நிர்வாகத்தினருக்கான வருமானமாய் இருந்து இருக்கிறது. ‘இது எங்களுக்கு அதிகப்படியான பொருளாதார சிரமத்தை அளிக்கிறது’ என்று மக்கள் தங்களின் கோரிக்கையை சுல்தான் ஸலாஹுத்தீனின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
துரித நடவடிக்கை எடுத்தார் ஸலாஹுத்தீன்.
‘மக்காவின் ஆட்சியாளருக்கு அந்த வரிகளுக்கான இழப்பீட்டை நாம் நமது சொத்தில் இருந்து அளிப்போம். அவருக்கு நிலங்களை ஒதுக்குவோம். அதிலிருந்து அவர் பயனீட்டலாம்’ என அறிவித்தார் சுல்தான்.
வெறுமனே அறிவிப்புடன் நில்லாது மக்காவின் ஆட்சியாளருடன் ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்தினார் சுல்தான்.
ஹஜ் பயணிகளின் வரிகளுக்கு பகரமாய் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் கிலோ கோதுமை மக்கா நிர்வாகத்திற்கு வழங்க உடன்படிக்கை கண்டார் சுல்தான்.
இன்னும் அந்த உடன்படிக்கையின்படி 12 லட்சம் கிலோ கோதுமை மக்கா நிர்வாகத்திற்கு வழங்கப்படுகிறது.
வருடாவருடம் வரும் கோடிக்கணக்கான ஹஜ் பயணிகள் அந்த சுல்தானுக்கு மானசீகமாக நன்றி செலுத்தி கொண்டிருக்கின்றனர்.
நூறு மில்லியன் அமெரிக்கன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியின் மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்காவின் ஹரம் ஷரீப் முதலிடத்தில் உள்ளது. அது எங்களை வரவேற்றது.
ஹரம் ஷரீப் ஒரு மில்லியன் சதுர மீட்டர் கொள்ளளவைக் கொண்டது. ஒரே நேரத்தில் இரண்டு மில்லியன் மக்கள் ஹரம் ஷரீப்பை தரிசிக்க முடியும். ஆண்டு தோறும் 2 கோடி யாத்தீரிகர்கள் இங்கு வருகின்றனர். இந்த ஹரம் ஷரீப் ஒரு நாளின் 24 மணி நேரமும் திறந்திருக்கும். 1400 ஆண்டுகளுக்கு மேலாக இது முழுமையாக மூடப்படவில்லை.
1800 துப்புரவு பணியாளர்களும் 40 எலக்ட்ரிக் சானிடரி கிளினீங் கார்களும் உள்ளனர். 40 ஆயிரம் கம்பளங்களால் மூடப்பட்ட தரை (ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது) 79 கிமீ. 13000 கழிப்பறைகள் தினமும் நான்கு முறை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன. 25, 000 குடிநீர் விநியோகிகள். தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. ஜம்ஜம் கிணற்றிலிருந்து அதிகப்படியான நீர் 17 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் கொள்ளளவு கொண்டு சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.
ஹராமைன் ஓதுதல் சேவை. குர்ஆன் ஓதுதல் ஒளிபரப்பு. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குர்ஆன் ஓதுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பத்து முறைகளை பயன்படுத்தி ஓதுதல். 180 நாடுகளில் ஐந்து லட்சம் அத்தியாயங்கள் மூன்று ஆண்டுகளில்
ஒளிபரப்பப்பட்டன.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள். 100க்கும் மேற்பட்ட ஏர் கண்டிசனிங் யூனிட்கள். மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது. இதனால் வளாகத்தில் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவதற்காக விசேஷ விசிறி சேவை உண்டு.
மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய டிஜிட்டல் மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு. கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும். ஆடியோ சிஸ்டத்தின் பிழை விளிம்பு பூஜ்யம் சதவீதம். 6000 பேச்சாளர்கள். நான்கு வெவ்வேறு ஆடியோ அமைப்புகள். ஐம்பது ஒலி பொறியியல் பணியாளர்கள். 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனின் பிரதிகள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் வசதிகள் உண்டு. பத்தாயிரம் வழக்கமான சக்கர நாற்காலிகள் இலவசமாய் பயன்படுத்தபடுகின்றன. 400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உண்டு. ரமலான் முழுவதும் ஒவ்வொரு நாளும் நோனபு திறக்க நான்கு மில்லியன் இலவச உணவு. விதைகள் நீக்கப்பட்ட ஐம்பது லட்சம் பேரீச்சம் பழங்கள் ரமலானின் போது மசூதி பகுதியில் ஒவ்வொரு நாளும் விநியோகிக்கப்படுகிறது. நோன்பு திறந்த பிறகு மஹ்ரிப் தொழுகைக்கான இடத்தை இரண்டே நிமிடங்களில் சுத்தம் செய்கிறார்கள்.
ஓர் இந்து மதச் சகோதரன் திருப்பதி, காசி, இராமேஸ்வரத்தில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, ஒரு கிறிஸ்துவன் ஜெருசலேமில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, ஒரு யூதன் டெம்பிள் மவுண்ட்டின் வாசலில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, புத்தர் பிறந்த இடம் லும்பினியில், ஞானம் பெற்ற புத்தகயாவில், முதல் உபதேசம் செய்த சாரநாத்தில், மரணமடைந்த குஷி நகரில் புத்த மதத்தினர் கால் வைக்கும் போது என்ன உணர்வைப் பெறுவார்களோ, அதே மகோன்னதமான உணர்வு எனக்கும் ஆர்னிகாவுக்கும் ஏற்பட்டது.
கோடிக்கணக்கான யாத்ரீகர்களின் மத நம்பிக்கை சார்ந்த அதிர்விசை காற்றில் நர்த்தனமாடிக் கொண்டேதான் இருக்கும். அந்த அதிர்விசை நம் ஆன்மாக்களை தாலாட்டி பாராட்டிச் சீராட்டி மகிமைப்படுத்தும்.
ஆன்மிகத் தலங்களுக்கு நாத்திகர்கள் சென்றால் அவர்களும் கூட பக்தி அதிர்விசையை நேர்மறையாய் அனுபவிப்பர். காபாவை தவாப் செய்பவர்களை 30 நொடிகள் கூர்ந்து கவனித்தேன். நூற்றி இருபதிலிருந்து 190 நாடுகளிலிருந்து ஆன்மிகப் பயணிகள் வந்திருக்கிறார்கள்.
கருத்த உயரமான ஆப்பிரிக்க முஸ்லிம்கள், மஞ்சள் நிற குள்ள சீன மலேசியா முஸ்லிம்கள், சிவந்த உயரமான ரஷ்ய முஸ்லிம்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள். ஏசியா பசிபிக், வட ஆப்பிரிக்கா, மத்தியகிழக்கு முஸ்லிம்கள். இனம், மொழி, நிறம், பிராந்தியம், பொருளாதாரம், உணவு பழக்க வழக்கம் அரசியல் பின்னணி வெவ்வேறானவர்களின் மகா சங்கமம் இங்கே நடக்கிறது.
தாயை முதுகில் சுமந்து கொண்டு தவாப் செய்யும் மகன். தந்தையை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்லும் மகள். ஒருவர் கையை ஒருவர் கட்டிக்கொண்டு மனிதச் சங்கலியாய் நகரும் இஹ்ராம் கூட்டம். யார் யார் மீது மோதினால் யாருக்கும் கவலை இல்லை. ஆண்- பெண் பாகுபாடு இல்லை. தவாப் கூட்டம் அலைஅலையாய்ச் சுற்றிச் சுழன்றது.
அனைத்து பாகுபாடுகளையும் களைந்து விட்டு ஒற்றை சொல் ‘இஸ்லாமியன்’ என்கிற வட்டத்திற்குள் சர்வமும் ஒடுங்கும் பேரதிசயம் அங்கே நடந்தது.
காபாவை நெருங்கி சுற்றுவதில் சிறு சிரமம் இருந்தது. கூட்டத்தில் தவறி விழுந்து மிதிபட்டு விடுவோமோ என்கிற பயம் ஆர்னிகாவுக்கு இருந்தது. அவர் என் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்கி தவாப் சுற்றினார்.
ஏழுமுறை காபாவை தவாப் செய்தோம். மக்கா இப்ராஹீமுக்கு அருகில் ஒரு இடத்தில் இரண்டு ரக்காத் தொழுதோம். ஸபா-மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை சயீ செய்தோம்.
முதலிலேயே பைரோஸ்கான் கூறியிருந்தார்.

“உம்ரா முடிந்தவுடன் நீங்கள் மொட்டையடிக்க வேண்டாம். ஹல்க் தேவையில்லை. சிறு முடியை கத்தரித்துக் கொண்டால் போதும்” (தகஸீர்) ஆனால் ஆர்னிகா பிடிவாதமாக இருந்தார்.
“உம்ரா செய்தால் முழுமையாக செய்ய வேண்டும். மொட்டை அடித்துக் கொள்ளப் போகிறேன்!”
ஏழு ரியால் கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டார். நான் முடி சிறிதைக் கத்தரித்துக் கொண்டேன்.
“ஆர்னிகா! உங்க நண்பர் பைரோஸ்கான் அனுப்பிய வழிகாட்டி வந்து சந்திக்கவே இல்லை. புத்தக வெளியீட்டுக்கும் பைரோஸ் இல்லை! என்ன செய்யலாம்?”
“வகிதா! நீயே புத்தகத்தை வெளியிட்டு விடு. அதுதான் மிகப் பொருத்தம்.. இது நான் உனக்கு செய்யும் கௌரவம்!”
‘கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள்’ பிரதியை காபாவுக்கு முன்னர் வைத்து வெளியிட ஆயத்தம் பண்ணினோம்.
ஒரு காவல் அதிகாரி குறிக்கிட்டார். அரபியில் வினவினார், “என்ன செய்கிறீர்கள்?” விளக்கினோம்.
“இதனை நீங்கள் இங்கு செய்ய முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்!” என்றார்.
திடுக்கிட்டோம்.