ஆர்னிகாவின் பலூன் முகம் மேலும் வீங்கியது.
“இங்க நூல் வெளியிட முன்னனுமதி பெற்றீர்களா?” அரபியில் கேள்வியை ஹரத்தின் பாதுகாவலர் தூக்கி வீசினார்.
ஆர்னிகா கைகால்களை பிசைந்து சுருளிராஜன் வித்தை காட்டினார். பின் அரைகுறை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சமிக்ஞை மொழியிலும் பாதுகாவலருடன் பேசினார்.
“நாங்க இந்தியாவில் இருந்து வந்திருக்கம்”
“சரி, அதுக்கென்ன?”
“நாங்க சீனியர் சிட்டிசன்ஸ்!”
“உங்களை விட இருபது முப்பது வயது கூடியவர்கள் எவ்வித சலுகையும் கேட்காமல் ஹஜ் உம்ரா நிறைவேற்றுகிறார்கள்!”
“நான் எழுத்தாளன்!” காற்றில் எழுதிக் காட்டினார்.
“ஓகே!”
“எங்களோட நீண்ட நாள் ஆசை புனிதகாபா முன் எங்க இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பை வெளியிடனும்னு…”
“உம்!”
“அஞ்சே நிமிஷம்… புக் வெளியீடு முடிஞ்சிடும்!”
என்ன புரிந்தததோ அந்த பாதுகாவலர் புன்னகைத்தார்.
“சரி, வெளியிட்டுக்கங்க!” எங்கள் திறன்பேசியை வாங்கி ஒளிப் படம் எடுத்துக் கொடுத்தார்.
“உங்களுடன் ஒரு படம்!”
மறுத்து விட்டார்.
முதல் உம்ரா முடிந்தது. முதல் உம்ரா மகள், மருமகன், மகன், மருமகள், இரு சம்பந்தி வீட்டாருக்காக நிறைவேற்றினோம். அல்-ஹரத்தை விட்டு வெளியே வந்தோம்.
இருவரும் தேநீர் அருந்தினோம். அங்கிருக்கும் கடைகளில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் இந்தியர்கள், பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள்.
கிளாக் டவரை அண்ணாந்து பார்த்தோம்.
அந்த மணிக்கூண்டை அப்ராஜ் அஸ்ஸாத் என்றும் அப்ராஜ் அல் பைத் என்றும் அழைப்பர். மணிக்கூண்டு 2002ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2011ல் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த மணிக்கூண்டு உலகத்திலேயே உயரமான மணிக்கூண்டு என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிக்கூண்டு கட்டடம் கட்ட ஆன செலவு 15பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். அந்த மணிக்கூண்டை அரசர் அப்துல் அஜீஸ் அறக்கட்டளை திட்டம் தான் தீர்மானித்தது. மக்கா நகரத்தை அதிநவீனப்படுத்துவதே அரசின் நோக்கம். இது உலகில் நான்காவது உயரமான கட்டடம். சுயமாய் கட்டப்பட்டதில் உலகில் ஆறாவது உயரமான கட்டடமாக திகழ்கிறது.
அந்த மணிக்கூண்டில் ஏழு காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. கிளாக் டவர் உச்சிக்கு சென்று மக்கா நகரை ஒரு பறவை பார்வை பார்க்கலாம். அந்த மணிக்கூண்டின் நான்காவது தளத்தில் தான் கிளாக்டவர் ம்யூசியம் இருக்கிறது.
கிளாக் டவரின் உயரம் 1991 அடி அல்லது 607 மீட்டர். ஆன்ட்டெனா இருப்பு 305 அடி அல்லது 93 மீட்டர். கூரை 1667 அடி அல்லது 508 மீட்டர். மேற்தளம் 1621 அடி அல்லது 494மீட்டர். விண்காண்கூடம் 1589 அடி அல்லது 484 மீட்டர் உயரம். 96 லிப்ட்டுகள் உள்ளன. கிளாக் டவரை நிர்மாணித்த பொறியாளர்கள் எஸ்.எல்.ராஸ்க் ஜிம்ப் மற்றும் தர் அல் ஹன்டாஷா.
கிளாக் டவரின் இணையதளம் theclocktowers.com
கிளாக் டவர் பிரதான மஸ்ஜித்திலிருந்து 980 அடி அல்லது 300 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஒப்பந்தகாரர்களின் பெயர் சௌதி பின் லாடின் குழுமம். கிளாக் டவரை அஜ்யத் கோட்டையை இடித்துதான் கட்டினார்கள்.
அது 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒட்டோமான் கோட்டை. அது மலையின் மேல் இருந்து கொண்டு மஸ்ஜித்தை தூரப்பார்வை பார்த்திருந்தது.
இந்த இடிப்பு 2002ல் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக துருக்கி தனது பலமான எதிர்ப்பை பதிவு செய்தது.
சீன ஸென்ஜென்னின் பிங்க் அன் பொருளாதார மையம். துபாயின் புர்ஜ் கலிபா கோலாலம்பூரின் மெர்டெக்கா 118. கீழ் மன்ஹட்டனின் உலக வர்த்தக மையம். டோக்கியோவின் டோக்கியா ஸ்கைட்ரீ சீனாவின் ஜிபெங் டவர், ஷாங்காயின் ஷாங்காய் டவர், டொரன்டோவின் சி என் டவர், சீனாவின் கான்டன் டவர் எல்லாமே மெக்கா நகரின் கிளாக் டவரின் உயரத்தோடு போட்டி போடக் கூடியவை.
கிளாக் டவரின் ஐந்து தளங்களில் ஷாப்பிங் மால்களும் ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதியுள்ள வாகன நிறுத்துமிடமும் உள்ளன.
கிளாக் டவரில் காணப்படும் கடிகாரங்களை PERROT GMBH & CO KC TURMUHREN UND LAUTEANLAGEN உருவாக்கினர்.
கிளாக் டவரை கட்ட இஸ்லாம் அல்லாதோர் அனுமதிக்கப்பட வில்லை. போலந்து மற்றும் ஜெர்மனி கட்டடக்கலை வல்லுநர்கள் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி டவரைக் கட்டினர்.
இலவச அனுமதி என நினைத்து ஆர்னிகா கவுன்ட்டரில் போய் விசாரித்தார்.
அருங்காட்சியகத்தை பார்க்க ஒருவருக்கு 150 சௌதி ரியால் (இந்திய மதிப்பு 3000 ரூபாய்) விஐபி கட்டணம் தலைக்கு 300 சௌதி ரியால் (இந்திய மதிப்புக்கு 6000ரூபாய்). இருவருக்கும் சாதாரண டிக்கெட் 6000 ரூபாய்.
ஆர்னிகாவுக்குள் கஞ்சத்தனம் தலை விரித்தாடியது.
“வகிதா! நீ மட்டும் போய் ம்யூசியத்தை சுற்றி பாத்து போட்டோ எடுத்திட்டு வந்திடு. நான் வெளியே காத்திருக்கிறேன். மூவாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி விடலாம்!”
ஒரு பெருச்சாளியை முறைப்பது போல முறைத்தேன்.
“யோவ்! மீண்டும் ஒரு முறை மக்கா வருவோமா என்பது சந்தேகமே. இதில எல்லாம் கணக்கு பார்க்காதே”
“இருவரும் பாக்காமல் போய் விடுவோமா?”
“நோ… நாமிருவரும் போகிறோம்! இரண்டு டிக்கெட் எடுங்கள்!”
இரண்டு டிக்கெட் எடுத்தார் ஆர்னிகா.
அந்த அருங்காட்சியகம் அப்ராஜ் அல் பைத் காம்ப்ளக்ஸில் ஐந்து தளங்களாக அமைந்திருந்தது.
உள்ளே போனால் -
உலகம் தோன்றியதிலிருந்து இது நாள் வரை நேரத்தை எப்படி கணித்தார்கள்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? விண்வெளி பௌதிகத்தின் பரிமாணங்கள் இவற்றுக்கான விஞ்ஞான ஆன்மிகப் பயணம் கிடைக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தை மிஸ்க் அறக்கட்டளை நடத்துகிறது.
முதல் தளம் : மெக்கா கிளாக் டவர் உருவாக்கப்பட்ட விதமும் அதன் தொழில்நுட்பமும் காட்சி வடிவங்களாய்
இரண்டாவது தளம்: நேரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் அளந்த விதம் (பெண்டுலம் மற்றும் நீர்க் கடிகாரம்)
மூன்றாவது தளம்: விண்வெளி பௌதிகமும் சூரிய மண்டலமும் (சூரியன், பூமி, நிலா)
நான்காவது தளம் : பால்வெளி பிரபஞ்சமும் ட்ரில்லியன் நட்சத்திரங்களும்
அருங்காட்சியகத்தின் காட்சி நேரம் மதியம் 2 மணியிலிருந்து இரவு 11 மணி வரை.
இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம்.
மீண்டும் வெளியே வந்து தேனீர் அருந்தினோம்.
நாங்கள் தங்கி இருந்தது மிகவும் வசதியான ஹோட்டல் தான். ஆனால் ஒவ்வொரு முறை ஹோட்டலிருந்து ஹரம் வருவதற்கும் ஹரத்திலிருந்து ஹோட்டல் திரும்புவதற்கும் நூற்றுக்கணக்கான ரியால்கள் அநியாயமாக செலவழிந்தன.
ஹரத்திலிருந்து ஹோட்டல் போக டாக்ஸி கிடைப்பது குதிரைக் கொம்பு. பெரும் கூட்டம் அலைமோதும்.
ஒரு டாக்ஸிக்கு இருபது ஹஜ்ஜாளிகள் போட்டி போடுவர்.
டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இறங்கி பாலும் பிரட்டும் கேக்கும் வாங்கினோம்.
ஹோட்டல் அறையில் சமையலறை இருந்தது.
சுடச்சுட காபி போட்டு நானும் ஆர்னிகாவும் பருகினோம்.
அமர்ந்து மறுநாள் நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தோம்.
“முதல் உம்ரா முடித்துவிட்டோம். இரண்டாவது உம்ராவை ஆயிஷா பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாளை காலை மஸ்ஜித் ஆயிஷா உம் அல் முமினீன் (மஸ்ஜித் அல் தனீம்) போய் இரண்டு ரக்காத்து தொழுதுவிட்டு மீண்டும் இரண்டாவது முறையாக இஹ்ராம் அணிவோம்!”
“ஓகே டன்!” என்றேன்.
போடிம் செயலி அழைப்பு வந்தது. எடுத்தார்.
எதிர்முனையில் ஆன்மிக வழிகாட்டி பைரோஸ்கான்.
“நாளை மாலை மஸ்ஜித் அல் ஹரமில் சந்திப்போம்!” என்றார்.
பைரோஸ்கான் நூல் வெளியிட வரவில்லை. அவரது நண்பரையும் வழிகாட்ட அனுப்பவில்லை என்கிற மனதாங்கலை தூக்கி எறிந்து விட்டு “இன்ஷா அல்லாஹ்! சந்திப்போம்!” என்றார் ஆர்னிகா.