“நாம கொஞ்ச நேரம் ஒரு விஷயத்தை பற்றி விவாதிப்போமா?” என்றார் ஆர்னிகா.
‘ஆஹா! இரு காதுகளிலும் இரத்தம் வரப்போகிறது. யோகி பாபுவுக்கு வாழ்க்கைப்பட்டா யோகி பாபுவுக்கு சோட்டி பின்னி விட்டு தான் ஆவணும்’
“சரி!”
“திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மொட்டை அடிக்கறதைப் பார்த்திருக்கிறோம். பழனி முருகனுக்கு பக்தர்கள் மொட்டை அடிக்கறதைப் பார்த்திருக்கிறோம். மொட்டை அடிக்கும் பழக்கம் ஒரு மதத்தை பார்த்து இன்னொரு மதத்திற்கு தொற்றியதா? நாத்திகர்கள் கோவிலுக்கு மொட்டை அடிக்கும் பக்தர்களைப் பார்த்து, ‘இரண்டு வாரத்தில மீண்டும் முளைக்கப் போகும் முடியை ஏன் கடவுளுக்கு காணிக்கை தருகிறீர்கள்? வெட்டினால் மீண்டும் முளைக்காத கை கால் விரல்களை கொடுங்கள் பார்ப்போம்’ என்பர்!”
“மதப் பழக்க வழக்கங்களைக் கிண்டல் பண்ணுவது எளிது. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் தாத்பர்யத்தை விளங்கிக் கொண்டால் கிண்டல் விலகி ஓடும்!” என்றேன் நான்.
“முதலில் இந்து மதம் மொட்டையடிப்பதை பற்றி என்ன சொல்கிறது என பார்ப்போம்!”
“சொல்லுங்கள் ஆர்னிகா!”
“இந்து மதத்தில் மொட்டை அடிப்பதற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. ஒன்று- அகங்காரம் துறத்தல். இரண்டு - உலகியல் ஆடம்பரங்களில் பற்றின்மை. மூன்று -ஆன்மிக மறுபிறவி”
“இந்து மதத்தில் பலவகை மொட்டைகள் உண்டுதானே?”
“பிறந்த குழந்தையின் முதல் முடி திருத்தத்தை முண்டன் அல்லது சூடகரணம் என்பர். நோக்கம் -முந்தைய பிறவி அசுத்தங்களை நீக்க மற்றும் மனம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியைத் தூண்ட!”
“குலதெய்வக் கோவிலில் தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடிப்பார்கள். இது ஒரு முக்கியமான நேர்த்திக்கடன் சடங்காகும். இவ்வகை மொட்டைகள் உறவுகளை பலப்படுத்திகின்றன. தாயை ‘அம்மா’ என்றும், தாய் மாமனை ‘அம்மான்’ என்றும் அழைக்கும் மரபில் உடன்பிறந்த சகோதர உறவை மதிக்கும் பண்பாக இம்மொட்டை கருதப்படுகிறது இல்லையா?”
“ஆமாம். இந்துக்களில் துறவறம் பூணுவோர் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இவ்வகை மொட்டைகளில் துறவிகள் தங்கள் கர்வத்தை, அழகைத் துறந்து தெய்வீகத்தில் முழுமையாகச் சரணடைகின்றனர். மொட்டையின் போது சிலர் தலையின் உச்சியில் உள்ள ஆன்மிக சக்தி மையத்தைப் பாதுகாக்க ஒரு சிறிய மயிர்க்கற்றையை விட்டு வைக்கிறார்கள்”
“ஆர்னிகா, இந்துக்கள் தங்கள் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை இறந்ததற்கு இறுதிச் சடங்குகளின் போது துயரம், பணிவு மற்றும் உலகியல் ஆடம்பரங்களை துறக்க மொட்டையடித்துக் கொள்கிறார்கள்!”
“இந்துக்களின் பலர் பிரார்த்தனைகள் நிறைவேறியதற்கு நன்றிக் கடனாய் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர். மொட்டை அடிப்பது எந்த மதத்திலிருந்து எந்த மதத்திற்குத் தொற்றியது என ஆராய்வதை விட மொட்டையடிக்கும் உன்னத நோக்கத்தை உணர்ந்து எதிக்கேள்விகள் கேட்காது வாயை மூடிக் கொள்வது உத்தமம்!”
“யூ ஆர் கரெக்ட் ஆர்னிகா!”
“அடுத்து பௌத்த மதத்தைப் பற்றிப் பேசுவோம். பௌத்த மதத்தினரும் தலைகளை மொட்டை அடித்துக் கொள்கின்றனர். தம்மதத்தின் மீதான தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த மொட்டை இங்கு அடிக்கப்படுகிறது. நோக்கம் தோற்றம் தொடர்பான புலன் சார் ஆசைகளை கைவிடுவதே. பௌத்தம் மொட்டையை ஒரு சமநிலைப்படுத்தியாக சமூக வர்க்கம் மற்றும் சாதீய அடையாளங்களை நீக்கும் நிவாரணியாக பாவிக்கிறது. மொட்டை பௌத்தத்தில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை நல்குகிறது. கூட்டுத்துறவற வாழ்க்கையில் பேன்களைத் தடுக்க, தூய்மை பேண மொட்டை பயன்படுகிறது!”
“ஜைனமதம் மொட்டை அடிப்பதைப் பற்றி என்ன சொல்கிறது ஆர்னிகா?”
“ஜைன மதம் முடிதுறத்தலை ‘கேஷ் லோச்சன்’ என்கிறது. தீவிரமான அஹிம்சை மற்றும் துறவத்தை வெளிப்படுத்தும் விதமாய் இவர்கள் தலைமுடியை ஒவ்வொன்றாய் கைகளாலேயே பிடுங்குகின்றனர். சவரக்கத்தி வைத்து மொட்டையடித்தால் தலைகேசத்தில் வசிக்கும் சிற்றுயிரிகள் பாதிக்கப்படுமாம். கேஷ் லோச்சன் ஆண் ஜைனத்துறவிகளுக்கும் துறவினிமார்களுக்கும் செய்யப்படுகிறது”
“கிறிஸ்துவ மதம் மொட்டைஅடிப்பதை ஆதரிக்கிறதுதானே?”
“ஆமா அதிலென்ன சந்தேகம்? வரலாற்று ரீதியாக கத்தோலிக்க மற்றும் மரபுவழி குருமார்கள் கிறிஸ்துவுக்கு தங்கள் கீழ்படிதலைக் குறிக்க மொட்டை அடித்துக் கொள்கின்றனர். 1972 ஆம் ஆண்டு வரை கிறிஸ்துவர்களிடையே ரோமானிய மொட்டை அடிப்பு முறை பழக்கத்திலிருந்தது. தலையின் உச்சியில் வட்ட வடிவமாய் சவரம் செய்யப்படுகிறது. அது சிம்பாலிக்காக இயேசுநாதரின் முள் கிரீடத்தைக் குறிக்கிறது!”
“யூத மதத்தில் மொட்டை?”
“தீவிர பழைமைவாத யூதர்கள் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். யூதப்பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டு ஷெய்டல் எனும் ஒரு விக்கை பொருத்திக் கொள்கின்றனர்!”
“மொட்டை அடிப்பதை பற்றி இஸ்லாம் என்ன கூறிகிறது?”
“திருக்குர்ஆன் 48: 27 ம் சஹீஹ் புகாரி முஸ்லிமும் இஸ்லாமில் மொட்டையை ஆதரிக்கின்றன. மொட்டை ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று (முபா) நபிகள் நாயகம், “முடிந்தால் அனைத்துக் கேசங்களையும் மழியுங்கள். இல்லாவிட்டால் முழுமையாக முடி வளர அனுமதியுங்கள்!” (shave it all or leave it all ) என்கிறார்”
“இஸ்லாம் பெண்கள் மொட்டை அடிப்பதை வலியுறுத்துகிறதா?”
“இல்லை. இஸ்லாம் பெண்கள் மொட்டை அடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது. மருத்துவக் காரணங்கள் இருந்தால் விதிவிலக்காய் மொட்டை அனுமதிக்கப்படுகிறது. இஸ்லாத்தில் மொட்டை தூய்மை அடைந்தத்தை உருவகப்படுத்துகிறது.
இஸ்லாமிய ஆண்கள் பாதி மொட்டை(Qaza) அடித்தல் கூடவே கூடாது!”
“இப்ப நாம உம்ராவுக்கு தலைமழித்தலைப் பற்றி பேசுவோம்!”
“சரி… மெக்காவில் மொட்டை அடிக்கும் நிலையங்கள் மொத்தம் எத்தனை இருக்கின்றன? என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது. மினாவின் ஜமாரத் காம்ப்ளக்ஸிலும், மஸ்ஜித் அல் ஹரமின் 30 டிகிரி சிகை திருத்த மையத்திலும் ஒரே நேரத்தில் 170 பேருக்கு மொட்டை அடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அந்த மையத்தில் மட்டும் 15000 யாத்ரீகர்கள் தலைக்கேசத்தை மழித்துக் கொள்கின்றனர்!”
“ஆஹா!”
“தலையை முழுமையாக மழித்துக் கொள்வது ‘ஹல்க்’ எனப்படும். சிறுமுடி கத்தரித்தல் ‘தக்ஸீர்’ எனப்படும். இஹ்ராமிலிருந்து வெளியே வர மொட்டை அதிமுக்கியம். மெக்காவில் தலைக்கேசம் மழிக்கும் இடங்களாவன-
* மர்வா வெளியேறும் வழி
* கிளாக் டவர் சுற்றிலும்
* ஜம்ஜம் டவர்ஸ்
* ஹில்டன் காம்ப்ளக்ஸ்
நான் கிளாக் டவர் கடை ஒன்றில் தலையை மழித்துக் கொண்டேன். பத்து சௌதி ரியால் கட்டணம். உரிமம் பெற்ற கடைகளில் மொட்டை அடித்தால் புதிய பிளேடு யூஸ் பண்ணுவர். சிலபல ஹஜ், உம்ரா பயணிகள் அவர்களே சொந்தமாய் சவரக்கத்தி கொண்டு வந்து விடுகின்றனர். சில சிகைக்கலைஞர்கள் சவரக்கத்தி இல்லாமல் எலக்ட்ரிக் லேசர் வைத்து மொட்டை அடிக்கின்றனர்!”
“பெண்கள் எவ்வளவு நீளத்தில் முடியை கத்தரித்து உம்ராவை நிறைவு செய்யலாம்!”
“ஒரு செமீ அல்லது ஒரு விரற்கடை அளவு முடியை கூந்தலின் நுனியில் கத்தரிக்கலாம். இதனை பெண்கள் அவர்களே அவர்களின் தங்கும் இடத்தில் கத்தரித்துக் கொள்ளலாம்”
“ஒரு கேள்வி. என்னை திட்டக்கூடாது ஆர்னிகா?”
“சரி கேளு!”
“தலையில் முழு வழுக்கை உள்ளவர்கள் மொட்டை அடிக்காமல் பத்து ரியாலை மிச்சப்படுத்தலாமில்ல?”
“இல்லை. அவர்களும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்!”
“ஓ!”
“உம்ராவிற்கு பிறகு மொட்டை அடிப்பது வாஜிப் அல்லது ருகூன் (WAJIB or RUKUN) ஒரு யாத்தீரிகர் நான்கைந்து உம்ராக்கள் நிறைவேற்றுகின்றார் எனில் ஒவ்வொரு உம்ராவுக்கும் தனித்தனி மொட்டை அடிக்க வேண்டும். ஹனபி பிரிவினர் தலையில் கால்வாசி பங்கு மொட்டை அடித்தால் போதுமானது என்கின்றனர். ஷாபி மூன்று முடி கத்தரித்தால் போதும் என்கின்றனர். ஒவ்வொரு உம்ராவுக்கும் தனித்தனி இஹ்ராம் உடுத்த வேண்டும். நபிகள் நாயகம் ஒரு விசிட்டில் ஏராளமான உம்ராக்களை நிறைவேற்றுவதை ஆதரிக்கவில்லை. ஆயிஷா ரலி அவர்கள் உம்ரா செய்யும் போது மாதவிலக்கு வந்துவிட்டது. ஆனால் இறைவனின் ஆணைப்படி அவர் ஹஜ் கிரான் நிறைவேற்றினார். அதாவது ஒரே இஹ்ராம் ஆடையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுவது!”
“நமக்கான உம்ராவை நிறைவேற்றிய பிறகு இறந்து போன தாய்தந்தைக்கும் உம்ரா செய்யலாம். இல்லையா?”
“தாராளமாக!”
“ஒரு ட்ரிப்பில் ஒரு உம்ரா சுன்னத். தூர தேசத்திலிருந்து உம்ரா நிறைவேற்ற வருவோர் ஒன்றுக்கும் மேற்பட்ட உம்ராக்களை நிறைவேற்றலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள், அல்லது தினம் ஒரு உம்ராவை நிறைவேற்றலாம்”
“உம்ரா நிறைவேற்றும் போது பெண்கள் மார்பு உள்ளாடை அணியலாமா!”
“அணியலாம்”
“அத்தியாயம் முடிப்பதற்கு முன் ஒரு கேள்வி. ஷியா பிரிவினர் ஏன் ஆயிஷா ரலியை நிராகரித்தனர்?”
“முதல் மூன்று கலீபாக்களை விட ஆயிஷா நாச்சியாரை விட (தற்போதைய ஈரானில் 90சதவீதம் ஷியாகள் உள்ளனர்) ஷியா பிரிவினர் அலியை நேசித்தனர். அதனாலேயே தங்களை ‘ஷியாத் அலி’ அல்லது ‘அலியின் கட்சி’ என அழைத்துக் கொள்கின்றனர்.