பயணத்திற்குள் செல்வதற்கு முன் சில எளிய துணுக்குச் செய்திகளை இங்கே இணைக்கிறேன்.
* சவுதி அரேபியாவின் மஸ்ஜித் நமிரா அரபா மைதானத்தின் அருகில் அமைந்துள்ளது. ஹஜ் பயணத்தின் துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது நாள் மட்டும் இந்த மசூதி முழுமையாக திறக்கப்படும். இந்தப் பள்ளியில்தான் நபிகள் நாயகம் இறுதி ஹஜ் வந்த போது இறுதிப் பேருரை நிகழ்த்தினார். ஹஜ் நாளில் மதியத் தொழுகையை (லுஹர்), பிற்பகல் தொழுகையை (அஸர்) லட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் தொழுவர்.
* ஹஜ் பயணத்தின் போது ஹஜ் யாத்திரீகர்கள் தங்கள் உடல் நிலை குறித்த விவரங்கள் அடங்கிய மருத்துவத் தகவல் காப்பை அணிந்திருக்க வேண்டும் என அரேபியச் சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.
Live Healthy விழிப்புணர்வு தள வழிகாட்டி அதற்கு உதவுகிறது. ‘நல்வாழ்வுடன் ஹஜ்’ என்கிற பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே இது. அவசர உதவி எண் 937.
* மினாவில் மஷாயிர் மெட்ரோ எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. இந்த எக்ஸ்பிரஸ் மினா- அரபா -முஜ்தலிபா - ஜம்ராத் நிறுத்தங்களுக்கு இடையே செயல்படுகிறது. வருடத்தின் துல்ஹஜ் பிறை 7-13 வரை மட்டுமே இந்த மெட்ரோ இயங்கும். ஒரு மணி நேரத்தில் 72000 ஹாஜிமார்களை ஏற்றி இறக்குகிறது இந்த எக்ஸ்பிரஸ். இந்த மெட்ரோ முற்றிலும் இலவசம்.
* நபிகள் நாயகம் மசூதிக்கு வரும் பயணிகள் எளிதாகப் பயணம் செய்ய இரு புனித ஹரம் காரியாலய ஆணையம் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மசூதிக்கு உள்ளே இருக்கிற சேவை மையங்களைக் கண்டறிய இன்ட்ராக்டிவ் டிஜிட்டல் வரைபடத்தை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தச் சேவையை பெற தனி செயலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. க்யூஆர் கோடை ஸ்கேன் பண்ணினால் போதுமானது.
* நபிகள் நாயகம் மசூதியில் பணிபுரிவோர் ‘அகாவத்’ என அழைக்கப்படுகின்றனர். ஒற்றைப்படையில் ‘அஹா’ என விளிக்கலாம். இந்த வார்த்தை துருக்கி, குர்திஷ், பெர்ஷியன் மொழிகளிலிருந்து வந்தது. இந்தப் பணியாளர்கள் நபிகள் நாயகம் அறையில் மலக்குகளின் குரல்களைக் கேட்டதாகக் கூறுகின்றனர்.
* மதீனாவின் மஸ்ஜித் குபாவுக்கு வெளியே பிர் அல் அரீஸ் கிணறு உள்ளது. இதனை மோதிரக்கிணறு எனவும் கூறுவர். நபிகள் நாயகம் இந்தக் கிணற்றில் அமர்ந்தபடி நபித்தோழர்கள் அபூபக்கர், உமர், உஸ்மானுக்கு சொர்க்கம் கிடைக்கும் என அறிவித்தார். நபிகள் நாயகத்தின் வெள்ளி மோதிரம் அபூபக்கர் உமர் கைவழி உஸ்மானுக்கு சென்று, உஸ்மான் அந்த மோதிரத்தைக் கிணற்றில் தவறவிட்டார். மூன்று நாட்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. அசல் கிணறு இடிக்கப்பட்ட போதும் கிணறு இருந்த இடம் வட்டவடிவத் தரை அடைப்புக் குறியாய் பாதுகாக்கப்படுகிறது.
கம்மிங் பேக் டு தி பாயின்ட்…
மதீனா நகருக்குள் எங்கள் வாகனம் பிரவேசித்த போது, எங்கள் உடல்கள் சிலிர்த்தன. நபிகள் நாயகம் கிபி 622ல் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் (புலம் பெயர்வு) செய்த பிறகு மதீனாவில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். கிபி 632ல் தனது 63வது வயதில் மதீனாவில் தான் நபிகள் நாயகம் மரணமடைந்தார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பத்தாண்டு காலத்தில்தான் நபிகள் நாயகம் முதல் இஸ்லாமிய அரசை நிறுவினார்.
புழுதி பறக்க ஒட்டகத்தில் நபிகள் நாயகம் நபித்தோழர்களுடன் சவாரி செய்து மதீனா புகும் காட்சி மனக்கண்ணில் ஓடியது.
ஒரு பிரதான சாலையில் நானும் ஆர்னிகாவும் இறக்கிவிடப் பட்டோம்.
எங்களுக்காக எங்கள் மகள் ஜாஸ்மின் ஹாஸ்டல் 35-ல் அறை முன்பதிவு செய்திருந்தாள்.
முகவரி : அஸ்ஸலாம் சாலை 42315, மதீனா, சௌதி அரேபியா, கைபேசி எண் : 966 55 098 8277.
ஒரு டாக்ஸி எங்கள் அருகே சறுக்கி வந்து நின்றது.
“அஸ்ஸலாமு அலைக்கும் எங்கு போக வேண்டும்?” பாகிஸ்தானி டிரைவர் வினவினான்.
“வஅலைக்கும் ஸலாம். ஹாஸ்டல் 35 போக வேண்டும்!”
“இருபது சவுதி ரியால்!”
நாங்கள் இருவரும் தூண்டிலில் சிக்கிக் கொண்டோம். டாக்ஸி இரண்டு, மூன்று மணி நேரம் ஊரைச் சுற்றியது.
நாங்கள் சொன்ன முகவரியில் “விடுதி இல்லை” என்றான்.
பின் யாருக்கோ பேசினான்.
“அந்த விடுதியில் ஆண்கள் மட்டும்தான் தங்க முடியும். பெண்கள் தங்க முடியாது” என்றான்.
அடுத்தக் குண்டை வீசினான்.
“இது ஒரு பொய் முகவரி இப்படி ஒரு விடுதியே கிடையாது. இணைய வழியிலான மோசடி” என்றான். அதன்பின் சாவகாசமாக கூறினான்.
“கவலைப்படாதீர்கள். நான் உங்களை ஒரு புது விடுதிக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றான்.
ஒவ்வொரு விடுதியாய் ஏறி இறங்கி இடமில்லை என்றான்.
நள்ளிரவு 12 மணி.
ஒரு முட்டு சந்தில் டாக்ஸியை நிறுத்தினான். இரு பங்களாதேசிகள் அவனுடன் கூட்டு சேர்ந்தனர். மூவரும் குசுகுசுவென பேசினர்.
கடைசியில் பாகிஸ்தானி, “ஒரு அறை இருக்கிறது. 150 சௌதி ரியால் வாடகை கேட்கிறார்கள்” என்றான்.
இதற்கு மேல் நேரத்தை நீட்ட நான் விரும்பவில்லை.
டாக்ஸி வாடகை 200 சௌதி ரியால் வாங்கிக் கொண்டான்.
விடுதியின் அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுப் பெருமூச்சு விட்டோம். பணத்தை ஏமாற்றியதோடு விட்டார்கள் சண்டாளர்கள்!
மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தினோம்.
நாங்கள் தரிசிக்கப் போகும் இடம் நபிகள் நாயகம் மசூதி எனப்படும் மஸ்ஜிதுல் நபவி.
மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபிகள் நாயகம் ஹிஜ்ரா பயணம் செய்த போது கிபி 622ல் இந்த மசூதி கட்டப்பட்டது.
ஒரிஜினல் மசூதி சிறிய திறந்தவெளி பள்ளி. சேற்றால் செய்யப் பட்ட செங்கல்லாலும் பனை ஓலைகளாலும் கட்டப்பட்டது.
நபிகள் நாயகம் மதீனா வந்தபோது, அவரின் ஒட்டகம் QASWA ஒரு பேரீச்சைகளைக் காயப்போடும் கபர்ஸ்தானில் நின்றது.
அந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் சஹைல், சுஹைல் அனாதை சகோதரர்கள். அவர்களிடமிருந்து அபு அய்யூப் அல் அன்சாரி நல்கிய பணத்தால் அந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டது.
உலகின் இரண்டாம் மகா புனிதமான மசூதியாக இஸ்லாமின் இரண்டாம் பெரிய மசூதியாக மஸ்ஜிதுல் நபவி தற்சமயம் போற்றப்படுகிறது.
இந்த மசூதியில் தொழுமிடம், சமூகக்கூடம், நீதிமன்றம், மார்க்கப்பள்ளி, ஏழை மற்றும் அனாதைகளின் புகலிடம் உள்ளடக்கம்.
இந்தப் பள்ளியின் கிப்லா சுவர் முதலில் ஜெருசலேம் நோக்கி வடக்கு பக்கம் அமைந்திருந்தது. இறைவனின் ஆணைப்படி கிபி 624ல் கிப்லா தெற்கு பக்கம் காபா நோக்கி திருப்பப்பட்டது.
கிபி 628-629 கைபார் யுத்தத்திற்கு பிறகு இந்த மசூதி விரிவுபடுத்தப்பட்டது.
கிபி 639ல் கலீபா உமர் இபுனு அல் கட்டாப் மசூதியை விரிவுபடுத்தினார்.
கிபி 649ல் கலீபா உத்மான் இபுனு அப்பான் தேக்குமர கூரை நிறுவினார்.
கிபி 707- 712 முதலாம் காலிப் அல் வாகித் நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் இருப்பிடம் மற்றும் நபிகள் நாயகம் புதைக்கப்பட்ட இடம் இரண்டையும் இணைத்தார்.
கிபி 800ல் அபா சித் காலிப் அல் மஹ்தி மசூதி விரிவாக்கம் செய்தார்.
கிபி 1279ல் மாம்லுக் சுல்தான் அல்மன்சூர் காலாவுன் நபிகள் நாயகத்தின் கல்லறை மீது மர மாடம் கட்டினார்.
கிபி 1818ல் இரண்டாம் சுல்தான் மஹ்மூத் குவிமாடம் கட்டினார்.
கிபி1837-ல் குவிமாடத்திற்கு பச்சை நிற பெயின்ட் அடிக்கப்பட்டது.
கிபி 1850ல் சுல்தான் அப்துல் மஜீத் தொழுமிடத்தில் சிவப்புக்கல் பதித்தார். உட்புறம் அரேபிய கையெழுத்து கலை வேலைப்பாடுகள் செய்தார்.
கிபி 1909ல் அரேபிய தீபகற்பத்தில் முதலாவதாக நபிகள் நாயகம் மசூதிக்கு மின்சாரம் வந்தது.
கிபி 1951-55 மன்னர் அப்துல் அஜீஸ் அல் சாத் பள்ளியை நவீனப்படுத்தினார்.
கிபி 1985-1994 மன்னர் பகத் பள்ளிக்குள் கணினி மயப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலை நிறுவினார். பள்ளி முழுக்க பளிங்குதரை.
நபிகள் நாயகம் மசூதிக்குள் நான்கு கல்லறைகள் உண்டு. ஒன்று - நபிகள் நாயகம், இரண்டு -கலீபா அபூபக்கர், மூன்று - கலீபா உமர், நான்கு - ஈஸா நபி. மீண்டும் உலகிற்கு வந்து மரணிக்கும் போது அவரை அடக்கம் செய்ய ஒரு கல்லறை காலியிடமாகக் காத்திருக்கிறது.
ஜன்னத்துல் பாக்கி எனும் நபிகள் நாயகம் குடும்பத்தார் மற்றும் நபித்தோழர்கள் அடக்கஸ்தலம் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
விடுதியிலிருந்து காலார நபிகள் நாயகம் மசூதிக்கு நடந்தோம்.
மஸ்ஜிதுல் நபவி எங்களை இருகரம் விரித்து வரவேற்றது