நபிகள் நாயகம் பள்ளிவாசல் அல்லது மஸ்ஜிதுல் நபவி அல்லது குன்பாத் இ கிஜ்ரா 82000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்திருந்து.
மசூதி முதன்முதலில் கட்டப்பட்டதை விட, தற்சமயம் நூறு மடங்கு விரிவடைந்து பிரம்மாண்டமாய்க் காட்சியளித்தது.
இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் தொழலாம். மஸ்ஜித் அல் நபவியில் 42 முதன்மை வாயில்களும் 200 -க்கும் மேற்பட்ட நுழைவுப் புள்ளிகளும் உள்ளன.
ஒவ்வொரு நுழைவாயிலிலும் ‘அமைதியுடனும் பாதுகாப்புடனும் நுழையுங்கள்’ என்கிற திருக்குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
கிங் பகத் வாயில் நபவியின் முதன்மை நவீன நுழைவாயிலாக செயல்படுகிறது.
நுழைவாயில் கதவுகளில் 23 காரட் தங்கத்தினால் ஆன 1500 அலங்கார வட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மொத்த மசூதியும் 100 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரை, தூண், சுவர்கள் எல்லாவற்றிலும் தங்கம்.
மஸ்ஜித் அல் நபவி இஸ்லாமியக் கட்டிடக்கலையும் நவீனப் பொறியியல் தொழில்நுட்பமும் கூடிய மாயாஜாலம்.
நபவி 20 ஏக்கர்களில் பரந்து விஸ்வரூபித்துள்ளது.
இந்த மசூதியில்தான் சுற்றுப்புற சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்தும் கட்டடக்கலை அரங்கேறி உள்ளது.
உள்கட்டமைப்பு எனும் போது,
* ரவ்தா - நபிகள் நாயகம் அடக்கஸ்தலத்திற்கும் மிம்பர் இடத்திற்கும் இடையில் அமைந்துள்ள புனிதமான பகுதியே ரவ்தா எனப்படும். எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளம் அலங்கரிப்பு. பாவ மன்னிப்பு தூண். ஆயிஷா தூண்.
* பச்சை குவிமாடம் - இது தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற நினைவுச் சின்னம். நபிகள் நாயகம், அபூபக்கர் மற்றும் உமர் என்கிற இரு கலீபாக்களின் ஓய்விடம் அடங்கிய புனித அறை இங்குதான் உள்ளது.
* ஒட்டோமான் தொழுகை மண்டபம் - பழமையான தெற்குப் பகுதியான இது, நேர்த்தியான அலங்காரங்கள், கல்தூண்கள் இங்கு உண்டு. சிறிய ஈயம் மற்றும் வெள்ளிக் குவிமாடங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன.
நவீன விரிவாக்கம் எனும் போது,
செதுக்கப்பட்ட செயற்கைக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட தளங்கள் கூடிய நூற்றுக்கணக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தூண்களால் தாங்கப்படும் பிரமாண்டமான இரண்டு மாடிக் கட்டிடங்கள் விரிவாக்கத்தில் கட்டப்பட்டுள்ளன.
வெளிப்புற அமைப்பு எனும் போது,
* முற்றங்கள் - வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் அமைந்துள்ள பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட பிரமாண்டமான முற்றங்களில் பகலில் திறந்து இரவில் மூடிக்கொள்ளும் க்ளைமேட் கன்ட்ரோல் குடைகள் இங்கு உள்ளன. மொத்தம் மஸ்ஜிதுல் நபவியில் 262 குடைகள் உள்ளன. வெளியில் 250 பெரிய ஆட்டோமேடிக் குடைகளும் உள்ளே 12 சிறிய குடைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடையும் 25. 5 - 26. 5 மீட்டர் பரப்பளவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. குடைகளில் மழைநீர் வடிகுழாய்களும், கடிகாரங்களும் நூற்றுக்கணக்கான மின்விசிறிகளும், மின்விளக்குகளும், குளிர் நீர் ஸ்ப்ரேயும் இணைக்கப்பட்டுள்ளன. குடைகளின் வெப்பநிலை 8 டிகிரி சென்டிகிரேட்டிலிருந்து 10 டிகிரி சென்டிகிரெட் வரை. குடைகளில் 436 குளிர் நீர் ஸ்ப்ரே மின்விசிறிகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்தக் குடைகள், மணல் நிற டெப்ளான் பூச்சு செய்யப்பட்ட பொருளால் செய்யப்பட்டவை. இவை முழுமையான அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை கொண்டவை. இந்தக் குடைகள் அனைத்தும் மையக்கட்டுப்பட்டு அமைப்பின் மூலம் தினமும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நகர்த்தக்கூடிய குவிமாடங்கள் - நவீன விரிவாக்கத்தின் கூரையானது உள்ளறைகளில் இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தை நிர்வகிக்க தண்டவாளத்தில் சறுக்கி நகரும் 27 சதுர அடித்தளமுள்ள நழுவும் நகர்த்தக்கூடிய குவிமாடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மினாராட்டுகள் - மம்லூக் ஒட்டோமான் கட்ட்டக்கலை பாணிகளின் கலவைகளாக 341 அடி உயரமுள்ள 10 பிரமாண்டமான மினாராட்டுகள் உள்ளன. மஸ்ஜித் அல் நபவியில் ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹ்ராப்கள் உள்ளன. மிஹ்ராப்கள் என்றால் தொழுகை மாடங்கள் என பொருள். அந்த ஆறு தொழுகை மாடங்களில் ஒன்றை மட்டுமே இமாம் தொழுகைக்காக பயன்படுத்துகிறார். மீதி ஐந்து மாடங்களும் நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் தொழுத இடங்களின் நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆறு மிஹ்ராப்களின் பெயர்கள் இதோ-
1. மிஹ்ராப் நபவி - நபிகள் நாயகம் தொழுகை நடத்திய இடம்.
2. மிஹ்ராப் உத்மானி - ரவ்தாவில் அமைந்துள்ள இந்த மிஹ்ராப் மூன்றாவது கலீபாவான உத்மான் இப்னு அபான் (ரலி) அவர்கள் மஸ்ஜிதை விரிவுபடுத்திய போது இதனை சேர்த்தார்கள்.
3. மிஹ்ராப் சுலைமானி - (மிஹ்ராப் அல் ஹனபி) உதுமானிய சுல்தான் சுலைமான் தி மேக்னிபிசென்ட் அவர்களால் கட்டப்பட்ட இது பிரதான மிஹ்ராப்பின் இடதுபுறம் அமைந்துள்ளது.
4. மிஹ்ராப் தஹஜ்ஜுத் - ரவ்தாவின் பின்புறத்தில் அமைந்துள்ள இது நபிகள் நாயகம் அவர்கள் இரவுத் தொழுகையை தொழுது வந்த இடத்தைக் குறிக்கிறது.
5. மிஹ்ராப் பாத்திமா - ரவ்தாவிற்கு பின்னால் அமைந்துள்ள இது நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) வழிபட்ட இடத்தை நினைவுபடுத்துகிறது.
6. மிஹ்ராப் பைத் உல்- மக்டிஸ்- இந்த மிஹ்ராப் வரலாற்று ரீதியாக (ஆரம்ப கிப்லா) நோக்கி எதிர்கொண்டது.
முஸ்லிம்களுக்கு மூன்று மசூதிகள் மிகமிகப் புனிதமானவை. அவை;
1. மஸ்ஜித் அல் ஹரம் (மக்கா)
2. மஸ்ஜித் அல் அக்ஸா (ஜெருசலேம்)
3. மஸ்ஜித் அல் நபவி (மதீனா)
மஸ்ஜித் அல் நபவியின் முதல் இமாம் நபிகள் நாயகம்தான். முதல் அதான் கூறி தொழுகையாளிகளை வரவேற்றது நபித்தோழர் பிலால் இபுனு ரபா (ரலி).
நபவிக்குள் ஒரு லட்சம் விளக்குகளும் 2000 சான்ட்லியர் அலங்கார மின்பூக்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இப்போதைய மஸ்ஜிதுல் நபவியின் தலைமை இமாம் - ஷேக் அலி அல் ஹுதைபி.
இமாம் குழு அறிஞர் - ஷேக் சாலிஹ் அல் மகம்சி
பிரதி தலைமை இமாம் -ஷேக் சலாஹ் அல் புதைர்
குர்ஆன் ஓதுபவர் - ஷேக் அப்துல்லா அல் புய்ஜன், ஷேக் அப்துல் முஹ்சின் அல் காசிம்.
சொற்பொழிவாளர் - ஷேக் அப்துல் முஹ்சின் அல் துபைட்டி, ஷேக் அப்துல்லா அல் குராபி, ஷேக் முஹம்மது பர்ஹாஜி
மஸ்ஜித் அல் நபவியின் வெளிவாசலில் ஒரு சதுர பிரேம் இருந்தது. அதில் என்னை அமர வைத்து ஒளிப்படம் எடுத்தார் ஆர்னிகா.
உள்ளே நடந்தோம். சொர்க்கத்திற்குள் நுழைந்தது போல ஒரு பரவசம் பூத்தது.
நபிகள் நாயகத்திற்கு மிகவும் பிடித்த நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை. சுவனவாசிகள் பச்சை நிறத்தினாலான பட்டாடைகள் அணிந்திருப்பர் என இஸ்லாம் கூறுகிறது. எனக்கோ, ஆர்னிகாவுக்கோ பிரகாசமான நிறங்கள் எதுவென்றாலும் பிடிக்கும். நபவியை சுற்றினோம்.
எங்களைச் சுற்றி லட்சக்கணக்கான காஸ்மோ முகங்கள். நாடுகளும் நாட்டின் எல்லை கோடுகளும் மறைந்து அனைவரும் பூமிப்பந்தின் ஒரே இடத்தில் கூடியிருப்பது போல பிரமை பரவியது. ஓர் ஆப்பிரிக்கப்பெண் எனக்கு சலாம் கூறினாள். நான் பதில் சலாம் கூறினேன். உள்ளே போன நாங்கள் ஒளு செய்து தனித்தனியாக இரண்டு ரக்காத்துகள் தொழுதோம். எழுத்துப்பணி மேம்படவும் மகன் மகள் பேரன் பேத்தி சம்பந்தி குடும்பத்தார் நண்பர் உறவினர் மேன்மைக்காகவும் பிரார்த்தித்தோம்.
மஸ்ஜிதுல் நபவிக்குள் வாசல் எண் 307 வழியில் அமைந்திருக்கும் நபிகள் நாயகம் சுயசரிதை தொடர்பான திருவிழா மற்றும் அருங்காட்சியகத்துக்கு நுழைவு கட்டணம் 30 சௌதி ரியால்கள் அல்லது 900 ரூபாய் என்றிருந்தது. அதனைச் செலுத்தி அதற்குள் நுழைந்தோம்.
ஆர்னிகாதான் மியூஸியம் பைத்தியமாயிற்றே!