இந்தப் பகுதிக்குள் செவதற்கு முன்பாக சில இசுலாமியத் துணுக்குச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
* உலகின் 20 பெரிய மசூதிகள் பட்டியல் கீழே;
1. மஸ்ஜித் அல் ஹரம் (மக்கா) - 40 லட்சம் பேர் தொழுகை வசதி
2. அல் மஸ்ஜித் அன் நபவி (மதீனா) -15 லட்சம் பேர் தொழுகை வசதி
3. இமாம் ரெஸா சன்னதி (ஈரான்) - 1. 20 லட்சம் பேர் தொழுகை வசதி
4. கிராண்ட் ஜாமியா மசூதி (லாகூர், பாகிஸ்தான்)- 8 லட்சம் பேர் தொழுகை வசதி
5. ஜமா அல் ஜாஜெய்ர் (அல்ஜீரியா)
6. பைசல் மசூதி (இஸ்லாமாபாத், பாகிஸ்தான்)
7. அஸ்தானா கிராண்ட் மசூதி (கஜகிஸ்தான்)
8. இஸ்திக்லால் மசூதி (ஜகார்த்தா, இந்தோனேசியா)
9. தாஜ் உல் மஸ்ஜித் (போபால், இந்தியா)
10. துஷான்பி கிராண்ட் மசூதி (தஜகிஸ்தான்)
11. ஹசன் 2 மசூதி (கசபிளான்கா, மொராக்கோ)
12. பாட்சாஹி மசூதி (லாகூர், பாகிஸ்தான்)
13. சுல்தான் சலாஹீத்தீன் அப்துல் அஜீஸ் மசூதி (மலேசியா)
14.ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி (அபுதாபி)
15. சலா மசூதி (ஏமன்)
16. பைத்துல் புத்தூ மசூதி (லண்டன்)
17. கானக்ரி கிராண்ட் மசூதி (கினியா)
18. அல் அக்ஸா மசூதி (பாலஸ்தீனம்)
19. மாத்ரா அல் கபீர் மசூதி (இந்தியா)
20. ஜமாக்ரன் மசூதி (இரான்)
* நபிகள் நாயகம் மசூதியில் உள்ள 25000 தொழுகை விரிப்பு கம்பளங்கள் தினசரி பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 500 கம்பளங்கள் நான்கு முறை வேக்கும் கிளீனரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மசூதியின் சுற்றுச்சூழலை கிருமி நீக்கம் செய்ய 450 லிட்டர் கிருமி நாசினி திரவமும் 250 லிட்டர் ரோஜா நீரும் பயன்படுத்தப்படுகின்றன.
* மதீனாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
1 ஏழு மசூதிகள் - மதீனாவில் உள்ள ஏழு மசூதிகள் சேலா மலையின் அடிவாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய மசூதிகளின் தொகுப்பாக அமைந்துள்ளன.
இந்த மசூதிகள் கிபி 627ல் நடந்த கஸ்வத் அல் கந்தக் எனும் அகழிப் போரின் போது கட்டப்பட்டவை.
உமையத் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்தத் தளங்கள் தொடக்கக்கால முஸ்லிம் சமூகத்தின் மீள்திறனைப் பிரதிபலிக்கின்றன.
ஏழு மசூதிகள் என சொல்லப்பட்டாலும் கணக்கில் ஆறு மசூதிகள் தான் வரும்.
* அல் ஃபத் மசூதி -நபிகள் நாயகம் தலைமையில் குன்றின் மேல் கட்டப்பட்ட மசூதி இது. இந்த மசூதியில் தான் திருக்குர்ஆனின் சூரத்துல் ஃபத் (வெற்றி) அருளப்பட்டது.
* சல்மான் அல்-பார்சி மசூதி - இந்த மசூதிக்கு நகரைச் சுற்றி பாதுகாப்பு அகழி தோண்ட முன்மொழிந்த பாரசீக தோழரின் நினைவாக பெயரிடப்பட்டது.
* அபூபக்கர் அஸ்-சித்தீக் மசூதி- சல்மான் மசூதிக்கு தெற்கு பக்கம் இந்த மசூதி அமைந்துள்ளது. முதல் கலீபா அபூபக்கர் படைகளுக்கு தலைமை தாங்கிய இடம் இது.
* அலி பின் தாயிப் மசூதி - சேலா மலையின் அடிவாரத்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி நபித்தோழர் அலி (ரலி) யின் இருப்பிடத்தை குறிக்கிறது.
* உமர் அல் கத்தாப் மசூதி - அகழிக்கு அருகில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி இரண்டாவது கலீபாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
*பாத்திமா அஸ் ஸஹ்ரா மசூதி- ஆறு மசூதிகளில் மிகச்சிறியது. நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) பெயரால் கட்டப்பட்ட மசூதி இது.
* அரசர் பஹத் மகிமைப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் அச்சகம்
மதீனா புதிய குர்ஆன் அச்சகம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் அச்சிடும் அச்சகம் ஆகும். இந்த அச்சகம் 1982ல் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் 20 மில்லியன் குர்ஆன் பிரதிகளை அச்சிடுகின்றனர். அதன் உரையை 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கவும் செய்கின்றனர். இந்த அச்சக வளாகம் 250000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
உலகெங்கிலும் உள்ள மசூதிகள், அறிஞர்கள், யாத்ரீகர்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு மில்லியன் கணக்கான பிரதிகள் இந்த அச்சகத்தில் இருந்து இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு 3500 பிரதிகள் அச்சிடப்படுகின்றன.
இஸ்லாமிய அறிஞர்களும் உயர் பயிற்சி பெற்ற நிபுணர்களும், பிரதிகள் பைண்டிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு அச்சுப்பிழைகளைத் தடுப்பதற்காக ஒவ்வொரு பிரதியையும் மதிப்பாய்வு செய்கின்றனர். வழக்கமான அரபு உரைகளுக்குக் கூடுதலாக இந்த வளாகம் பல்வேறு நன்கு அறியப்பட்ட ரிவாயாக்களை (ஓதும் பாணிகளை) உருவாக்குகிறது. மற்றும் பார்வையற்றோருக்காக குர்ஆனின் பிரெய்ல் பதிப்புகளையும் அச்சிடுகிறது.
இந்த அச்சகம் குர்ஆன் ஆய்வுகளுக்காக ஓர் இணையதளம் நடத்துகிறது. அத்துடன் பல்வேறு ஓதும் பாணிகளில் மின்னணு குர்ஆன் வடிவங்களையும் உருவாக்கியுள்ளது.
* மதீனாவின் மிகப்பெரிய பேரீச்சம் மரப்பண்ணை - சல்மான் அல் பார்சி தோட்டம்
நபிகள் நாயகம் மசூதியிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த பேரீச்சம்பழ மரப்பண்ணை. நபிகள் நாயகம் அவர்கள் தமது நபித்தோழரை விடுவிக்க உதவுவதற்காக முதல் பேரீச்சம் மரங்களை தாமே நட்ட தோட்டமாக இத்தோட்டம் உள்ளது. இது வரலாற்று ரீதியாக புகழ்பெற்றது.
மற்ற பேரீச்சம்பழ மர பண்ணைகள்.
* அல் அலியா பேரீச்சை தோட்டங்கள்- அஜ்வா பேரீச்சை உற்பத்தி.
* அல் துமூர் பேரீச்சை பண்ணை.
* அல் மதீனா அல் முனவ்வரா பேரீச்சை நிறுவனம்.
* சலே அல் ராஜ்ஹி பேரீச்சை பண்ணை- கின்னஸில் பெயர் உள்ளது. 54,000 ஏக்கர் பரப்பளவு.
* தார் அல் மதீனா அருங்காட்சியகம்
ஹரமைன் தொடர் வண்டி நிலையத்திற்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
* சஃபிய்யா அருங்காட்சியகம்
* மதீனா ஊடக அருங்காட்சியகம்
* சையதா பாத்திமா பின்த் அல் ஹுசைன் இல்லம்
நபிகள் நாயகத்தின் பேத்தியால் கட்டப்பட்ட இவ்விடம் பழமையான கிணற்றைக் கொண்டுள்ளது.
நபிகள் நாயகம் மசூதிக்கு மேற்கே இரண்டரை கிலோமீட்டர் தொலைவிலும் அல்-அன்ப்ரியா சாலைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
*உஹத் மலையும் உஹத் தியாகிகள் கல்லறைகளும். ( உஹத் மலை 3000 அடி உயரம் கொண்டது)
நபிகள் நாயகம் மசூதிக்கு வடக்கே 5கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. கிபி 625 ஆம் ஆண்டு இந்த நடந்த உஹத் போரில் வீரமரணமடைந்த 70 சஹாபாக்களின் இறுதி ஓய்விடம் இங்கு தான் உள்ளது. இப்பகுதி இஸ்லாமிய வரலாறு மற்றும் ஸியாரத் (தியானப் பயணம்) ஆகியவற்றின் மையப்புள்ளி.
* ஜபல் ரூமாத் (வில்லாளர்களின் மலை)
உஹத் மலைக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய குன்று இது. போரின் போது நபிகள் நாயகம் இங்குதான் வில்லாளர்களை நிறுத்தினார்.
* சையத் அல் ஷுஹதா மசூதி
உஹத் நபித்தோழர் மயானத்திற்கு அருகில் இம்மசூதி அமைந்துள்ளது.
* அபூபக்கர் மசூதி
நபிகள் நாயகம் மசூதியிலிருந்து 145 மீட்டர் தொலைவில் இம்மசூதி அமைந்துள்ளது. நபிகள் நாயகமும் அவருக்கு பின் கலீபா அபூபக்கரும் பெருநாள் தொழுகையை இங்கு தான் வழி நடத்தினார்கள்.
*மஸ்ஜித் அல் கமாமா(மேகங்களின் மசூதி) நபிகள் நாயகம் மசூதியில் இருந்து 1500 அடி தூரத்தில் இம்மசூதி அமைந்துள்ளது. நபிகள் நாயகம் வறட்சிகாலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்த புனிதத்தலம் இது.
* மஸ்ஜித் அல் சுக்யா- சுன்னி மசூதி. கிபி 624 மார்ச் பத்ரு போருக்கு நபிகள் நாயகம் செல்லும் வழியில் இந்த இடத்தில் தங்கி மதீனா மக்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தார்கள்.
* மஸ்ஜித் குபா - இஸ்லாத்தின் முதல் மசூதி.
* மஸ்ஜித் அல் கிப்லதைன் - தொழுகையின் திசையை ஜெருசலேமில் இருந்து மக்காவிற்கு மாற்றுமாறு நபிகள் நாயகத்திற்கு தெய்வீக கட்டளை பிறந்த இடம்.
* மஸ்ஜித் பனீ உனைப் -நோய்வாய்பட்டிருந்த நபி தோழரை நபிகள் நாயகம் பார்க்க வந்த இடம்.
சரி, இசுலாமியத் துணுக்குகளாகப் படித்துக் கொண்டிருந்தால், பயணம் செல்வது எப்போது...?
நபிகள் நாயகம் நபவி மசூதிக்கு உள்ளே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தை முழுமையாக சுற்றிப் பார்க்க, ஜெத்தாவுக்கு கிளம்புவோம்.