ஜெத்தா. 46 லட்சம் ஜனத்தொகை. சவுதி அரேபியாவின் 50 முக்கிய நகரங்களின் ஜனத்தொகையில் இரண்டாவது இடம் வகிக்கிறது ஜெத்தா. சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகை மூன்று கோடியே ஐம்பத்திரெண்டு லட்சம்.
சவுதி அரேபியாவில் மட்டும் 21 இலட்சம் இந்தியர்கள் தனியாகவோ குடும்பத்தினருடனோ பணி செய்து வாழ்கின்றனர்.
ஜெத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் எனும் போது;
* அல் பலத் - யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பவள மாளிகை இது. இதன் அருகே உள்ள கபர்ஸ்தானில் ‘எங்கள் அம்மா ஹவ்வா’ என்கிற பலகை தொங்குகிறது. இந்தக் கல்லறைப் பகுதியில் தான் ஆதம் நபியின் மனைவி ஹவ்வா புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
* மிதக்கும் மசூதி - மாற்றுப் பெயர் ரெஹ்மா மசூதி. வெள்ளை நிறப் பேரழகு. சூரியோதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ இந்த மசூதியைத் தரிசிக்கலாம்.
* அரசர் பகத் நீரூற்று - 1985ல் மன்னர் பகத் இந்த நீரூற்றை நகரத்திற்குப் பரிசளித்தார். செங்கடலுக்கு மேல் 260 மீட்டர் உயரத்திற்கு இந்த நீரூற்று நீரைப் பீய்ச்சி அடிக்கும். உலகத்திலேயே உயரமான நீரூற்று அரசர் பகத் நீரூற்றுதான். இரண்டாவது உயரமான நீரூற்று. சியோலின் உலக கோப்பை நீரூற்று. ஒரு நேரத்தில் 16 டன் கடல் உப்பு நீர், மணிக்கு 375 கிமீ வேகத்தில் காற்றில் பீய்ச்சிடிக்கப்படுகிறது.
* ஓபர் கடற்கரை - ஜெத்தாவின் வடக்கு பகுதி செங்கடலில் அமைந்துள்ளது.
* அல் ஷவால் தீம் பூங்கா - 60000 சதுரமீட்டர் பரப்பளவு. வருடத்திற்கு 10 லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவிற்கு வருகின்றனர்.
நானும் ஆர்னிகாவும் ஜெத்தாவின் ஒரு பிரபல விடுதியின் அறையில் போய்த் தங்கினோம். குளித்தோம். புத்தாடை உடுத்தினோம்.
“ஆர்னிகா நம்ம ஒரிஜினல் திட்டத்ல ஜெத்தா டூர் இல்லவே இல்லையே?”
“ஆமாம். ஜெத்தாவுக்கு பதில் தாயிப் நகரை சுற்றிப் பார்க்கத்தான் நினைத்தோம். நம்ம மகள் ஜாஸ்மின் கூட ஷெகாத் அல் தாயிப் விடுதியில் நமக்காக ஒரு அறை புக் பண்ணினாள். ஒரு நாளைக்கு ரூபாய் 4500/- வாடகை. தாயிப் ஹிஜாஸ் மலையில் அமைந்துள்ள ஒரு ரோஜா நகரம். 900 ரோஜா பண்ணைகள் உள்ளன. அரிதான அத்தர் அங்குதான் தயாரிக்கப்படுகிறது. கேபிள் கார் பயணம் உண்டு. ஒட்டகத் திருவிழாக்களும் உண்டு. ஒவ்வொரு வசந்தக் காலத்திலும் 30 கோடி ரோஜா மலர்கள் அறுவடை செய்யப்பட்டு அத்தர் தயாரிக்கப்படுகின்றன”
“அதெல்லாம் விடு ஆர்னிகா. ஜெத்தாவில் நாம் என்ன பார்க்கப் போகிறோம்?”
“ஜெத்தாவில் நாம் இருக்கப்போவது வெறும் அரை நாள் தான். தெய்பாட் அருங்காட்சியகம் பார்த்துவிட்டு கெய்ரோவுக்கு விமானம் ஏற வேண்டியதுதான்”
“எகிப்தில் நாம் தங்கப் போகும் ஹோட்டல் பெயர் என்ன?”
‘கெய்ரோவின் அப்னான் கெய்ரோ ஏர்போர்ட்டில் தான்!”
“இவன் ஏதோ ஆன்லைன் பிராடு பண்ணப் பார்த்தான் என்று சொன்னாய் அல்லவா ஆர்னிகா?”
“இந்த ஹோட்டலை நம் மகன் நிலாமகன்தான் புக் பண்ணினான். ஆறு நாள் மொத்த வாடகை 17, 000 ரூபாய். இந்த ஹோட்டல்காரன் இடையே இதே ஹோட்டலில் நாம் இன்னொரு அறை புக் பண்ணி இருப்பதாகவும் அதற்கு இன்னொரு 17, 000 அனுப்ப வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பினான். கேன்சல் பண்ணினாலும் 17, 000 ரூபாய் தர வேண்டுமாம். அவனுடன் குறுஞ்செய்தி போர் நடத்தினேன். இரண்டாவது அறையை நாம் புக் பண்ணியதற்கு ஆதாரம் கேட்டேன். நீங்களாகவே டபுள் என்ட்ரி போட்டுக் கொண்டு கூடுதல் பணம் கேட்காதீர்கள். நாங்கள் எழுத்தாளர்கள். உங்கள் நாட்டின் மீது பேரன்பு கொண்ட அபிமானிகள். நாங்கள் உங்களின் விருந்தாளிகளாக வருகிறோம். எங்களை ஏமாற்றலாமா? நாங்கள் மூத்த குடிமக்கள்- என குறுஞ்செய்தியை அனுப்பி அந்த பிராடுகாரனை ஆப் பண்ணினேன்!”
“பேசிப் பேசி மயக்கிடுவ நீ. ஆனா எப்ப கொஞ்சுவ எப்ப கடிப்பன்னு அந்த கடவுளுக்கும் தெரியாது.”
சிரித்தார் ஆர்னிகா.
“எகிப்தில் சுற்றிப் பார்க்க கைடு தேடினாயே.. கிடைச்சாங்களா?”
“நெட்டுல தேடி நாலஞ்சு கைடுகளைப் பிடிச்சுப் பேசினேன். ஒவ்வொருத்தியும் ஒரு நாளைக்கு 10, 000 ரூபா கேட்டாளுக. வேண்டாமப்பா சாமி நாங்களே பாத்துக்கிரம்னு அவங்களைக் கத்தரிச்சு விட்டுட்டேன்!”
“எகிப்து பாதுகாப்பான நாடா?”
“இல்லை!”
“பின்னே?”
“எகிப்தில் தீவிரவாதம் அதிகம். எகிப்தின் பிரதான பயங்கரவாத அச்சுறுத்தல் வடக்கு சினாய் பிராந்தியத்தில் உள்ள ஐஎஸ்ஐஎல்- சினாய் தீபகற்ப அமைப்பிடமிருந்து (ஒரிஜினல் பெயர் அன்சார் பைத் அல் மக்திஸ்) வந்துள்ளது. இந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படைகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சூடுகள் நடத்தியுள்ளனர்”
“ஓஹோ!”
“கிசா பிரமிடுகளைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கூட இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்!”
“அடக்கடவுளே!”
“ஹரகாத் சலாத் மிஸ்ர் எனப்படும் ஹஸ்ம் இயக்கம் தீவிரவாதத் தாக்குதலில் தனி ஆவர்த்தனம் புரிகிறது. எகிப்து இராணுவமும் அமெரிக்கா பயிற்சியுடன் தீவிரவாதிகளை எதிர் கொள்கிறது!”
“பெண் பயணிகளுக்கு எகிப்து பாதுகாப்பானதா?”
“எகிப்து ஆண்கள், பெண்பயணிகளை வாய்வழி கேலி கிண்டல்கள் சீண்டல்கள் செய்வர். வியாபாரிகளும் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டிகளும் பணம் ஏமாற்றுவர். பெண்கள் உடம்பை மூடிசாடி ஆடை உடுத்த வேண்டும். தேவையற்ற பேச்சுகளுக்கு லா சுக்ரன் (வேண்டாம் நன்றி) என சொல்லி நகர வேண்டும். இடது மோதிர விரலில் மோதிரம் அணிந்து ‘நான் திருமணமானவள் எட்டிப் போங்கள்’ என எச்சரிக்கை செய்ய வேண்டும். கண்ட வாகனங்களில் செல்லாமல் உபர் அல்லது கரீம் வாகனங்களில் செல்வது பாதுகாப்பானது!”
“நல்லது!”
“எகிப்துக்கு சுற்றுலா செல்வதற்கு முன் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதாவது எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டும்!”
“எகிப்து பணக்கார நாடா, ஏழைநாடா?”
“எகிப்து இந்தியா மாதிரியே ஒரு கடன்கார நாடு. எகிப்திய கரன்ஸியின் பெயர் எகிப்தியன் பவுண்ட். ஒரு எகிப்திய பவுண்டு 1.92 இந்திய ரூபாய். ஒரு அமெரிக்கன் டாலர் வாங்க 52 எகிப்தியன் பவுண்ட் தேவை”
“ஊப்!”
“எகிப்தில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை மிக அதிகம்.”
“இதற்குக் காரணம்?”
“பெரிய அளவில் வெளிநாட்டுக் கடன், சூயஸ் கால்வாய் வருமானக் குறைவு, தீவிரவாதம், கழுத்தை இறுக்கும் இறக்குமதி. எகிப்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள்!”
“எகிப்தின் வெளிநாட்டுக்கடன் எவ்வளவு?”
“169 பில்லியன் அமெரிக்கன் டாலர்!”
“இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் எவ்வளவு?”
“மயங்கி விழுந்து விடாதே. இந்தியாவின் வெளிநாட்டு கடன் 763 பில்லியன் அமெரிக்க டாலர்!”
“ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகம்!”
“சரி விடு!”
“எகிப்து பிரதானமாக என்ன இறக்குமதி செய்கிறது?”
“கோதுமையும் குரூட் ஆயிலும். எகிப்தில் அவர்களது பவுண்டுக்கு மதிப்பில்லை. அமெரிக்கன் டாலரில்தான் எல்லாப் பரிவர்த்தனைகளும். நான் கூட கையில் ஐயாயிரம் எகிப்தியன் பவுண்டுகளும் ஆயிரம் அமெரிக்கன் டாலர்களும் தான் மாற்றி வைத்திருக்கிறேன்!”
“ஆர்னிகா! எகிப்து தீவிரவாதிகளை வைத்து நீ கல்கண்டில் ‘திகில் ஒத்திகை’ எனும் தொடர்கதை எழுதினாய் அல்லவா?”
“ஆமாம் இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்?”
“எகிப்தில் ஆறு நாட்கள் ஊர் சுற்றிப் பார்த்தல். பாதுகாப்பாக இந்தியா திரும்புவோமா? அல்லது மம்மிபிகேஷன் செய்யப்பட்டு பிரமிடில் புதைக்கப்படுவோமா?”
“லெட்டஸ் ஸி அண்ட் வெயிட்!”
கிளம்பும் நேரத்தில் கோவை அக்பர் டிராவல்ஸின் பிரஜீஷ் அரபு மொழியில் ஒரு தகவலை அனுப்பி இருந்தார்.
அத்துடன் ஆங்கிலத்தில் ஒரு துணைச்செய்தியும் அனுப்பி இருந்தார்.
‘நீங்கள் மெக்காவிற்கு அனுமதிக்கப்படாத டாக்ஸி பயணம் செய்திருக்கிறீர்கள். அபராதம் பத்தாயிரம் ரூபாய் அதனைக் கட்டாமல் நீங்கள் எகிப்துக்குப் போக முடியாது. ஜெத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்!’ எனக்கும் ஆர்னிகாவுக்கும் தலை சுற்றியது