விமானநிலைய வெளிவாசலுக்கு வந்தோம். பத்துப் பதினைந்து டாக்ஸி டிரைவர்கள் சேர்ந்து கும்மியடித்தனர். ஆர்னிகா அவர்களில் ஒரு டிரைவரை தேர்ந்தெடுத்தார். அவர் பார்க்க பழைய ஹிந்தி நடிகர் அம்ஜத்கான் போல இருந்தார். பழுத்த பப்பாளிபழ முகம்.
எகிப்தியர்கள் அரபிக், நுபியன், பேஜா மற்றும் சிவி மொழிகள் பேசுவர். அம்ஜத்கானிடம் ஆங்கிலத்தில் பேசினார் ஆர்னிகா. அவர் அரபியில் பதில் சொன்னார்.
வாடகை பேசி காரில் அமர்ந்தோம்.
டிரைவரின் பெயர் முகமது.
எகிப்தில் ஐந்து நாட்கள் சுற்றிப் பார்க்க வாடகை பேசினார் ஆர்னிகா. வாட்ஸ்அப்பில் அவரது மகள் பேரம் பேசி முடித்தாள்.
மறுநாள் அதிகாலை ஹோட்டல் வாசலுக்கு வந்து விடுவதாக வாக்குரைத்தார் முகமது. ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டுவிட்டுக் கிளம்பினார்.
அப்னான் கெய்ரோ ஏர்போர்ட் விடுதி ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைந்திருந்தது.
வீடாய் இருந்தததை விடுதியாய் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
வரவேற்பறையில் ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்த்த்தும் ஆர்னிகாவின் முகத்தில் பல்ப் எரிந்தது.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையுடன் சமையற்கட்டும் குளிர்சாதனப் பெட்டியும் இணைந்திருந்தன.
காப்பி போட்டுக் குடித்தோம்.
பால்கனிக்கு வந்து கெய்ரோவின் கடை வீதியைப் பறவை பார்வை பார்த்தோம்.
எகிப்திய மக்கள் மூவாயிரம் வருடங்கள் பழைமையான பின்னணியில் இயங்கும் பாரம்பரிய மனிதர்களாக தென்பட்டனர்.
கட்டங்களில் எல்லாம் ஒரு புராதனதன்மை மிளிர்ந்தது.
காலப்பயணம் செய்து நானும் ஆர்னிகாவும் பிரமிடு கட்டப்பட்ட காலத்திற்கு வந்தது போலொரு பிரமை பூத்தது.
எகிப்து என்றதும் இஸ்லாமில் குறிப்பிடும் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன் பற்றியும் மூஸாநபி பற்றியும் நினைவுகள் கிளர்ந்தன.
மறுநாள் காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தோம்.
குளித்தோம்.
புத்தாடை உடுத்தினோம்.
பால்கனியில் எட்டினோம். முகமது வந்திருந்தார். கார் ஹாரனை கீய்ய்கீய்ய் என அடித்தார்.
முகமதின் மகளிடம் அன்றைய தின அட்டவணையைக் கொடுத்திருந்தோம்.
வாட்ஸ் அப் வழி தகவல் பரிமாற்றம்.
காருக்கு போன நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் முகமது!” என்றோம்.
“வஅலைக்கும் ஸலாம்!”
காரை படுஸ்டைலாக ஓட்டினார். வாய்க்குள் எதையோ ராகமாக முணுமுணுத்தார்.
சாலையில் தென்பட்ட எகிப்து ஆண்கள் பருத்தி அல்லது லினனால் செய்யப்பட்ட கலாபேயா அல்லது ஜலாபியா நீண்ட அங்கி அணிந்திருந்தனர்.
அங்கியின் மேல் சிலர் கப்தான் பட்டு கம்பிளி கோட் உடுத்தியிருந்தனர்.
ஒவ்வொரு ஆணும் தகியா எனும் சிறு தொப்பியோ இமாமா என்கிற தலைப்பாகையோ தலையில் மாட்டி இருந்தனர்.
மேற்கத்திய நாகரிகத்தை விரும்பும் எகிப்து பெண்கள் ஜீன்ஸ், நீண்ட கவுன்கள், முழுக்கைசட்டைகள் உடுத்தியிருந்தனர். தலையில் ஹிஜாப்.
பெரும்பாலான பாரம்பரிய எகிப்து பெண்கள் அபாயா அணிந்திருந்தனர்.
கிராமத்து எகிப்து பெண்கள் கலாபேயா அணிந்திருந்தனர்.
முகமது காரை நேராகக் கொண்டு போய் ஒரு ட்ராவல் ஏஜென்ஸி முன் போய் நிறுத்திவிட்டார்.
அவர்கள் பிரமிடைட் சுற்றி ஒட்டகச் சவாரி செய்து காட்டி பெரும் காசைப் பிடுங்குபவர்கள்.
ஏஜென்ஸி ஆள் ஒருவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது.
“நாங்கள் இந்தியாவில் இருந்து வருகிறோம். நாங்கள் எழுத்தாளர்கள். நெட்டில் எல்லாவற்றையும் அலசி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். எங்கள் பர்ஸ் மிகவும் சிறிது. கால்களால் சுற்றுலாத் தளங்களைப் பார்த்து விடுவோம். நேராக எங்களை கிஸா பிரமிடுக்கு முகமதை அழைத்துப் போகச் சொல்!” என்றார் ஆர்னிகா அவனிடம்.
அவன் முகமதை தனியாக அழைத்துப் போய் ஏதோ கூறினான்.
அவ்வளவுதான்…
முகமதின் முகம் மாறிவிட்டது. அதன் பின் நாங்கள் கெய்ரோ விமான நிலையம் திரும்பும் வரை நேர்மையாக நடந்து கொண்டார்.
முதலில் கிஸா பிரமிடுக்குப் போனோம்.
நான் ஆர்னிகாவிடம் கேட்டேன். “பிரமிடு என்றால் என்ன?”
“பிரமிடு என்பது ஒரு முப்பரிமாண வடிவம் அல்லது பிரம்மாண்டமான அமைப்பாகும். இவை அரசக் கல்லறைகள். மரணத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வாழ்வு வரும் என்கிற அடிப்படைதான் பிரமிடுகளின் அடிப்படை. சாய்வான முக்கோண வடிவப் பக்கங்கள் சூரிய கதிர்களைப் போல செயல்பட்டு மன்னனின் ஆன்மா மேலே ஏறிச்சென்று தெய்வங்களுடன் குறிப்பாக சூரியக் கடவுளான ராவுடன் சேர உதவும் வகையில் பிரமிடுகள் வடிவமைக்கப்பட்டன”
“ஓ!”
“பிரமிடுகள். முக்கோணம் சதுரம் ஐங்கோணம் போன்ற பக்கங்களைக் கொண்ட அடிப்பக்கம். அடிப்பகுதியிலிருந்து மேல்நோக்கி செல்லும் தட்டையான முக்கோணப் பக்கங்கள். எல்லா முக்கோணங்களும் சந்திக்கும் மிக உச்சியில் உள்ள ஒற்றைப்புள்ளி…”
“பிரமிடுகள் எந்த வகைப் பொருட்களால் கட்டப்பட்டன?”
“சுண்ணாம்புக் கற்கள், கிரானைட் கற்கள், ஜிப்சம் சாந்து, மண் செங்கற்கள் மற்றும் கருங்கற்கள்!”
பேசிக்கொண்டே வந்த ஆர்னிகா கிஸா பிரமாண்டத்தை லாங் ஷாட்டில் பார்த்து விட்டார்.
குதியாட்டம் கும்மாளம் போட்டார்.
“நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா?”
கவுண்டமணி குரலில் பாடினார் ஆர்னிகா.
கிஸா பிரமாண்ட பிரமிடு 481 அடி உயரமாய் நிமிர்ந்திருந்தது. கிஸா பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் மூத்தது. எகிப்திய மன்னன் பரோ குபுவின் கல்லறை இது. கிமு 2600 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதாவது 4626 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்தப் பிரமிடைக் கட்டி முடிக்க 26 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பிரமிடைக் கட்டியவர் ஹெமினு எனும் கட்டடக்கலை வல்லுநர் என்கிறார்கள். இப்பிரமிடின் அடித்தளம் 756 அடி.
இது ஒரு யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம்.
பிரமிடின் மொத்தக் கொள்ளளவு 92 மில்லியன் கன அடி ஆகும்.
கிஸா பிரமிடு 23 லட்சம் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது.
பிரமிடின் மொத்த எடை 60 லட்சம் டன்.
அரசரின் கல்லறை இருக்கும் இடத்தின் எடை 80 டன்.
இந்த பிரமிடில் மூன்று சேம்பர்கள் உள்ளன.
மன்னர் அறை.
அரசி அறை.
கட்டி முடிக்கப்படாத மூன்றாவது அறை.
பிரமிடைச் சுற்றி ஆயிரக்கணக்கான காஸ்மோ பயணிகள் மொய்த்தனர். பிரமிடைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஸ்கேம் மனிதர்கள் நம் பணத்தைச் சுருட்டி வாய்க்குள் போடுவதிலேயே குறியாக இருந்தனர்.
பிரமிடு பின்னணியில் ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தால் இத்தனை டாலர்.
எகிப்து ஆடை அணிந்து போஸ் கொடுக்க இத்தனை டாலர்.
எதிலும் சிக்காமல் பிரமிடின் நுழைவாசலுக்கு ஏறினோம். பிரமிடின் ஏத்தலக்கா பூத்தலக்கா படிக்கட்டுகளில் ஏறுவது எளிதான காரியமல்ல.
‘பல லட்ச ரூபாய் செலவு பண்ணி பிரமிடு பார்க்க வந்திருக்கிறோம். பிரமிடின் உள்ளும் புறமும் முழுக்க சுற்றி பார்க்காமல் ஊர் திரும்பக் கூடாது’ என்கிற எண்ணத்தில் ஆர்னிகா படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறினார்.
உள்ளே அரையிருட்டு.
காற்று இல்லாத கடும் வெப்பம்.
பலமாக வியர்த்தது.
பிரமிடுக்குள் இருந்த எல்லாப் பொருட்களும் ம்யூசியத்துக்குள் போய் விட்டன. அதனால் உள்ளே அனைத்தும் காலியாக கிடந்தன.
இரண்டு மணி நேரம் உள்ளும் புறமும் பார்த்துவிட்டு காப்ரே பிரமிடு போனோம்.
காப்ரே பிரமிடு 3 பிரமிடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. காப்ரே பிரமிடு இரண்டாவது உயரமானது. இரண்டாவது பெரியது. நான்காம் வம்சத்து பிர்அவ்ன் காப்ரே எனும் அரசனின் கல்லறை தான் இது. இது கிமு 2570-ல் கட்டப்பட்டது.
இந்த பிரமிடின் உச்சியில் வழவழப்பான துரா சுண்ணாம்புக் கற்கள் இருப்பது தனி சிறப்பு. காப்ரே பிரமிடின் ஒரிஜினல் உயரம் 471 அடி தற்சமயம் 448 அடி.
காப்ரே பிரமிடின் அடித்தளம் நீளம் 707 அடி.
இந்த பிரமிடு கிஸா பிரமிடை விட உயரமாக தெரியும். காரணம் இந்த பிரமிடு 33 அடி உயரமான பாறை அடுக்கின் மீது கட்டப் பட்டுள்ளது.
இந்த பிரமிடு பிங்க் நிற கிரானைட் கற்களாலும் துரா சுண்ணாம்பு கற்களாலும் கட்டப்பட்டது.
இந்த பிரமிடை ஜியோவானி பெல்ஸானி எனும் தொல்லியல் நிபுணர் முதன் முதலில் 02.03.1818 அன்று தொல்லியல் ஆய்வு செய்தார்.
காப்ரே பிரமிடுக்கு இரண்டு தனி தனி வடக்கு நுழைவாயில்கள்.
வளாகத்தின் கிழக்கு விளிம்பில் ஸ்பிங்க்ஸ் அமைக்கப் பட்டுள்ளது. பிர்அவ்ன் காப்ரேவின் முகத்தைதான் ஸ்பிங்க்ஸாக வடிவமைத்து உள்ளனர் எனக் கூறுகின்றனர்.
இங்கு பள்ளத்தாக்கு கோவில் ஒன்றும் உண்டு.
ஸ்பிங்க்ஸ் முகத்தை நான் சுற்றிச் சுற்றி வந்தேன். என்னை புடவை ஜாக்கெட்டில் பார்த்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். என்னைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.
தன்னை யாரும் சீண்டவில்லை என ஏங்கினார் ஆர்னிகா.
அடுத்து மெம்பிஸ் போனோம். மெம்பிஸ் பண்டை எகிப்தின் தலைநகரம். ஒருங்கிணைந்த எகிப்து ஆட்சியாளர் மெனெஸால் கிமு 3100ல் இந்த நகரம் நிர்வாகத்தலைநகராக அறிவிக்கப்பட்டது. இங்கு 30 கிமீ நீளமுள்ள கல்லறைத் தோட்டம் உள்ளது. நவீன கெய்ரோவில் இருந்து தெற்கே 24 கிமீ தொலைவில் மிட் ரஹினா கிராமத்தில் மெம்பிஸ் அமைந்துள்ளது.
அடுத்து மென்கர் பிரமிடு போனோம். நான்காம் வம்சத்தின் பிர்அவ்ன் மென்கெரேவிற்காக கட்டப்பட்ட கல்லறையே இப்பிரமிடு. 213 அடி உயரம். கிமு2510ல் கட்டப்பட்டது. பிர்அவ்ன் மென்கரோ திடீர் மரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பிரமிடு மன்னர் ஷெல்செஸ்காப் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
அன்றைய நாளின் கடைசியாக சாக்குரா பிரமிடுக்குப் போனோம். இதனை ஜோசரின் படிக்கட்டுப் பிரமிடு என்பர். எகிப்தின் மிகப் பழமையான பிரமாண்டமான கற்கட்டடம் மற்றும் உலகின் மிகப் பழமையான நினைவுச் சின்னக் கற்கட்டுமானமாகும். கிமு 2700ல் மூன்றாம் வம்சத்தின் பிர்அவ்ன் ஜோசருக்காக இது கட்டப்பட்டது. 200அடி உயரம். ஆறடுக்கு நினைவுச்சின்னம். இம்ஷோடெப்பால் இது வடிவமைக்கப்பட்டது.
இந்த பிரமிடில் பொன்விழா சடங்குகளுக்காக ஹெட்செட் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
செர்டாப் சிறிய மூடப்பட்ட அறை. இருதுளைகள் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ஜோசரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.
ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கங்கள். 28 மீட்டர் ஆழமுள்ள செங்குத்து கிணறு. நீள அறைகள்.
இரவு 8 மணிக்கு விடுதிக்கு திரும்பினோம். நானும் ஆர்னிகாவும் கைகோர்த்துக் கொண்டு கெய்ரோவின் கடைவீதிகளை சுற்றி சுற்றி வந்தோம். இரவு விடியாமல் நீண்டது.