இனி (ய) தமிழ் மொழியே...! - 13
தமிழ் என்று சொல்லுகையில்
குரல்வளை நரம்புகளைக் கொண்டு
வீணை வாசிக்கின்றன தமிழ் ஒலிகள்
ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உள்ள
இறைவனை ஆயிரமாயிரமாய் கூறிட்டுப் புதைத்தால்
தமிழ் கொடிகள் முளைக்கும்
தொப்புள் கொடிகளின் தாயாக
அகத்திணை இயக்குநீரில் பூக்கும் மலர்களைப்
பறித்து செய்த பூச்செண்டு தொகுப்பு
புறத்திணை அறம் பொருள் இன்பம் புரியும்
நீதி நம் மனத்தின் நேர்மை முத்திரைகள்
கற்றுத்தரும் கண்ணிய வகுப்பு
இன்னிசை அளபெடையின் நீட்சி
செவிடுக்கும் இசையின் உயிரைப் பரிசளிக்கும்
அனாதை எனும் சொல் பொருளில்லாதது எனப்
புணர்ச்சி விதிகள் பாடமெடுக்கும் இலக்கண மரத்தடியில்
எழுத்துகள் வேராகிய தமிழ் மரத்தை
வெட்டிப் பார்த்தால், மரத்திலுள்ள வட்டங்களை
எண்ண முடியாது, தமிழின் வயதை அறிய முடியாது
எத்துணை மொழிகள் பாரத மண்ணின்
பாதம் சேர்ந்தாலும் தமிழ் முடிவிலி காலத்தில்
இந்தியாவின் உச்சி முகர்ந்து கிடக்கும்
அகிலத்தின் சிரத்தில் சிறகுள்ள மகுடமாய் பறக்கும்
(இயக்குநீர் - ஹார்மோன், அயிர் - நுண்மணல்)
- செல்வி செ. நாகநந்தினி, பெரியகுளம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.