அன்றும் இன்றும் - 2
அன்று
தெருவெல்லாம் குழந்தைச் சத்தம்
அது இசை தென்றலுக்குக் கொடுத்த முத்தம்
பூமிக்குப் போட்டியாகச் சுற்றிய பம்பரம்
மட்டைப் பந்திற்குத் தாய்ப்பால் தந்த கிட்டிப்புல்
கொலுசு சத்தத்தைப் பிரசவிக்கும் பாண்டி விளையாட்டு
கவிதை வடிவ மனக்கணிதம் பல்லாங்குழி
வாள்வீச்சின் குறும்புக்காரத் தங்கச்சி சொட்டாங்கல்
இவை எளிமை குடிகொண்ட சிறுவர்களின் சொர்க்கம்
மகிழ்ச்சியை உழவு செய்யும் கிரகம்
வெற்றி தோல்வியின் முக்கியத்துவத்தை மொழியின்றி
கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம் இது கோயிலின் பிம்பம்
இன்று
நிகழ்பட ஆட்ட அரங்கத்தில் தொலைந்து போன
குழந்தையின் கண்களிலிருந்து பெற்றோர் முகங்களை
திறன்பேசி கண்ணாடி மறைத்து விட்டது
மௌனமான நாட்டில்
தோல்வியைத் தாங்காத குழந்தையின் பிணம்
தற்கொலை நிலத்தில் முற்றுப்பெறாப் புதினமாய்ப் புதைகிறது
விளையாட்டுகள் அறியாத மதிப்பெண் எந்திரங்கள்
மயிலிறகு போல் புத்தகத்தில் மூடி வைக்கின்றன
இன்பத்தைக் குட்டி போடுமென்ற நம்பிக்கையில்
நாளைய இளைஞர்கள்
இன்பத்தில் நனைவாரோ துன்பத்தில் அணைவாரோ
நாகரீக உலகம் விடை கூறட்டும்.
(நிகழ்பட ஆட்டம் - Video Games, திறன் பேசி - Android Phone)
- செ. நாகநந்தினி, பெரியகுளம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.