வசந்த விடியல் - 16
கீழ்வானம் செவக்க - பரிதி
செங்கதிரை விரிக்க
அழகாய்த்தான் காலை
அனுதினமும் விடியுது!
அனைத்துயிர்க்கும் இன்பம்
நிறைவாய்த்தான் அளிக்குது!
கூட்டில் உறைந்திருக்கும் பறவை
விடியலை வசந்தமாய் நினைக்குது...
ஆனந்தக் கீதம் நாளும் இசைக்குது!
அரும்புகளாய்க் குவிந்திருக்கும் மலர்கள்
விடியலை வசந்தமாய் வரவேற்குது...
வாசனை மலராய் நாளும் மலருது!
பனியாய் உறைந்திருக்கும் நீரோடை
விடியலை வசந்தமாய் ஏற்குது...
தாகந்தீர்க்கும் நதியாய் நாளும் ஓடுது!
கனவில் மூழ்கிடும் மனித இனத்துக்கோ
விடியல் வேம்பாய்க் கசக்குது
நாளும் வசைபாடி வரவேற்குது!
காரணம்-
ஆற்றங்கரையோரம் வீடு கட்டி
நாகரிகம் வளர்த்த மனித இனம் இன்று-
அடுக்குமாடிக் குடியிருப்பில்
நகர நாகரிகம் வளர்க்குது!
இயற்கை உணவை உட்கொண்டு
இளமை குன்றாதிருந்த மனித இனம்
இன்று-
துரித உணவை நாடிச்சென்று
துயரங்களைச் சுமந்து நிற்குது!
மழலையோடு கொஞ்சி மகிழ்ந்த
பொன்னான தருணம் இழந்து
இன்று-
மணிக்கணக்கில் முகநூலில் மூழ்கி
நிம்மதியின்றித் தவிக்குது!
சோலைகள் அமைத்து
'மாதம் மும்மாரி' கண்ட மனித இனம்
இன்று -
சாலைக்களுக்காய் மரங்களை அழித்து
வறண்ட பூமியைச் சுரண்டித்திரிகுது!
'விருந்தும் மருந்தும் மூன்றுநாளென'
வகுத்துரைத்தத் தமிழர் இனம்
மருந்தே ஆயுளுக்கும் உணவாய்
மாற்றி உடலை நாளும் அழிக்குது!
ஊரைக் காக்க எல்லையில்
சாமியை வைத்த மனித இனம்
இன்று -
சாமியைக் காக்க ஆயுதம் ஏந்தி
நிற்கும் நிலைக்கு வந்திருக்குது!
மொத்தத்தில் -
இயற்கையோடு இயைந்து வாழ்ந்து
இன்பம் எய்திய மனித இனம்...
இன்று-
இயற்கையிலிருந்து விலகி நின்று
இயந்திரமயமாய் மாறி நிற்குது!
அதனால்தான்-
விடியலை எதிர்கொள்ள மனித இனம்
மனம் ஏனோ தயங்கி நிக்குது!
விடிந்த பின்னும் விரக்தியில்
தினமும் வெறுப்பாய்த் தானே கழியிது!
இதுவரை பழையன கழிந்து
புதியன ஏற்ற மனிதா!
வசந்தங்களை இழந்து,
கசந்த வாழ்வை
எதிர்கொண்டது போதும்
இனியேனும்-
புதியன கழிந்து பழையன புகுந்து
நாளும் விடியலை
வசந்த விடியலாக்கிடு!
வாழும் நாட்களை வசந்தமாய்
மாற்றப் பழகிடு!
- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய், சென்னை - 48.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.