முதுமையைப் போற்றுவோம்...! - 16
தலைமுறைகள் பல கண்ட
பாட்டன் பாட்டி உறவுகளைத்
'தலைமுறை இடைவெளி'யென
பாரா முகமாய் நடத்திடாமல்
பாசத்துடன் பண்பாய் நடத்தி
பயனுள்ள அனுபவத்தையும்
ஆசிர்வாதத்தையும்
பல மடங்காய்ப் பெற்றிடுவோம்!
இட்டும் தொட்டும் துழாவி
நாம் சிந்திய உணவை
மகிழ்வாய் உண்ட தாய்
முதுமையால் தட்டுத்
தடுமாறிடும் வேளையில்
தாங்கிடப் பழகி
பெரிதுவக்கும் தாய்க்கு
நற்சான்றோனாய்த்
திகழ்ந்திடுவோம்!
குறு குறு நடந்து
நீட்டிய சிறுகரம் பிடித்து
நடத்திய தந்தை
தளர் நடையிடும் முதுமையில்
தாங்கிடும் ஊன்றிகோலாய்
நாளும் நடந்து
செய்ந்நன்றி மறவா
சேயாய் வாழ்ந்திடுவோம்!
ஆயுசுப் பெருகி வாழ
பெற்றோரை மதிக்கப் பழகிடுவோம்!
ஆசியைப் பெற்று மகிழ
முதியோரைப் போற்றி ஒழுகிடுவோம்!
- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய், முடிச்சூர், சென்னை- 48.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.