திமிர்
திமிருக்கு அரசாய் நிமிரும் மானுடம்
திமிறும் ஆங்காரத் திமிங்கிலத்தால் விழுங்கப்படும்.
திமிருக்கு துணையான தினவெடுத்த மூளையால்
நிமிடப் பொழுதிலும் நிர்மூல அபாயம்.
திக்குத்திசை புரியாத சன்னத மனது
அக்கினிக் குளம்பாகி அங்கலாய்த்துக் குளம்பும்.
ஆக்கம் என்றெண்ணி மயக்க நிலையில்
அழிவுப் பாதையில் அடியிட்டு நகரும்.
மறைக்க இயலாத உணர்வுக் கலவை
பறையிடும் வரம்பற்ற வார்த்தைகளாய்
விறைத்த நாக்கால் விழுதாய் நழுவும்.
இறைவது கரும்பல்ல கயமைச் சுவையே.
அதீத திமிர்க் களைப்பில் வீசும்
அர்த்தமற்ற சொற் சவுக்குகள் மனிதனை
அளவின்றி நையப்புடைத்து நல் உறவை
முழம் முழமாய் களற்றி எறியும்.
பணியேன் என்ற குனியாத மனம்
துணிவுக் கம்பத்தால் தூரச் சாய்ந்திடும்.
போதனை கொடுப்பதுபோல் போதனையும் கேட்கலாம்,
தீதினை விலக்கும் சோதனை கலைக்கும்.
குவியும் ஆணவத் தீமிதிப்பில் சுரக்கும்
அமிலம் மனிதனை உமித்து விடும்.
அருமை உடலை நோயாக்கும்.
அடுத்தவர் உறவையும் அறுத்துவிடும்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.