இச்சை வெறி இம்சை
பளிங்கு நீர் கவர்ந்தது
பாதமிட மனம் விழைந்தது.
பதமாய் குளத்தை நெருங்க
பரவிய அசுத்தம் உறுத்தியது.
குளத்தை இறைக்க முனைந்து
குறையை மறந்த நீச்சல்.
நறையாம் போதையில் நனைவு.
கறையை மறந்த பாய்ச்சல்.
மறுபடி குளமிறைத்திட திரை
மறைவால் எழுவான் ஒருவன்.
இப்படியே தானாக ஏமாந்து
செப்படி வித்தைப் புகழிலே
தப்படி எடுப்பதும் தெரியாது
தெப்பமாய் நனைவது மானுடம்.
சப்பறமாயும் நிமிர்ந்து ஒளிர்வார்.
குப்புற வீழ்ந்தும் அழிவார்.
இயக்கம் இமயத்துச் சிவன் நிலை.
இலக்கத் தொகுதியில் முதல் நிலை.
இகழ்வோ, தாழ்வோ அர்த்தமோ இன்றி
இகலோகக் கவனிப்பை ஈர்த்திழுக்க
இச்சை வெறி இராட்சத வேட்டை.
இறகு கோதும் பச்சை நெடி மயக்கம்.
இல்லமெங்கும் திமிரிடும் போதை அச்சச்சோ!
இம்சை தழும்பும் பொம்மலாட்டம் வன்முறையே.
போதி மரத்துப் புத்தரையும் உலகு
போற்றிடும் இயேசு, முகமத், நாயன்மாரை
சோதியான வழிகாட்டியென்று
சேதி சொல்லும் உலகிது – உயர்
நீதி ஒரு சிறகென்று வாழ்வு
வீதியின் சீவஇயக்கத்தில் நிதம்
வாதிட்டு அர்த்தம் காணும் முனைவில்
ஊதிடும் இச்சைவெறி இம்சை வன்முறையே.
- வேதா.இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.