மனித உரிமை!
சிந்தும் சீவகாருண்ணியம், மனிதன்
ஈந்து – பெறும் மானுட உதவி
எந்த வன்முறையும் அற்ற
சொந்தத் தீர்மானம், சுயவாழ்வு,
தொந்தரவற்ற பந்தம் யாவும்
எந்தச் சீவனுக்கும் உரித்தானது.
சுதந்திர மனிதவுரிமை – உயர்
சிந்தனை மகத்தான உரிமை.
நொந்து சுமந்து பெற்று
பாந்தமாய்ப் பேணும் செல்வங்களை
வந்து திருமணம் கொள்வோர்
சுந்தர அனுபவம் தந்து
நந்தவனம் ஆக்காது வாழ்வைப்
பந்தாடும் உறவின் உரிமை
சுதந்திரப் பெண்ணுரிமையா? ஆணுரிமையா?
எவ்வகை மனிதவுரிமை இது?
உத்தமம் வாழ்க்கைக்குத் துணையென்று
ஒத்து வாழ்ந்து மகிழ
பார்த்துப் பதியும் திருமணம்
பத்து நாளில் பாதை விலகி
சொத்துப் பிரித்துப் பணமாக்க
எத்தனிக்கும் திருமணம் ஆகிறது.
புத்தி பேதலிக்கும் பெண்மையால்
பித்தலாட்டமாகிறது மனித உரிமை.
ஆண் பெண்ணை வதைத்தல்
வானளவு பிரசித்த மென்றால்,
பெண் ஆணை வதைப்பது
ஏன் பேசப் படுவதில்லை?
பெண்ணுரிமை யென்று பண்பாடு
கொன்று, வதிவிட உரிமைக்காய்க்
கண்டவனைக் கூடும் உரிமை
பெண்ணுரிமையோ – மனித உரிமையோ?
- வேதா.இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.