காதலர் தினமாமே...!
உலவும் தென்றல் காற்றினிலே இலேசாய்
இலவம் பஞ்சாய் காதல் குமிழிகள்.
உலகக் காற்றில் காதல் முத்தங்கள்
குலவிக் கலக்கிறது காதல் சல்லாபத்தில்.
திலகம் வைக்கும், வாழ்வை வெற்றியாக்கும்.
விலகிவிட்டால் வேதனை தீயாகும்.
கலகம் பண்ணும் நிலைமை தெரியுமா!
உலகத் திருவிழாவாம் காதலர் தினமாமே!
கோழையும் வீரனாவான், கோடீசுவர மனமாகும்.
பாளை விரிவதாய் சுரபிகள் இயங்கிப்
பரவச அழகு உடலில் பாயும்.
இரசிக மனதில் கற்பனை வளர்ந்து
பிரவகிக்கும். உலகம் இனிக்கும். இவை
அரவணைக்கும் காதலிதயங்களின் அம்சங்கள்.
தரவுகள் அமளிப்படுத்திக் கிளுகிளுக்கும்
பெரு நாளும் காதலர் தினம்தானே!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.