மூதூர் முத்தே...!

குடும்பத்தின் சுமை போக்க
குதூகலத்தை தினம் சேர்க்க
சவூதிக்குப் போனாயே இளஞ்சிட்டே
சடலமாய் ஆனாயே சிறு மொட்டே!
பதினெட்டும் நிரம்பாத
பருவ வயதில் நீ
பாலைவனத்தில் கால் பதித்தாய்..
வருடங்கள் சில கழிந்து
வாழ்க்கை தனை இழந்து
கைதியாய் சிறையில் தீ மிதித்தாய்!
பச்சிளம் குழந்தைக்கு
பாலைப் புகட்டப் போய்
பாவியாக நீ கணிக்கப்பட்டாய்...
"கொல்லவில்லை நம்புங்கள்"
எனக் கதறிச் சொன்ன போதும்
கொலை செய்ததாகவே பழிக்கப்பட்டாய்!
வெளிநாடு என சென்று
வெளிவாரியாகப் படித்து
பட்டங்கள் பெற்றவர்கள் பலர் இருக்க...
ஓட்டைக் குடிசைக்கு
ஓடு போடப் போய் - நீ
கொலைகாரியான நிலையை ஏதுரைக்க?
குடும்ப நிலை சீர் செய்ய
குமரியாகப் போன நீ
குழந்தையைக் கொண்டிருப்பாயா?
இல்லை...
மனதால்தான் எண்ணியிருப்பாயா?
வருமானம் வேண்டாமே – உன்
வருகைக்காய் காத்திருந்தோம்...
பெற்றோரும் நாமும்தான்
நீ வரும்வரை பார்த்திருந்தோம்!
வல்லோனின் தீர்ப்பு
வலுவாக ஆன பின்பு
வையகத்தில் அதைத் தடுப்பார்
யாருண்டு? - ஆனால்...
பல பெண்கள் வெளிநாடு
பயணிப்பதைத் தடுத்த உனக்கு
சரித்திரத்தில் அழியாத பேருண்டு!
ரிஸானா..!
சுவர்க்கத்தில் உனக்குண்டு
மேலான அந்தஸ்து...
அனைவரும் மன்றாடுகிறோம்
உனக்காக துஆக் கேட்டு!!!
- தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.