ஈழம் தந்த இன்பம்!
வானத்தை ரசிப்பது தனி இன்பம்.
வாடிக்கை அன்று சின்ன மனதுக்கு.
வேடிக்கை இன்றும் என் மனதுக்கு.
விண் மீன்களை எண்ணித் திணறுவது,
விண் மீன்களில் பெரியது எது,
கண்ணருகே தெரிவது எதுவென
கண் மீன்கள் கருத்தாகக் கணக்கிடும்,
கழுத்தில் நோவு வரும் வரைக்கும்.
மனதில் என் கற்பனைத் தூரிகை.
மென் நீல வானம் திரை.
முதலில் கண்கள் தேடி ஓடும்,
பதமான பஞ்சு மேகத்தை நாடும்.
நிலாப்பெண் குளிக்கும் நீலத் தடாகம்.
நீந்திப் பொங்கும் சவர்க்கார நுரையும்,
முன்னேறி வரும் காற்று மெத்தைகள்.
நன்றாய் அமர்ந்த நாய்க்குட்டி அதன்மேல்.
நாய்க்குட்டி மாற அர்ச்சுனன் தேர்,
பாய்கின்ற குதிரையில் பிணைந்த தேர்
தேய்ந்து மறைய நீலத்திரை – பின்னர்
நேர்த்தியான ஒரு சோடிப் பூனை.
வார்க்கும் கற்பனைக்கு இல்லை இணை.
கற்பனை வளர வளர பஞ்சுமேகம்
சொற்பமின்றிப் பெருக்கம் அமோகம்!
வான நீலம் மறைத்தது வெண்மேகம்.
வந்தது அங்கு ஒரு வட்டக்குளம்.
வளர்ந்து பெரிதாய் நீண்டது குளம்.
எழுந்தார் அங்கொரு தாடித் தாத்தா.
விழுந்தார் அந்த நீளக் குளத்தில்.
எழுந்தார் வாயு பகவான் வேகமாக.
கோலக் கற்பனைக்கு வந்தது முடிவு.
ஈழத்தில் வந்தது! என்ன இன்பமது!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.