குறிப்பான அனுபவமிது!
(இ) லாவகமான இதயத்து
(இ) லயம் தவறாது நாளும்.
(இ) லப் டப் தாளத்துடன்
(இ) லாவண்ய வாழ்வாகும்.
(இ) லகானை இழுத்தாற் போல்
(இ) லயம் தவறியது.
(இ) லப்டப் தாளம்
லபக்கென்று நின்றது.
தேவலோகம் இல்லை.
தேவர்களும் இல்லை.
தேவாராதனையையும் நான்
தேடவுமில்லை எங்கும்.
ஆழ்ந்த தூக்கத்தால்
அமைதியோடு விழித்து
‘அட! தூங்கிவிட்டேனே’ என்றேன்.
‘ ஆமாம்! தூங்கிவிட்டாய்...’
வெண்ணிற தேவதைகளும்
பசுமை தேவதைகளும்
பசிய புன்னகையால்
பொழிந்தனர் அன்பை.
விலா எலும்பில் மார்பில்
விண்ணென்று வலிக்கிறது.
விடாப்பிடியாய் இதயமழுத்தி
விழிக்க வைத்தார் மண்ணில்.
‘இதயம் துடிக்க மறந்ததா?’
‘நல்ல வேளை தப்பிவிட்டாய்’
‘நோகுதா? பூமிக்கு வந்திட்டாயே!
இல்லாவிடில் சங்கு தானே!
குளிர்ப்பெட்டியிலல்லவா பார்த்து
குமுறிக் குமுறி அழுவோம்...’
குறும் சிரிப்போடு கேட்கிறேன்.
குறிப்பான அனுபவமிது.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.