பிள்ளை மனம் பித்து!

உன் சட்டையும் என் சட்டையும்
ஒரு கொடியில்தான்
போடப்பட்டிருக்கிறது;
அம்மாவும்
அப்பாவும் தான்
உனக்கும் எனக்கும்
வேறு வேறாக இருக்கிறார்கள்...
*****
உனக்கொரு தட்டில் சோறும்
எனக்கொரு தட்டில் சோறும்
இடுகிறார்கள்;
உனக்கிரு முட்டையும்
எனக்கொன்றுமாய்
வைக்கிறார்கள்;
இனிப்போ பழங்களோ
தருகையில் -
உனக்கு மூன்று நான்கு என்றால்தான்
எனக்கு இரண்டோ மூன்றோ
கிடைக்கும்;
நல்லவேளை -
கால்சட்டையையும்
சட்டையையும் உனக்கு
ஒன்றைத்தான் அவர்களால்
போடமுடிந்தது,
இல்லையேல்
எனக்கு ஒரு கால்சட்டையும்
சட்டையுமில்லாமலே என்
காலம் போயிருக்கும்...
*****
பள்ளிப்படிப்பில்
முந்திப் படித்தாலும்
நான் உள்ளூர்தாண்டிப் போனதில்லை;
கேட்டால்
அவன்தான் அவ்வளவுதூரம்
போய் மேல்படிப்புப் படிக்கிறானே
நீயாவது இங்கேயே இரேன்
என்பார்கள்;
எனக்கு அத்தனைப் பெரிய
வருத்தமெல்லாம் எழாது,
என் நண்பர்கள்தான்
கிண்டலடிப்பார்கள்,
அவன் பாரு அப்படியொரு
கல்லூரியில் சேர்ந்து முதுநிலை வகுப்பில்
பொறியியல் படிக்கிறான், இவன் என்னமோ
குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுறான்
என்பார்கள்.
நானென்ன செய்வது
தம்பியின் தப்பென்றால்
அவனைத் திட்டிவிடலாம்,
இது பெற்றோர் வைத்த
ஒரு கண் வெண்ணையும்
மறு கண் சுண்ணாம்புமில்லையா..?
அமிலம் வீசுவது அம்மா அப்பா ஆச்சே
அதனால் தான் வழித்துமட்டுமேப் போடுகிறேன்
உடல்சதை
இதயத்திலிருந்தும் அறுகிறது...
-வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.