வெற்றிக்கனி
வெற்றியாளன் தோற்பதும் தோல்வியாளன் வெல்வதுமாய்
வெற்றி ஒரு சுழலும் சக்கரம்.
வெற்றிக்கனி ஏந்தல், வெற்றித் திலகமிடல்,
வெற்றிவாகை சூடுதலே மனித முயற்சி.
வெற்றிக் கனியை யார் தான்
எற்றி உதைப்பார், கெட்டியாகப் பற்றுவார்.
வெற்றிக்கனியை நோக்கிய இலக்கு
நெற்றிக்கு நேராய் தேடி வராது.
வெற்றி ஊர்வலமாய் வாழ்வை வாசிக்க
ஊற்றான ஆசையால் வெற்றி வராது.
பெற்றிடும் திறமையால் மட்டுமல்ல
வற்றிடாத அயராத முயற்சியாலும் வரும்.
தோற்றமுடை அறிவினால் சமயோசித புத்தியால்
போற்றிப் பாடும் விநாயகர் நிதானமாய்ச்
சுற்றினார் உலக முதல்வராம் பெற்றவரை.
வெற்றிக்கனியை இவரது அறிவினால் பெற்றார்.
இற்றுவிடாத தன்னம்பிக்கை ஆணிவேராக
கற்றதோடு இயற்கை அறிவும் கரம்
பற்றிக் கைகுலுக்க, ஆசைக் கனவு
அற்புத விடாமுயற்சியால் வெற்றிக்கனியாகட்டும்...!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.