வந்துவிட்டது...! வந்து விட்டது...!!

உப்பில்லாது
சோறு,
சோறில்லாமல்
உணவு,
உணவென்றால்
அதிலும் அளவு,
அளவுக்கு கூடுதல்
மருந்து,
மருந்துக்குக் கூட
கொடுக்காத இனிப்பு,
இனிப்பா?
சர்க்கரைக் கூட இல்லாமல்
தேனீர்,
தேனீர் இல்லாமல்
விடிகாலை,
விடிகாலை கூட
இல்லாமல் ஓர்நாள் -
அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்...
*****
பச்சைக் காய்கறி கூட
பல்லிடுக்கில் குத்துமென்று
நீரிழிவு வந்ததும் தான் தெரிகிறது;
உப்புமா தின்னக் கூட
பயம் வரும்னு
இரத்த அழுத்தம் வந்தால்தான் தெரிகிறது;
பலகாரம் கசக்கும்
பாகற்காய் அடைக்குமென்று
கொழுப்பு கூடினால்தான் தெரிகிறது;
அட -
படுப்பதிலும்
எழுவதிலும் கூட
சந்தேகம் வருமென்று'
உள்ளே வலிப்பதிலும்
வலியோடு நடக்கையிலுமே புரிகிறது!
*****
ஒரு மருத்துவர் சொல்கிறார்
பச்சிலை வேண்டாம்
மாத்திரை போடு என்று
வேறொருவர் சொல்கிறார்
அலோபதியா...? ஆபத்து!
நாட்டுமருந்து நல்லதென்று
இன்னொருவர் பார்த்து
எதனா போடு
எதனா தின்னு
தினமும் இங்கு வந்து போ
சோதித்தால் தான் உடம்பு -
எப்படி இருக்கென்று தெரியுமென்கிறார்
வீட்டிற்கு வந்து
தலையில் கைவைத்து
அமர்ந்துகொள்கிறேன்,
யாரைப் பார்ப்பது
எங்கு போவது
எதை நம்பி எதைத் தின்பது;
எல்லோருக்கும் தேவை
பணம்,
பணம் மட்டும்;
பணத்தை பகிர்ந்து
எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
இந்த உயிரையும் கொஞ்சம் விட்டுவிட்டால் தேவலை!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.