புதைகுழி
புதையற் புதைகுழியைப் பூதம் காத்தது!
கதை கதையாம் சாகசக் கதைகள்
இதை அதிசயம், அற்புதமென்று கேட்டு
எதை நம்புவதென்று குளம்பிய சிறுவயது!
மஞ்சு மூடும் வானம் போல
கொஞ்சும் காதல், பாசம், அன்பு
அஞ்சும் வஞ்சம், பொறாமை துன்பமென
கொஞ்சம் அல்ல மனதுள் புதைக்கிறோம்!
பிரபஞ்சத்திலும் மகா பெரிய மனித
நெஞ்சம் ஒரு இரகசியப் புதைகுழி!
கொஞ்சம் கொஞ்சமாய் அது கிளறப்பட்டால்
அஞ்சிடும் சேதம் மனித மனத்திற்கு.
பிஞ்சு வயதுப் பெரும் மனத்தாக்கங்கள்
பூஞ்சணமாகிப் பின்னாளில் பூதாகரமாய் அதிரும்.
நெஞ்சப் புதைகுழியைச் சுத்தமாக்க மனவியலில்
விஞ்சிய மருத்துவர் பெரும்பாடு படுவார்.
ஆரோக்கியம் அற்ற உணவைத் தினம்
நீரேற்றால் வயிறும் ஒரு நோயென்ற
போர் ஏற்றுக் கொள்ளும் புதைகுழியே!
யாரேனும் இதை மறுப்பதற் கில்லை.
புதைகுழியில் புதைக்காத உடலங்கள்
சிதையில் வைத்து எரிக்காத உடலங்கள்
விதைக்கப் பட்டது கிளிநொச்சி, முல்லையில்.
கதையல்ல உண்மை, போரவலமன்றோ இது!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.