தாய்மை
மானிடர்கள் தங்கிவந்த ஆலயமே தாய்மை
மாதவத்தில் கூடிவரும் மாவரமே தாய்மை
தானிடரைத் தாங்கிவரும் பேரன்பே தாய்மை
தாலாட்டின் பாடலிசை தரும்சுகமே தாய்மை
தேனமுதத் தாய்ப்பாலில் அன்பூறும் தாய்மை
தேடாமல் கிடைத்திட்ட செல்வம்தான் தாய்மை
ஊனிலெங்கும் கலந்துவரும் உயிரோசை தாய்மை
உடலுக்குள் உயிருடலை ஏந்திவந்த தாய்மை
இறையவனின் கருணைக்கும் ஒப்புவமை தாய்மை
இன்பமுள்ள சுவனத்தின் முதற்படியே தாய்மை
நிறையுளமாய் வேண்டுவதும் ஈன்றெடுத்த தாய்மை
நீமறந்த போதினிலும் உனைமறவாத் தாய்மை
குறைகளெலாம் மன்னித்துப் போற்றுவதும் தாய்மை
கூப்பிட்ட குரலுக்கு விடைகூறும் தாய்மை
மறைந்திருந்தும் வாழ்த்துவதில் இணையற்ற தாய்மை
மதிப்பளிக்க முதலிடமாய் ஆகியதும் தாய்மை
- "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.