பாதை மாறிய பயணங்கள்
விரலிற்குத் தகுந்த மோதிரம் அணிகிறோம்.
உடலிற்குத் தகுந்த ஆடை உடுக்கிறோம்.
ஆசைக்கு ஏற்ற உணவு உண்கிறோம்.
பயணத்திற்குத் தகுந்த பாதைத் தெரிவும்
பகுத்தறிவாளன் கவனத்தில் வேண்டும்.
போதை மிகுந்த புகழை வேண்டி
பாதை மாறிய பயணத் தெரிவில்
கீதை கூட உதவுவதில்லையே!
பயண அனுமதி இல்லாப் பயணம்,
பயணச் சீட்டுத் தொலைத்த பயணம்,
பகிர்ந்திட மனிதர் இல்லாத பயணம்,
பணம் இல்லாமல் தொடரும் பயணம்,
கவனம் ஆரோக்கியம், அமைதி தொலைக்கும்.
சயனம் தொலைத்து வியாதியூர் அனுப்பும்.
சுயகாலில் தொடங்கும் ஒரு பயணம்
சுகமான நம்பிக்கைப் பயணமாகும்.
வாழ்க்கை ஆனந்தம், அமைதியான இயக்கம்.
வாழ்க்கைப் படகை நாம் செலுத்துவோம்.
வாழ்வைப் படகே செலுத்திடுமானால்
நீள்வது பாதை மாறிய பயணம்.
பாதை மாறிய பயணங்கள் என்றும்
பாதுகாப்பின் உணர்வு தொலைக்கும்.
மேதை மனதாய்த் திட்டம் தீட்டினால்
பாதை மாறி நம் பயணம் ஆகாது.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.